பணம்

பணத்தை மகிழ்ச்சியாகப் பாருங்கள்

’எவ்வளவு பணம் வந்தாலும் பத்தவே மாட்டேங்குது, வர்ற பணமெல்லாம் எங்கே போகுதுன்னு தெரியவே இல்லை’ என்று சலித்துக்கொண்ட மகேந்திரனுக்கு பணம் பற்றி பாடம் எடுக்கத் தொடங்கினார் ஞானகுரு.

’’பணத்தை நீ எப்படி பார்க்கிறாய் என்பதைப் பொறுத்தே பணம் உன்னிடம் நீண்ட நாட்கள் தங்கும். நீ வீட்டில் சாப்பிடும் நேரத்தில் பீரோவுக்கு அடியில் சில ரூபாய் நோட்டுகள் சிதறிக் கிடப்பதைக் கண்டால் என்ன செய்வாய்..?’’

‘’பதறிப் போவேன். நான் பத்திரமாக வைத்திருக்கும் பணத்தை யாரோ வெளியே எடுத்திருக்கிறார்கள் என்று பயந்து உடனே பரிசோதனை செய்வேன்…’’

‘’உனக்கு அந்த பணம் ஏன் பயத்தைக் கொடுக்கிறது… ஏன் சந்தோஷம் தரவில்லை..?’’

‘’அது என்னுடைய பணம்.. நான் மிகவும் கஷ்டப்பட்டு சேமித்து வைத்திருக்கும் பணம், அது காணாமல் போயிருக்கலாம் என்ற சந்தேகத்தால் பயம் வருகிறது. கீழே கிடக்கும் பணத்தைப் பார்த்து யாராவது சந்தோஷப்பட முடியுமா என்ன..?’’

‘’அது இருக்கட்டும். நீ பார்க்கில் வாக்கிங் போய்க்கொண்டு இருக்கிறாய். கீழே ஒரு கட்டு பணம் கிடக்கிறது. அது நிச்சயம் உன்னுடைய பணம் இல்லை. இப்போது அந்த பணத்தைப் பார்த்ததும் உனக்கு என்ன தோன்றும்..’’

‘’அக்கம்பக்கம் யாரும் இருக்கிறார்களா இல்லையா என்பதை முதலில் பார்ப்பேன். யாரும் இல்லையென்றால் எடுத்துக்கொள்வேன். ஆனாலும், அந்த பணத்தை யாரேனும் வேண்டுமென்றே அங்கு போட்டு வைத்திருக்கலாம் அல்லது யாராவது என்னை பணத்துடன் பிடித்துவிடலாம் என்றெல்லாம் பயம் வரும். கையில் பணத்தை எடுத்துவிட்டாலும் என்ன செய்வது என்பதை அந்த நேரத்தில் வரும் யோசனையைப் பொறுத்தே முடிவு செய்வேன்…’’

‘’சரி, உன்னுடைய வங்கிக் கணக்கில் திடீரென 5 லட்சம் ரூபாய் பணம் வரவு என்று காட்டுகிறது. யார் அந்த பணம் போட்டது என்று உனக்குத் தெரியவில்லை. இப்போது அந்த பணம் உனக்கு மகிழ்ச்சி கொடுக்குமா..?’’

‘’கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், யாரோ கணக்கு எண் குழப்பத்தில் எனக்கு அந்த பணத்தைப் போட்டிருக்கலாம் என்றே நினைப்பேன். ஆகவே, எந்த நேரமும் அவர்கள் திரும்பிக்கேட்பதற்கு வாய்ப்பு உண்டு. அதை நான் கொடுத்துத் தான் தீர வேண்டும். எனவே, அந்த பணத்தை செலவழிக்க என்னால் முடியாது. இதுவும் எனக்கு பயமே கொடுக்கும்…’’

‘’இதுவே உன் பிரச்னை. பணத்தைப் பார்த்து பயப்படுகிறாய். அது எந்த நேரமும் உன்னை விட்டு போய்விடும் என்று எண்ணுகிறாய். இந்த எதிர்மறை சிந்தனை இருக்கும் வரையிலும் உன் கையில் பணம் தங்குவதற்கு வாய்ப்பே இல்லை. நீ பணத்தை அன்பாக, சக்தியாக, மகிழ்ச்சியாகப் பார்த்துப் பழகு. பணத்துடன் பேசு. பணத்தின் மீது அன்பு செலுத்து…’’

‘’எப்படி என்று புரியவில்லையே..?’’

