வெ.மரியபெல்சின், மூலிகை ஆராய்ச்சியாளர்
உணவே மருந்து, மருந்தே உணவு என்று வாழ்ந்து வழி காட்டிச் சென்றிருக்கும் நம் முன்னோர் வார்த்தைகளில் இருக்கும் உண்மைகளை விளக்குகிறார் மூலிகை ஆய்வாளர் வெ.மரியபெல்சின்
பசிக்கு உண்ணாமல் ருசிக்கு சாப்பிடத் தொடங்கிய காலத்தில் இருந்து தான், மனிதர்கள் விதவிதமான நோய் தாக்குதலுக்கு ஆளானார்கள். இந்த பிரச்னைக்கு காரணம் மட்டுமல்ல, தீர்வும் உணவு மட்டுமே.
ஆம், `நீரை உண், உணவைக் குடி’ என்பது உணவு இலக்கணம். அதாவது, நீர் அருந்தும்போது வாயில் பாத்திரத்தை வைத்து உறிந்து, வாயில் சற்று நேரம் நீரை வைத்திருந்து, அதன் பின்னரே விழுங்க வேண்டும். வாயிலிருக்கும் தண்ணீரை வாயை மூடிக்கொண்டு கொப்பளிப்பது போன்று செய்து, ஒவ்வொரு மிடறு நீரையும் சில நொடிகள் வைத்திருந்த பிறகே விழுங்க வேண்டும். வாய்க்குள் சில நொடிகளாவது நீர் இருந்தால் மட்டுமே உமிழ்நீருடன் கலந்து செரிமானத்துக்கு உதவி செய்யும். எனவே தாகம் எடுத்ததும் மடக் மடக்கென்று குடிப்பதும், நின்ற நிலையில் அண்ணாந்து நீர் குடிப்பதும் சரியான முறையல்ல

நீரைப் போன்று உணவு உண்பதற்கும் சில வழிமுறைகள் உள்ளன. கைகளால் பிசைந்து கவளம் கவளமாக வாய்க்குள் செலுத்தி உமிழ்நீரை சுரக்க வைத்து, நன்றாக மென்று கூழாக்கிய பிறகே வயிற்றுக்குள் அனுப்ப வேண்டும்.
கவளம் என்பது நம் வாயளவு உணவு. அதாவது இரண்டு உதடுகளும் ஒட்டுமளவு வாயை மூடினால் எந்த அளவு வாய்க்குள் உணவு இருக்கிறதோ அதுதான் ஒரு கவளம். இப்படி ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு கவளமாக ஒரு வேளைக்கு 32 கவளம் சாப்பிட வேண்டும்.
இந்த 32 கவள உணவு சாப்பிடுவதால் வயிறு முழுமையாக நிறையாது. சரியாகச் சொல்வது என்றால் அரை வயிறு மட்டுமே நிரம்பும். சாதாரண மனிதர்களுக்கு ஒரு வேளைக்கு 32 கவள உணவு போதுமானது என்று சித்த இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கவள உணவையும் 32 தடவை வாயில் வைத்து அரைத்து, நன்கு கூழாக்கிய பிறகே உண்ண வேண்டும் என்கிறது உணவியல் இலக்கணம்.
இயற்கையாகவே நம் வாயில் உற்பத்தியாகும் உமிழ்நீருக்கு நாம் உண்ணும் உணவை ஜீரணமாக்கும் தன்மை இருக்கிறது. அதாவது உமிழ்நீர் கலக்காமல் தண்ணீரும் நீரும் வயிற்றுக்குள் செல்லக்கூடாது என்ற அடிப்படை உண்மையை புரிந்துகொண்டு, சாப்பிடுவதற்கு குறைந்தது அரை மணி நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
32 கவள உணவையும் பற்களால் 32 முறை அரைத்து அது திரவமான பிறகே உணவுக்குழாய்க்குள் அனுப்ப வேண்டும். அதிலும் குறிப்பாக அரிசி, காய்கறிகள் போன்ற எளிதில் செரிமானமாகும் உணவுப்பொருள்களை மட்டுமே 32 முறை அரைக்க வேண்டும். மாமிச உணவுகளை 60 அல்லது 70 முறை நன்றாக மென்று கூழாக்க வேண்டியது அவசியம்.
