டாக்டர் எச். வி. ஹண்டே@100
சுயேச்சை வேட்பாளராக 1964-ல் வெற்றி பெற்றுச் தமிழகச் சட்ட மேலவை சென்றவர், ராஜாஜி கட்சியில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர், எம்ஜிஆர் அமைச்சரவையில் இருமுறை அமைச்சராக இருந்தவர், இப்போது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் அன்புக்குப் பாத்திரமாக இருப்பவர் என்கிற பெருமைகள் கொண்ட ஆளுமை பத்மஸ்ரீ டாக்டர் எச்.வி.ஹண்டே
சுகாதாரத் துறை அமைச்சராகச் சிறப்பாகப் பணியாற்றியதற்காக 1985-ல் டாக்டர் பி.சி .ராய் விருது பெற்றவர். இந்தியாவின் முதல் எச்ஐவி எயிட்ஸ் பாதிப்பு பதிவானதை ஆய்வில் கண்டறிந்து 1986-ல் அறிவித்தவர். நவம்பர் 28 இல் தனது 99வது வயதைக் கடந்து, நூற்றாண்டில் அடியெடுத்து வைக்கும் ஹண்டே, தன் உடல் நலம், ஆரோக்கியம் சார்ந்த எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.
”பலரும் எனது ஆரோக்கியம் எப்படி என்று கேள்வி கேட்கிறார்கள். எனது உடல் நலம் சார்ந்து, அதில் ஏதோ ரகசியம் இருப்பதாக நினைத்து பகிர்ந்து கொள்ளுங்கள் என்று சொல்வார்கள். ஆனால் யோசித்துப் பார்த்தால் எந்த ரகசியமும் கிடையாது.

நான் என்றைக்குமே உணவுப் பிரியன் கிடையாது. நான் எப்போதுமே நாக்குக்கு ருசியாக சாப்பிட வேண்டும் என்று நினைக்க மாட்டேன். என் அம்மா செய்யும் உப்புமாவே எனக்கு உலக மகா அமிர்தமாக இருக்கும். அவர் சுட்டுத்தரும் தோசையும் அப்படித்தான். அவை அத்தனை இனிமையாக இருக்கும்; ஆனால் இன்று நான் அதையும் சாப்பிடுவதில்லை. காலையும் இரவும் இட்லி மட்டுமே சாப்பிடுகிறேன்.
எப்போதுமே நான் மிகை உணவு எடுத்துக்கொள்ள மாட்டேன். அளவோடு தான் சாப்பிடுவேன். எனக்கு என்றுமே தொப்பை இருந்தது கிடையாது.
உடற்பயிற்சி!
எனது அப்பா அரசு மருத்துவராக இருந்ததால் பல ஊருக்கு மாற்றலாகிச் சென்று கொண்டே இருந்தார். எனது பள்ளிக்காலத்தில் நாங்கள் ஆந்திராவில் அனந்தபூர் என்ற ஊரில் இருந்தோம். அப்போது அந்த வயதில் உடற்பயிற்சியில் தீவிரமாக இருந்தோம் தினசரி காலையில் 5:30 மணிக்கு எழுந்து தண்டால், பஸ்கி என்று மும்முரமாக உடற்பயிற்சி செய்வோம். அது முடிந்தவுடன் யோகாவில் பல்வேறு ஆசனங்கள் செய்வோம். அதற்குப் பிறகு நடப்போம். அது முடிந்ததும் நீச்சல் அடிப்போம். அதன் பிறகு காலை உணவு.

வகுப்புக்குச் செல்வதற்கு முன்பு இவ்வளவும் முடிந்திருக்கும். எனக்கு இப்போது 99 வயதாகிறது. எனக்கு இந்த வயதில் சர்க்கரை நோய் இல்லை. ரத்த அழுத்தம் இல்லை. கொழுப்பும் (Cholesterol) இல்லை. காரணம், எனது எளிமையான வாழ்க்கை முறை தான். அதற்காக நான் பெரிதாக எதுவும் செய்வதில்லை.

நான் இத்தனை வயது இருப்பதற்கான ரகசியம் எது என்று கேட்கிறார்கள். அப்போது செய்த உடற்பயிற்சி தான் காரணமாக இருக்குமோ என்று நான் இப்போது நினைக்கிறேன். எனக்குத் திருமணமான புதிதில் வயிற்றுத் தசையை நான் இயக்கிக்காட்டியதைப் பார்த்து என் மனைவி ஆச்சரியப்பட்டார். அந்த அளவிற்கு உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தேன். இப்பொழுது அந்த அளவிற்குச் செய்ய முடியவில்லை.
கிளினிக் தொடங்கிய பிறகு நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் இருந்து ஷெனாய் நகருக்கு காரில் வரவேண்டும். ஆனால் நான் பாதி தூரம் தான் காரில் வருவேன். இடையில் இறங்கி, நடந்தே கிளினிக் வருவேன். கார் பின்தொடர்ந்து வரும். இதே போல் இரவு வீடு திரும்பும் போதும் நடக்கும். அது தவிர ஹாடோஸ் சாலையில் உள்ள பூங்கா, காரிலிருந்து இறங்கி ஆங்காங்கே இருக்கும் பூங்காக்களிலும் நடப்பேன். நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல் மூன்றும் நல்லது. எல்லாவற்றையும் விட நடைப் பயிற்சி மிக மிக நல்லது. எளிமையானது; பின்பற்றுவதற்குச் சுலபமானது. அதிகாலையில் மாசுகள் இல்லாத சூழலில் 5:30 மணிக்கு எழுந்து நடை செல்வது நன்மை தரும். தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது வேகமாக நடக்க வேண்டும்.
உணவுத் திட்டம்!
இப்போது காலையில் இரண்டு இட்லி, காபி, மதியம் சிறிதளவு சாதம் காய்கறிகள், இரவு ஒன்றரை இட்லி நிறைய காய்கறிகள், ஒரு வாழைப்பழம் ,நான்கைந்து பப்பாளி துண்டுகள். இரவு உணவுக்கு முன்பு ஒரு டம்ளர் பால்.
இவ்வளவுதான் எனது உணவுத் திட்டம். என்னதான் தேவை இருந்தாலும் இதற்கிடையில் நான் சாப்பிடவே மாட்டேன்.
நானே ஒரு மருத்துவராக இருப்பதால் எந்த உணவைச் சாப்பிட்டாலும் அதில் எவ்வளவு கலோரி இருக்கிறது என்று நான் பார்ப்பேன். ஒரு மனிதனுக்கு 1800 முதல் 2000 கலோரிகள் போதும். உதாரணமாக வாழைப்பழத்துக்கு 100 என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த வகையில் ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் கலோரி அளவு உள்ளது. உருளைக்கிழங்கில் நிறைய இருக்கும். கருணைக்கிழங்கில் குறைவாக இருக்கும். கீரைகளில் குறைவாக இருக்கும். இப்படிப் பார்த்து நாம் அந்த எல்லைக்குள் சாப்பிடுவது நல்லது.

இரவு உணவில் பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். கலோரி அறிந்து வாழைப்பழம், பப்பாளி ,பேரிச்சம்பழம் எடுத்துக் கொள்ளலாம். பப்பாளி மிகவும் நல்லது. அதில் என்சைம் (enzyme) இருக்கும். மலச்சிக்கலுக்கு மருந்தாகவும் இருக்கும். தினசரி ஐந்திலிருந்து பத்து துண்டுகள் சாப்பிடலாம்.
மூன்று விரோதிகள்!
இந்த மனிதர்களை ஆட்டிப்படைக்கும் மூன்று பிரச்சினைகள் சர்க்கரை நோய், கொழுப்பு, ரத்தஅழுத்தம் ஆகியவை.
சர்க்கரை நோய் பெற்றோரிடமிருந்து மரபு வழியாகவும் வரும். தவறான உணவு எடுப்பதாலும் வரும்; மன அழுத்தத்தாலும் வரும். சர்க்கரை என்கிறபோது வெள்ளை நிறப் பொருட்கள் அரிசி, சர்க்கரையில் நிறைந்து இருக்கும். அதே நேரம் அதிகக் கொழுப்பு மாவு உள்ள பொருட்களும் உபரியாகச் சேரும்போது சர்க்கரையாக மாறும்.