‘’உன் வீட்டில் பணம் கீழே கிடப்பதைக் கண்டால் சந்தோஷப்படு. உன்னை மகிழ்ச்சி அடையச் செய்வதற்காக உன் மனைவியோ அல்லது மற்றவர்களோ அதை செய்திருக்கலாம் என்று நினைத்துக்கொள். முதல் வேலையாக அந்த பணத்தை எடுத்து உன் பைக்குள் வைத்துக்கொள்.

அதேபோல் பூங்காவில் பணத்தைப் பார்த்தால் மகிழ்ச்சியாக மாறு. உனக்கு இயற்கை செல்வம் வழங்கியிருப்பதாக கையில் எடுத்துக்கொள். அதேநேரம், இந்த பூங்காவில் யாரேனும் பொருளை தவறவிட்டிருந்தால் என்னிடம் பேசச் சொல்லுங்கள் என்று பாதுகாவலரிடம் குறிப்புகளைக் கொடுத்துவிட்டு பணத்தை வீட்டுக்கு எடுத்துச்செல்லுங்கள். யாரும் கேட்கவில்லை என்றால், அதனை ஒரு நல்ல முதலீட்டில் செலுத்துங்கள்.

வங்கியில் எதிர்பாராது பணம் வரவு வைக்கப்பட்டிருந்தால் நீங்கள் நீண்ட நாட்களாக செய்வதற்கு முயற்சி செய்திருந்த முதலீட்டில் அந்த பணத்தைப் போடுங்கள்….’’

‘’பிறர் பணத்தை எடுத்து முதலீடு செய்வது எப்படி சரியாக இருக்கும்… அது காவல் நிலையத்தில் தானே கொடுக்க வேண்டும்..?’’

‘’உன்னிடம் நிறைய பணம் இருக்கிறது, உனக்கு பணம் இப்போது தேவையில்லை என்றால் அப்படி செய்துவிடலாம். ஆனால், காவல் நிலையத்தில் கொடுக்கப்படும் பணம் மிகச்சரியான நபரிடம் போய்ச் சேர்ந்துவிட்டதா அல்லது காவலர்களால் சுருட்டப்பட்டதா என்றெல்லாம் உனக்கு தெரியப்போவதில்லை. எனவே, சரியான நபர் வந்து கேட்கும் வரையில் அது முதலீடாக இருக்கட்டும். அப்படி ஒருவர் கேட்கும்போது அந்த முதலீட்டுத் தொகையை உடைத்து எடுத்துக்கொடுத்துவிடு. சில நாட்கள் உன்னிடம் தங்கியிருந்தாலும் அந்த பணம் உனக்கு மகிழ்ச்சி தரும், வருமானமும் தரும்…’’

’’ஆனாலும் எனக்கு…’’ இழுத்தார் மகேந்திரன்.

‘’பயப்படுவதே உன் இயல்பாக இருக்கிறது. கையில் பணம் இருந்தால் செலவழிந்துவிடும் என்ற அச்சத்தில் முன்கூட்டியே அத்தனை செலவுகளையும் செய்துவிடுகிறாய். 25ம் தேதி மின்சாரக் கட்டணம் செலுத்தினால் போதும் என்றாலும் 1ம் தேதியே செலுத்திவிடுகிறாய்… இந்த மனப்பான்மையை மாற்று. உன் கையில் அதிக நேரம் பணம் தங்கியிருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படு… அதுவே பணத்தை மகிழ்ச்சியாகப் பார்க்கும் விதம்…’’

‘’எப்படியென்றாலும் மின்சாரக் கட்டணத்தை நான் தானே செலுத்த வேண்டும், அதை முன்கூட்டியே செலுத்துவதால் என்ன பயன்..?’’

‘’25ம் தேதி வரை டயம் இருக்கிறது என்றால் 20ம் தேதி வரையிலாவது தள்ளிப்போடு. அது வரையிலும் உன்னிடம் பணம் இருக்கட்டும். உன் கையில் பணம் இருப்பது உனக்கு தன்னம்பிக்கை கொடுக்கும். மகிழ்ச்சியைக் கொடுக்கும், சக்தியைக் கொடுக்கும். அப்படி பணத்தை ஒரு சக்தியாக, மகிழ்ச்சியாக, தன்னம்பிக்கையாக பார்க்கத் தொடங்கிவிட்டால், உன்னைவிட்டு பணம் வெளியே போகாது, சேர்ந்துகொண்டே இருக்கும்…’’ என்றார் ஞானகுரு.

மகேந்திரன் முகத்தில் தெளிவு பிறந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *