கொலஸ்ட்ரால் சீக்ரெட்ஸ்
எல்.டி.எல்., ஹெச்.டி.எல். கொழுப்பு பற்றி மக்களுக்கு இருக்கும் குழப்பத்தை எளிமையாக விளக்குகிறது, இந்த குட்டி ஸ்டோரி.
நமது உடலை ஒரு சிறிய நகரமாக கற்பனை செய்து கொள்ளுங்கள். இந்த நகரத்தில் மிகப்பெரிய தொல்லை கொடுப்பவராக கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு இருக்கிறார். இவருக்கு சில கூட்டாளிகள் உள்ளனர். அவரது முக்கிய கூட்டாளி – ட்ரைகிளிசரைடு (Triglyceride). தெருக்களில் சுற்றித் திரிவதும், குழப்பத்தை உருவாக்குவதும், சாலைகளை மறிப்பதுமே இவரது வேலை.
இதயம் என்பது இந்த நகரத்தின் மையப்பகுதி. எல்லா சாலைகளும் இதயத்தையே சென்றடைகின்றன. தெருக்களில் இப்படி தொல்லை கொடுப்பவர்கள் பெருகும்போது என்ன நடக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அவர்கள் இதயத்தின் செயல்பாட்டைத் தடுக்க முயற்சிக்கிறார்கள்.
அதேநேரம் உடல் எனும் நகரத்தில் ஒரு காவல் படை பணியில் உள்ளது. அதுதான் ஹெச்.டி.எல். எனப்படும் நல்ல காவலர். இவர் ட்ரைகிளிசரைடு குற்றவாளிகளைப் பிடித்து சிறையில் (கல்லீரல்) அடைக்கிறார். பின்னர் கல்லீரல் அவற்றை கழிவு வெளியேற்றும் அமைப்பு வழியாக உடலிலிருந்து வெளியேற்றுகிறது.
அதேநேரம், இங்கு அதிகாரம் மீது ஆசை கொண்ட எல்.டி.எல். என்ற கெட்ட காவலரும் இருக்கிறார். அவர் குற்றவாளிகளை சிறையிலிருந்து வெளியே எடுத்து மீண்டும் தெருக்களில் அலையவிடுகிறார்.
இவ்வளவுதான் இந்த உடல் நகரம். இங்கு நல்ல காவலரான ஹெச்.டி.எல். குறைந்தால், நகரம் முழுவதும் குழப்பத்தில் மூழ்கிவிடும். இந்த நகரத்தில் யாரும் வாழ முடியாது. எனவே, குற்றவாளிகளைக் குறைத்து, நல்ல காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
இதற்கு எளிய வழி என்னவென்றால் நடக்கத் தொடங்குங்கள். ஒவ்வொரு அடியிலும் ஹெச்.டி.எல். அளவு அதிகரிக்கும்; அதே சமயம் கொலஸ்ட்ரால், ட்ரைகிளிசரைடு மற்றும் எல்.டி.எல். போன்ற குற்றவாளிகள் குறைவார்கள். இதன் மூலம் உடல் எனும் நகரம் புத்துயிர் பெறும்.
நகரத்தின் மையமான இதயம், இந்தக் குற்றவாளிகளால் ஏற்படும் பாதிப்புகளான ஹார்ட் பிளாக் அல்லது இதய அடைப்பு பாதுகாக்கப்படும். உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்போது, மனிதர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். எனவே வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நடக்கத் தொடங்குங்கள்!
நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கவும், கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் சிறந்த வழியாக நடைப்பயிற்சி இருக்கிறது. அதோடு சாப்பாட்டில் உப்பைக் குறைக்க வேண்டும். இனிப்பான பொருட்கள் குறிப்பாக நாட்டுச் சர்க்கரை என்றாலும் குறைக்க வேண்டும். மைதா, பால், பால் சார்ந்த பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சிப்ஸ் முதலான தின்பண்டங்கள், குளிர் பானங்களைக் குறைக்க வேண்டும்.
நல்ல காய்கறிகள், பருப்பு வகைகள், பீன்ஸ் (பயறு வகைகள்), கொட்டை வகைகள் (நட்ஸ்), மரச்செக்கு எண்ணெய்கள், பழங்கள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கொழுப்பை அதிகரிப்பதில் மனநலமும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதாவது முதுமை, கடந்த கால கவலை, இன்றைய குறைகளை மறக்க வேண்டும். இருப்பதைக் கொண்டு நிம்மதியாக வாழும் மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இதற்கு குடும்பம், நல்ல நண்பர்கள், நேர்மறை சிந்தனை உதவுகிறது. நிம்மதியை கடன் வாங்க முடியாது. நாமே உருவாக்கிக்கொள்ள முடியும். அதனால் யாரைப் பார்த்தாலும் புன்னகை செய்யுங்கள்.
கொழுப்பைக் குறைப்பதற்கு வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய சில சிம்பிள் பழக்கவழக்கங்களைப் பார்க்கலாம்.
- உடல்நிலைக்கு ஏற்றவாறு வழக்கமான உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள்
- உடல் எடையைச் சரிபார்த்து கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.
- தாகம் எடுக்கும் வரை காத்திருந்து தண்ணீர் குடிக்காதீர்கள்.
- சோர்வடைந்து ஓய்வு தேவைப்படும் நிலை வரும் வரை காத்திருக்காதீர்கள்.
- உடல்நலக்குறைவு ஏற்படும் வரை மருத்துவப் பரிசோதனைகளைச் செய்யாமல் இருக்காதீர்கள்.
- நேர்மறையாக இருங்கள், சிறந்த நாளைய தினத்திற்காக எப்போதும் நம்பிக்கை கொள்ளுங்கள்.
முதுமை வந்துவிட்டால் கொழுப்பு பிரச்னை அதிகரிக்கவே செய்யும். ஆனால், கட்டுப்பாடான வாழ்க்கை மூலம் கொழுப்பு சிக்கலை சரிசெய்துவிட முடியும் என்று நம்புங்கள்.
