வயதுக்கேற்ப சாப்பிடாதீர்கள், உடலுக்கேற்ப உண்ணுங்கள்..!
- நடிகர் டத்தோ ராதாரவியின் ஆரோக்கிய ரகசியம்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் 400க்கும் அதிகமான படங்களில் நடித்திருப்பவர் நடிகர் ராதா ரவி. தந்தை நடிகவேள் என்றால் இவர், இளையவேள். ஏராளமான விருதுகளைப் பெற்றவர். குறிப்பாக மலேசியாவின் பெருமைமிக்க டத்தோ விருது பெற்ற ஒரே தமிழ் நடிகர்.
டத்தோ ராதாரவி தனது உடல் ஆரோக்கியம் பற்றி இங்கே பேசுகிறார்.
’’இறைவனின் படைப்பிலேயே மனிதன் உயர்ந்த படைப்பு என்றாலும், அவனது உடல் அதை விட ஆச்சரியமான படைப்பு. நமது உடல் நலம் குறித்து யாரிடமும் கேள்வி கேட்க வேண்டியது இல்லை. நம் உடம்பு சொல்வதைக் கேட்டால் போதும். உடல் என்பது ஆச்சரியம் தரும் எந்திரம். அது வெளிப்படுத்தும் அறிகுறிகளையும் எச்சரிக்கைகளையும் நாம் கண்டு கொள்வதில்லை.
அதற்கு எதிராக என்னென்னவோ செய்து உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்கிறோம் உடலின் பாஷையை – மொழியைக் கேட்டால் நம் உடல் நலம் கெட்டுப் போகாது. இதுதான் எனது அனுபவத்தில் நான் புரிந்து கொண்டது.
நமது உடம்புக்கு ஒத்துக் கொள்ளாதவை, நாக்குக்குப் பிடிக்காதவை, வயிறு ஏற்றுக்கொள்ளாதவை என எல்லாவற்றையும் உதாசீனம் செய்கிறோம். அதை புறம் தள்ளிவிட்டு உடலுக்குள் கட்டாயமாக உட்கொள்கிறோம். அதனால் தான் தீயவிளைவுகளைச் சந்திக்கிறோம்.
உணவைப் பொறுத்தவரை நான் எல்லா வகையான உணவுகளையும் சாப்பிடுவேன். எனக்கு எதுவும் விதிவிலக்கு கிடையாது. எனக்கு எல்லா உணவும் ஜீரணம் ஆகிறது. எந்த உணவும் ஒத்துக் கொள்ளவில்லை என்கிற நிலை எனக்குக் கிடையாது. என்னைப் பொறுத்தவரை எனக்கு எதுவுமே பிடிக்காதது, ஏற்றுக் கொள்ளாதது என்று கிடையாது .
சைவம் சாப்பிடும்போது அரிசி சாதத்தைக் குறைவாக எடுத்துக்கொண்டு காய்கறிகள் நிறைய சாப்பிடுவேன். காய்கறிகளில் எனக்குப் பிடிக்காதது என்று எதுவும் இல்லை.
அசைவம் சாப்பிடுவேன். கோழி இறைச்சி விரும்பிச் சாப்பிடுவேன், மாட்டிறைச்சி பன்றி இறைச்சி, கடல் உணவுகள், அனைத்து மீன்களையும் சாப்பிடுவேன். ஆட்டுக்கறியோடு மட்டும் கொஞ்சம் எனக்குத் தகராறு. காரணம் சாப்பிடுவதில் பல்லிடுக்குகளில் சிக்கிக் கொள்வதால் மட்டன் சாப்பிடுவது என்றால் இப்போது எனக்குக் கொஞ்சம் தயக்கம் தான்.
எனக்கு வயது 70 தாண்டி விட்டது. வயதுக்கேற்ற உணவு சாப்பிட வேண்டும் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை .எல்லா உணவுகளும் சாப்பிடுவதை ஏற்றுக் கொள்ளும் வகையில் நம் உடல் இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். உடல் ஆரோக்கியத்திற்கும் வயதிற்கும் முடிச்சு போடக்கூடாது. 30 வயதிலும் நோயாளி போல இருக்கிறார்கள். 80 வயதிலும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.
நான் அசைவமும் சாப்பிடுவேன் என்று சொன்னேன் அல்லவா? ஆனால் என் அப்பா அசைவ உணவுகள் அதிகம் சாப்பிட்டது மாதிரி எனக்குத் தெரியவில்லை .அவர் எப்போதும் தயிர் சாதம் சாப்பிடுவார். தயிர் அவரது விருப்ப உணவுகளில் முதன்மையானது. அவர் அசைவ உணவை விரும்பிச் சாப்பிட்டு நான் பார்த்ததே இல்லை.