பொதுவாகச் சர்க்கரை அளவு, சாப்பிடுவதற்கு முன்பு 80 முதல் 90 வரை இருக்கலாம்; சாப்பிட்ட பிறகு 120 முதல் 130 இருக்கலாம். அதோடு மூன்று மாதத்திற்கு ஒருமுறை HbA1c ; மூன்று மாத சராசரி பார்த்துக்கொள்ள வேண்டும். அது 5 முதல் 6 புள்ளி இருந்தால் அவருக்கு சர்க்கரை நோய் கிடையாது என்று அர்த்தம். 6.5 லிருந்து 7 வரை இருந்தால் முன் சர்க்கரை நோயாளி (Pre Diabetic ) அதாவது சர்க்கரை நோய் வரக்கூடிய ஆபத்து உள்ளவர் என்று அர்த்தம். 7 ஐத்தாண்டி விட்டால், அவர் சர்க்கரை நோயாளி. மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார். அதனால் அன்றாடம் சர்க்கரை அளவைப் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் இந்த மூன்று மாத சராசரியையும் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
ரத்த அழுத்தத்தில் டயஸ்டாலிக் அளவு அதாவது இதயம் ரத்தத்தை வாங்கும்போது 80க்கு கீழ் இருக்க வேண்டும். சிஸ்டாலிக் அதாவது வெளியே விடும்போது 120க்குள் இருப்பது நல்லது. (80 / 120).

கொழுப்பு என்கிற கொலஸ்ட்ராலில் பல வகை உண்டு. கொழுப்புள்ள உணவுகளால் மட்டுமின்றி, மன அழுத்தத்தாலும் கவலையாலும் இது வரும். ஆண்டுக்கு ஒரு முறையாவது இவற்றை பரிசோதனை செய்து கொள்வது நல்லது. கொலஸ்ட்ரால் எல்லைக்குள் இருந்தால் இதய நோயைத் தவிர்க்கலாம்.
உணவு வகையில் கலோரி அறிந்து சாப்பிட வேண்டும். கொழுப்புள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். சைவமோ அசைவமோ எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் கொழுப்பின் அளவை அறிந்து உண்ண வேண்டும். இனிப்புகள் தவிர்க்க வேண்டும். மட்டனில் கொழுப்பு அதிகம். மீன்களில் அவ்வளவு இருக்காது. ஆனால் அதை அவியல் செய்து சாப்பிடலாம். வறுத்தால் கொழுப்பாக மாறிவிடும். வேக வைத்த மீன் போதும்.
மனமும் உடலும்!
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு ‘A sound mind in a Sound body’. இது மனதிற்கும் உடலுக்கும் உள்ள தொடர்பைக் கூறும். மனம் அமைதியாக இருந்தால் தான் உடல் நலமாக இருக்கும்.மனதை கெடுக்கக் கூடியவை மூன்று 1.காமம் 2.குரோதம் 3. ஈர்ஷ்யா.
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் காமத்தை நம் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும். மிதமிஞ்சிய காமம் அவமானத்தையும் ஆபத்தையும் அழிவையும் தேடித் தரும். சுக்ரீவனிடம் அரசுப் பொறுப்பைக் கொடுத்த போது ராமன் காமம் மிகவும் ஆபத்தானது என்று கூறினான். ராமாயணமே மிதமிஞ்சிய காமத்தின் விளைவைச் சொல்வது தானே? இதனால் நாட்டில் எவ்வளவு பெரிய தலைகள் எல்லாம் உருண்டு இருக்கின்றன. அன்றாடம் செய்தித்தாள்களில் அதன் தீய விளைவுகளைச் செய்திகளாகப் பார்க்கிறோம். எனவே பாலுணர்ச்சியைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.
அதேபோல் பகையுணர்ச்சி. கோபத்தில் ஆத்திரத்தில் சாதித்தவன் எவனும் இல்லை. தீய எண்ணங்கள் நம் அனுமதி இல்லாமல் நமக்குள் குடியேறுவதை அனுமதிக்கக் கூடாது. அதனால் எந்தப் பயனும் கிடையாது.

அடுத்ததாக பொறாமை உணர்ச்சி. நம்மை அறியாமல் நமக்குள் அந்த எண்ணம் வந்துவிடும். நமக்குள் பொறாமை ஒரு நோயைப் போல மாறிவிடும். அதனால் எந்தப் பலனும் இல்லை. எவனோ ஒருவன் யாருக்கு மேலேயும் இருக்கத்தான் செய்வான். நம்மை விட வளர்ச்சியில், வெற்றியில் ,புகழில் ஒருவன் வளர்ந்தால் நான் பொறாமைப்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை. அப்படிப் பொறாமைப்பட்டால் நமது உடல் நலம் தான் கெடும். நமக்குக் கடவுள் கொடுத்ததை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சியும் உடல் நலமும்!
ஜிம் சென்று உடற்பயிற்சி செய்வது பற்றி எனக்கு உடன்பாடு கிடையாது. அப்படிக் கடுமையான உடற்பயிற்சி செய்வதால் மட்டும் ஒருவர் ஆரோக்கியமாக இருந்து விட முடியாது . அண்மையில் திடீரென்று மரணம் அடைந்த கன்னட திரைப்பட நடிகர் புனித் ராஜ்குமார், ஜிம் சென்று உடற்பயிற்சி செய்தவர்தான்.அவரது மரணம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.காரணம் என்ன? அவர் தனது கொழுப்பு அளவை கவனிக்க மறந்து விட்டாரா தெரியவில்லை. இதயம் மட்டுமல்ல இதயத்தைச் சுற்றி கொரோனரி ஆர்ட்டரி (Coronory Artery) இருக்கும். அதில் கொழுப்பு ஒட்டிக் கொண்டால் ஆபத்து ஏற்படும்.

கொரோனரி ஆர்ட்டரி இதயத்தின் தசைக்கு ரத்த ஓட்டம் தருகிறது. இதை கவனிக்காமல் விடுவதால் பிரச்சினை வந்து ஆபத்தாக மாறலாம்.
சாப்பாட்டு நேர நிர்ணயம்!
சாப்பிடும் போது அந்த நேரத்தில் கவனமாக இருக்க வேண்டும். எந்த நேரத்துக்கு வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் அதே நேரத்தைத் தொடர்ச்சியாகக் கடைப்பிடிக்க வேண்டும். காலை, மதியம், இரவு ஒரே நேரத்தில் தொடர்ந்து சாப்பிட வேண்டியது மிக முக்கியம். நேரம் தவறிச் சாப்பிடுவது தான் மலச்சிக்கலுக்குக் காரணமாக இருக்கும். காலையில் சரியாக மலம் கழித்து விட்டாலே பாதி நோய் வராது.
பெர்னாட்ஷாவின் 93 வயதில் ஒருவர் அவரிடம், “இத்தனை ஆண்டு ஆரோக்கியமாக இருக்கிறீர்களே, அதன் ரகசியம் என்ன?” என்று கேட்டார்.
அதற்கு அவர், “நான் சரியாக மலம் கழிக்கிறேன். எனக்கு மலச்சிக்கல் இல்லை. எல்லாம் சரியாக இருக்கிறது” என்றார். இது மற்றவர்களுக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. மனச்சிக்கலும் ,மலச்சிக்கலும் இல்லாமல் இருப்பதே நல்ல ஆரோக்கியம்.
தொற்றுநோய் அபாயம்!
எல்லாருக்குமே தொற்று நோய் பற்றிய பயம் இருக்கிறது. டெங்கு, கோவிட் என்று ஒன்று மாறி ஒன்று வந்து கொண்டுதான் இருக்கிறது.
எம்ஜிஆர் ஆட்சியில் நான் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தேன். அப்போது ‘மெட்ராஸ் ஐ’ எனப்படும் கண் நோய் பரவியது. அப்போது சட்டசபையில் எதிர்க்கட்சியில் இருந்த டாக்டர் சவுரிராஜன், சுகாதாரத்துறை அமைச்சரான என்னிடம், “மெட்ராஸ் ஐ பரவுகிறதே ,தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.