திருமண வீடு, விசேஷங்களின் நேரம் வயிறு புடைக்க சாப்பிடும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. எப்போதோ ஒரு நேரம் தானே சாப்பிடுகிறோம் என்று சமாதானம் செய்துகொள்ளக் கூடாது. ஏனென்றால், திடீரென அளவுக்கு மீறி உணவு இரைப்பைக்குள் செல்லும்போது, ஒட்டுமொத்த ஜீரண செயல்பாடுகளும் தடுமாற்றமும் குழப்பமும் அடைந்துவிடுகிறது.
எனவே எல்லா நேரத்திலும் அரை வயிறு மட்டுமே உணவு மட்டுமே சாப்பிட வேண்டும். கால் வயிறு நீர் அருந்த வேண்டும். அதுவும் உமிழ் நீர் கலந்த நீராக இருக்க வேண்டும். மீதி காலி வயிறு காலியாக இருக்க வேண்டும். இப்படி இருந்தால் ஜீரண உறுப்புகள் மிகவும் எளிதாக பணியாற்றி, உடலின் அத்தனை உறுப்புகளுக்கும் தேவையான சத்துக்களை பிரித்துக் கொடுத்துவிடும். இதில் குளறுபடி ஏற்படுவது காரணமாக உடலியக்கம் சீர் கெடத் தொடங்குகிறது. இது, உடனடியாக எதிரொலிப்பதில்லை என்பதால் மனிதர்கள் சாப்பாட்டு விழிப்புணர்வின்றி இருக்கின்றனர்.
இதையடுத்து ஒரு கேள்வி பெரும்பாலான மனிதர்களுக்கு இருக்கிறது. அதாவது, உணவு சாப்பிட்டதும் நீர் அருந்தலாமா என்பதுதான் அது.
பொதுவாக சாப்பிட்டு முடித்ததும் வயிறு நிரம்பும் வகையில் அரை லிட்டராவது தண்ணீர் குடித்தால் தான் பலருக்கும் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறது. ஆனால், இது சரியல்ல. ஏனென்றால் வயிற்றுக்குள் போன உணவு செரிமானமாக குறைந்தது 2 மணி நேரத்துக்கும் மேல் ஆகும். எனவே, உணவு சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து நீர் அருந்தினால் மட்டுமே ஜீரணத்துக்கு உதவி செய்வதாக இருக்கும். தண்ணீரும் உணவும் கலந்து ஒரே நேரத்தில் வயிற்றுக்குள் செல்லும்போது, உணவிலிருந்து சத்துக்களை கிரகிக்க முடியாமல் போகிறது.
எனவே, உணவு சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழிந்தபிறகே தண்ணீர் குடியுங்கள். இது சிரமம் என்றால், அரை மணி நேரம் கழித்தாவது குடியுங்கள். அதேபோல் உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னரும் நீர் குடிக்க வேண்டாம்.
உடல் ஆரோக்கியத்துக்கு எவ்வளவு நீர் தேவை என்பதிலும் பலர் கருத்து முரண்படுகிறார்கள். இத்தனை லிட்டர் நீர் அருந்த வேண்டும் என்று அவரவர் விருப்பத்திற்கேற்ப அளவுகளை வகுத்துக்கொள்கிறார்கள்.
பொதுவாக மூன்று முதல் நான்கு லிட்டர் நீர் போதுமானது என்று உணவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். அவரவர் உடல் தேவைக்கேற்ப, சுற்றுச்சூழல், பருவகாலம் போன்ற பல்வேறு விஷயங்களையும் கணக்கிட்டே, உடலுக்கு எவ்வளவு நீர் தேவை என்று முடிவெடுக்க வேண்டும்.