என்னிடம் உள்ள ஒரு நல்ல பழக்கம் இரவு எவ்வளவு தாமதமாகத் தூங்கச் சென்றாலும் அதிகாலையில் எழுந்து விடுவேன். அதிகாலை எழுவது என்பது உடலுக்கு நல்லது. அது அந்த நாளை நல்ல விதமாக ஆரம்பிக்கும் ஒரு நல்ல வழி.
உடற்பயிற்சி என்று எடுத்துக் கொண்டால் உடலை வருத்தி வருத்தி உடற்பயிற்சி செய்வதில் எனக்கு ஆர்வமோ ஈடுபாடோ கிடையாது. அதற்காக ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு மற்றவர்களை வேலை வாங்குவது எனக்குப் பிடிப்பதில்லை. நானே சின்னச் சின்ன வேலைகளை நடந்து, நகர்ந்து செய்துகொண்டு இயங்கிக் கொண்டே இருப்பேன்.
அவரவர் அன்றாட வேலைகளைச் செய்தாலே அது ஒரு உடற்பயிற்சி தான். என்னைப் பொறுத்தவரை நான் தொடர்ந்து செய்யும் உடற்பயிற்சி என்றால் அது நடைப்பயிற்சி தான். காலையில் எப்படியும் ஒரு மணி நேரம் நடப்பேன். இப்போதெல்லாம் வெளியில் நடக்கச் செல்வதில்லை. மொட்டை மாடியில் ஒரு மணி நேரம் நடப்பதை என்றும் கைவிடுவதில்லை.
என் உணவுப் பழக்கமும் உடற்பயிற்சியும் நான் வெளியே சென்றாலும் எந்த ஊரில் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டாலும் தடைபடுவதில்லை. நான் என்ன சாப்பிடுவேன் என்று பட குழுவினருக்குத் தெரியும். வெளியூர் என்பதற்காக நான் தொடர்ந்து செய்வது எதையும் தவிர்ப்பதில்லை.
அரிசியில் சுகர் சுகர் என்று கூறி அரிசியை விரோதித்து விட்டார்கள். மெல்ல மெல்ல நம் உணவில் இருந்து அரிசியை விலக்கும் வகையில் செய்து விட்டார்கள். உலகம் பூராவும் அரிசி சாதம் சாப்பிடுகிறார்கள். ஆனால் அதற்கு ஒரு அளவு இருக்கிறது. அமெரிக்காவில் கூட ஆங்கிலேயர்கள் கூட அரிசி சாதம் சாப்பிடுகிறார்கள் .ஆனால் குறைவாகச் சாப்பிடுகிறார்கள்.
நம் மக்களிடம் உள்ள பிரச்சினை எதையும் அன்லிமிட் ஆக உள்ளே தள்ளுவதுதான். வெள்ளைக்காரர்கள் தினசரி அசைவ உணவு, மட்டன், சிக்கன், பீப் சேர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு அளவு இருப்பதால் அவர்களுக்கு ஒன்றும் ஆவதில்லை. நம்மைப்போல் அவர்கள் மூக்கு பிடிக்க வெட்டுவதில்லை.
கோதுமையில் சர்க்கரை இல்லாதது போல் ஒரு தோற்றத்தை செய்திருக்கிறார்கள்.அது ஒரு பிரச்சாரமாகவே நடக்கிறது. நம்மவர்களும் அரிசி சாப்பிடாமல் கோதுமை சாப்பிடுவதை ஒரு நாகரிகம் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் கோதுமையிலும் சர்க்கரை இருக்கிறது.
நான் தினசரி பழைய சாதம் சாப்பிடுகிறேன். அத்துடன் வெங்காயம் சேர்த்துக் கொள்வேன். பழைய சாதம் சாப்பிட்டால் சுகர் என்று பயமுறுத்துவார்கள். அதனால் பெரிதாக சர்க்கரை ஏறவில்லை என்பது எனது அனுபவம்.
எந்தச் சாப்பாடு சாப்பிட்டாலும் வெங்காயம் எனக்குப் பிடிக்கும். ஏதாவது ஒரு வகையில் வெங்காயத்தை அதில் சேர்த்துக் கொள்வேன். சாப்பாட்டைப் பொறுத்தவரை பயந்து பயந்து உடலுக்கு என்ன ஆகும் என்று தயங்கிக்கொண்டு சாப்பிடுவது நம் மனதிற்கும் உடலுக்கும் ஆரோக்கியம் இல்லை என்பது என் கருத்து.
அப்படி அச்சப்பட்டுச் சாப்பிடுவதால், சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் சந்தோஷம் கிடைக்காது. எதையும் ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும்.
உணவுகளை மருந்து மாதிரி மாற்றிக்கொண்டு சாப்பிடக்கூடாது .இதுதான் நம் உடலின் இயல்பு .