அப்போது நான் சொன்னேன், “கைக் குலுக்குவதை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக வணக்கம் என சொல்லி விடுங்கள். பாதி நோய் பரவாது” என்றேன். கை குலுக்குவதன் மூலம்தான் தொற்று நோய்கள் பரவுகின்றன. அதனால்தான் ‘கை கழுவும் தினம்’ என்றெல்லாம் அனுசரிக்கப்படுகிறது. அப்போது மட்டும் அல்ல; எப்போதுமே கை குலுக்குவதை நிறுத்தினாலே பாதியளவு நோய்த் தொற்று வாய்ப்பு தவிர்க்கப்படும். அது நமது கலாச்சாரப் பழக்கம் கிடையாது. வெள்ளைக்காரர்கள் நம்மிடம் பழக்கிவிட்ட ஒன்று. அதனால் “கை குலுக்குவதைக் கைவிடுங்கள்’’.
விலக்க வேண்டியவை!
நல்ல மனம் உள்ளவருக்கு நல்ல உடல் ஆரோக்கியமான உடல் நலம் இருக்கும். மனதில் இருந்து காம உணர்ச்சி, கோப உணர்ச்சி, பொறாமை உணர்ச்சியை விலக்க வேண்டும். இந்த மூன்றையும் அடக்கிக் கொள்ள வேண்டும்.
ஆனால் உடல் ரீதியாக அபான வாயு பிரிதல், சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல் ஆகிய மூன்றையும் அடக்கிக் கொள்ளக்கூடாது.
கண்ணாடி போன்ற மனம் வேண்டும்!

நான் என் மனதில் எதையும் ஒளித்து வைத்துக் கொள்வதில்லை. எனது அபிப்பிராயங்களை யாரிடமும் வெளிப்படையாகக் கூறி விடுவேன். எதையும் மறைத்து வைத்து, மனதில் எடையை ஏற்றிக் கொள்வதில்லை. எம்ஜிஆர், தனது கட்சிக்காரர்கள் பச்சை குத்திக்கொள்ள வேண்டும் என்றார். அப்போது எம்ஜிஆரைத் திட்டிக்கொண்டே பலரும் பச்சை குத்திக்கொண்டார்கள். ஆனால் நான் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அடுத்த நாளே எனது ராஜினாமா கடிதத்தை அவரிடம் கொடுத்தேன்.
மறுநாள் எம்ஜிஆர் எனது கிளினிக்கிற்கு வந்துவிட்டார். “ஏன்? ஏன்? “என்று கேட்டார். “நான் உங்களைக் கட்டாயப்படுத்தவில்லையே” என்றார்.
’’நான் உங்களுக்கு விசுவாசியாக இருப்பேன், ஆனால் அடிமையாக இருக்க முடியாது’’ என்றேன்.
“நான் உங்களைப் போன்றவர்களுக்காக அதைச் சொல்லவில்லை” என்றார். அதற்குப் பிறகு அந்த நிலையில் இருந்தவர் பின்வாங்கி, “அதை வலியுறுத்தவில்லை” என்று அறிக்கை விட்டார். அதேபோல் ஜெயலலிதாவிடமும் மனதில் பட்டதைக் கூறியிருக்கிறேன். ஏன், மோடியிடம்கூட நான் வெளிப்படையாகக் கூறி இருக்கிறேன். என் மனதில் எது நல்லது என்று தோன்றினாலும் அதை, எப்போதும் நான் கூறிவிடுவேன்.
பிரதமர் மோடி 370 வது சட்டத்தை நீக்கிய போது இந்தச் சட்டத்தை 70 ஆண்டுகளுக்கு முன்பு, அம்பேத்காரே நிராகரித்தார் என்பதைச் சொல்லுங்கள் என்று கூறினேன். ஆனால் அவர் அதைச் சொல்லாமல் விட்டுவிட்டார். அதைப் பற்றி நான் அவரிடம் கூறினேன், “நீங்கள் இதைச் சொல்லியிருக்கலாமே” என்று கூறிய பிறகு, அதைப் புரிந்துகொண்டு, அவர் என்னைப் பாராட்டினார்.
எனது மனதில் ஒன்றும் இல்லாததால் தான், அனைவரும் என்னிடம் நண்பர்களாக இருக்கிறார்கள். நான் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவதில்லை. எனவே தான் நான் தேர்தலில் கலைஞரை எதிர்த்து நின்றபோதும், அவரது மகன் ஸ்டாலின் என்னுடன் நட்பாக இருக்கிறார். அரசியல் வேறு; தனிப்பட்ட வாழ்க்கை என்பது வேறு.
தத்துவரீதியாகப் பார்த்தால் இந்த உலகம் தோன்றியதே ஒரு விபத்துதான். .மனிதன் தோன்றியது வாழ்வது எல்லாமே விபத்து தான். எல்லாமே நிலையாமையோடு தான் இருக்கின்றன. நினைத்துப் பார்த்தால் இந்த உலகம் ஒன்றுமே இல்லை.
நமது படைப்பே ஒரு விபத்து தான். கோவிந்த் வல்லப பந்த் என்பவர் பெயர் தெரியுமா? ஒரு காலத்தில் புகழ்பெற்ற உத்திரப்பிரதேச முதலமைச்சர். இன்று யாருக்காவது அவரைத் தெரியுமா? அப்படித்தான் எல்லா மனிதர்களுக்கும் நிகழும்.