பலர் உண்ணும் உணவுப் பொருள்களில் நிறையவே நீர்ச்சத்து இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. எனவே, அவரவர் உணவுப் பழக்கத்தின் அடிப்படையிலும் தேவைக்கேற்ப நீர் அருந்தினால் போதும். பழங்கள் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உண்ணும்போது அவற்றின் மூலமும் உடலுக்கு நீர் கிடைக்கிறது என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே மூன்று லிட்டர் அல்லது நான்கு லிட்டர் அவசியம் என்று கட்டாயப்படுத்தி நீர் அருந்துவது சரியல்ல. அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது சிறுநீரகத்தை ஓவர் டைம் வேலை செய்ய வைத்து சிக்கலாக்கிவிடலாம்.
எந்த உணவு, எந்த நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் கவனிக்க வேண்டும். பொதுவாக அவரவர் பகுதியில் விளையும் உணவுகளையே மக்கள் சாப்பிட்டு வந்தனர். ஆனால், கலாச்சார மாற்றம் காரணமாக உணவுப் பழக்கம் முற்றிலும் மாறிவிட்டது.
இட்லி, இடியாப்பத்தைத் தாண்டி பூரி, சப்பாத்தி, பரோட்டா, பிரியாணி என வெவ்வேறு வகை உணவுகளை சாப்பிட்டு வருகிறோம். பீட்ஸா, பர்கர் என்றெல்லாம் எதையெதையோ விழுங்குகிறார்கள்.
காலையில் வயிறு காலியாக இருக்கும் என்பதால் காலை 7 முதல் 8 மணிக்குள் உணவு எடுத்துக்கொள்வது நல்லது. சீக்கிரம் ஜீரணமாகும் வகையிலான உணவுகளையே பகலில் எடுத்துக்கொள்ள வேண்டும். சிறு தானிய உணவாக இருப்பது மிகவும் நல்லது.
மதியம் 1 மணிக்கு அடுத்த உணவு சாப்பிட வேண்டும். மதிய உணவுக்கு இறைச்சி போன்ற கடினமான உணவுகள் எடுத்துக்கொண்டால், அவை எளிதில் செரிமானமாகும் வகையில் தாம்பூலம் தரிப்பது (வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு) நல்லது. இரவு உணவை 7:30 மணிக்குள் சாப்பிட்டுவிட வேண்டும். இரவுக்கு ஆவியில் வெந்த மிதமான உணவுகளை உண்பது உடல்நலனுக்கு நல்லது.
மனிதனைத் தவிர வேறு எந்த ஜீவராசியும் இரவு உணவு உண்பதில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், மனிதர்கள் மட்டும் தான் இரவில் தொலைக்காட்சி பார்க்கும்போதும், செல்போன் பார்க்கும் போதும் எதையாவது தின்றுகொண்டே இருக்கிறார்கள். எதையாவது சாப்பிட வேண்டும் என்றால் பழங்கள், கடலை மிட்டாய், பனங்கிழங்கு, வறுத்த பயிறு போன்றவை எடுத்துக்கொள்ளலாம். எந்த காரணம் கொண்டும் ஃபாஸ்ட் ஃபுட் உணவு வகையினை வயிற்றுக்குள் கொட்டிவிடாதீர்கள். உடலுக்குப் பொருந்தாத உணவுகளை வயிற்றுக்குள் கொட்டினால், வயிறு குப்பைத் தொட்டியாகிவிடும். பின்னர், அது நோயின் உற்பத்தி ஸ்தலம் ஆகிவிடும்.
எனவே, உணவு பழக்கத்தில் எச்சரிக்கையுடன் இருங்கள். நோயை தள்ளிவைத்து வெல்லுங்கள்.
– தொடர்புக்கு : 9551486617