மிளகாய் உறைக்கிறது, காரமாக இருக்கிறது என்றால் உஸ் உஸ் என்று அந்தக் காரத்தை ரசித்து தானே சாப்பிடுகிறோம். காரமும் ஒரு ருசி தான். அறுசுவையில் காரமும் ஒன்றுதான். அதுவும் ஒரு ருசி தான். அந்தந்த ருசியையும் அனுபவிக்கத்தான் வேண்டும்.
நம் உடல் இறைவன் இறைவன் கொடுத்த ஒரு அற்புதமான எந்திரம். நம் உடலுக்கு எது ஏற்றுக்கொள்ளவில்லையோ அதை நாம் உண்ணக்கூடாது. உடலின் விருப்பத்தை அறிந்துகொள்ள வேண்டும். உடலுக்கு ஒரு மொழி இருக்கிறது. அதைப் புரிந்துகொள்ள வேண்டும் தனக்குப் பிடிக்காதது சரிப்பட்டு வராதது எது தீங்கு தருவது எது என்று அனைத்தும் அதற்குத் தெரியும்.
எனக்கு ரத்தத்தில் சர்க்கரை அதிகமாக உள்ளது என்பதை என் உடலே தனது அறிகுறிகள் மூலம் காட்டிக் கொடுத்து விடும். ரத்த சோதனை எல்லாம் தேவையே இல்லை. இருந்தாலும் எடுக்கச் சொல்கிறார்கள்.
மது அருந்துகிற போது முதன் முதலில் முகத்தை சுளிக்கிறான். அப்படி என்றால் அது நமக்கு ஏற்றுக் கொள்ளவில்லை என்றுதானே அர்த்தம்? ஆனால் அடுத்த ரவுண்டு அதைப் புறந்தள்ளிவிட்டு உள்ளே தள்ளுகிறான். இது உடலின் விருப்பத்திற்கு எதிரானது தானே?
நான் மது குடிக்கும் பழக்கம் உள்ளவன் தான். அதற்காகக் குடியுங்கள் என்று சொல்ல முடியுமா? குடிக்காதீர்கள் என்றால் இப்போது யார் கேட்கிறார்கள்? அவ்வளவு பேர் மது குடிக்கிறார்கள். எனவே அளவோடு குடியுங்கள் என்று தான் சொல்ல முடியும். நல்ல உணவுகளை அளவுக்கு அதிகம் உண்டாலும் உடலுக்கு கெடுதல் தான் அது மாதிரி மதுவை அளவோடு குடித்தாலும் பயப்பட ஒன்றும் இல்லை. ஆனால் அளவோடு குடிக்க முடியுமா?
நம்முடைய கெட்ட பழக்கம் எதையும் அன்லிமிட் ஆக உள்ளே தள்ளுவதுதானே? இதுதான் பிரச்சினை. ஆங்கிலேயர்கள் மது அருந்துகிறார்கள் நம்மைப் போல் அளவுக்கு அதிகமாகக் குடித்து உளறி ரோட்டில் படுத்துப் புரண்டு பிரச்சினைகள் செய்வதில்லை. எல்லாவற்றிற்கும் ஒரு அளவுகோல் இருக்கிறது.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. அளவோடு குடித்தால் மதுவினாலும் பாதகம் இல்லை.
சிலர் பீர் அருந்துவதை சுலபமாக எடுத்துக் கொள்கிறார்கள். செல்லக் குடி என்கிறார்கள் .மது எந்த வகையில் என்றாலும் உடலுக்குக் கேடு தான். குடிக்கக்கூடாது என்று நான் சொன்னால் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சொல்வதற்கு நீ யார் என்பார்கள்.
நம்மிடம் உள்ள ஒரு பழக்கம் யார் எதைச் சொன்னாலும் கவனிக்க மாட்டார்கள். என்ன சொல்கிறார்கள் என்பதைவிட யார் சொல்கிறார்கள் அதை சொல்வதற்கு நீ யார் என்று கேட்கிற வியாதி நம்மிடையே உள்ளது. சொல்வது என்ன என்பதைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். சொல்வது நீ யார் என்று பார்க்கிற ஒரு மோசமான நிலை இங்கே இருக்கிறது.
இறுதியில் நான் மீண்டும் வலியுறுத்தி சொல்வது இதுதான், வலியுறுத்தக்கூட வேண்டாம், உங்கள் கவனத்தில் வையுங்கள்.
உங்கள் உடல் சொல்வதைக் கேளுங்கள். அதற்கு மாறாக எதையும் செய்யாதீர்கள். இதைத்தான் நான் செய்கிறேன். ஆரோக்கியத்தை அடிப்படையாகப் புரிந்து கொள்ளுதல் இதுதான் என்று நான் நினைக்கிறேன்.
– அருள்செல்வன்