உலகத்திலேயே பெரிய குப்பைத் தொட்டி என்பது வரலாறு. காலம் தான் பெரிய துடைப்பம். காலம் எல்லாவற்றையும் துடைத்துக்கொண்டே செல்லும். நமக்கான இடம் என்று என்ன இருக்கிறது என்பது கேள்விக்குறியாகத் தான் இருக்கும்.
மலரும் நினைவுகள்!
இன்று உணவுகள் என்னென்னவோ வந்துள்ளன. விதவித நிறமாய் வருகின்றன ஆனால் என் அம்மா, என் பள்ளிப் பருவத்தில் கஞ்சி போல் ஒன்று கொடுப்பார். காலையில் கைக்குத்தல் அரிசி செய்து ஒரு டம்ளர் கஞ்சி கொடுப்பார். அதுவே எனக்கு அமிர்தமாக இருக்கும். எனக்குச் சமையலும் தெரியும்.
எனது மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு அவர்களின் நோயைக் குணப்படுத்துவதுதான் எனது நோக்கமாக இருக்கும். பணம் இல்லை என்றால் நான் கண்டிப்பு காட்ட மாட்டேன். முடிந்தால் கொடு என்று நான் சிகிச்சை செய்வேன். அப்போது அவர்களிடம், “நான்தான் உங்களுக்கு நல்லது செய்வதற்காக ஒரு கடன் பட்டிருக்கிறேன்” என்று சொல்வேன் .அப்படி என்னிடம் பணம் கொடுக்காமல் சிகிச்சை செய்து பலரும் உயர்ந்த நிலையில் சென்ற பிறகு என்னை வந்து பார்த்திருக்கிறார்கள். 1964-ல் சுயேச்சையாக எம்எல்சி ஆனேன். சென்னை பட்டதாரித் தொகுதியில் என்னை எதிர்த்து நின்ற ஆறு பேரும் டெபாசிட் இழந்தனர். அந்த அளவிற்கு எனக்கு நல்ல பெயர் இருந்தது.
எனது நினைவாற்றல் பற்றிப் பலரும் ஆச்சரியப்படுவார்கள். நான் ராஜாஜி காலத்து ஆள். வெள்ளைக்காரன் ஆட்சியில் பிறந்து வளர்ந்து படித்தேன். எனக்கு’ ஞாபக மறதி’ என்பதெல்லாம் இப்போதும் கிடையாது. என் நினைவாற்றல் பற்றிப் பலரும் வியப்பதுண்டு. இயங்கிக் கொண்டே இருந்தால் எல்லாமே ஞாபகத்தில் இருக்கும். நம் உடலையும் மனதையும் இயக்கத்தில் வைத்திருந்தால் எல்லாமே நினைவில் இருக்கும்.
நாம் எப்போதும் கடந்த காலத்தை நினைத்து ஒன்றும் மாறப்போவது கிடையாது. எனவே கடந்த காலத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. இறுதியாகச் சொன்னால் எந்த ரகசியமும் மனதில் வைத்துக் கொள்ளாமல் இருப்பதே எனது உடல் நலத்தின் ரகசியம் என்று சொல்வேன்.
- அருள்செல்வன்
