பொய்களை நிரூபிக்க சொற்கள் தேவை. உண்மைக்கு மௌனம் போதும்.

மந்திரச்சொல்

ஒருவர் பொய் சொல்லும்போது, அந்தப் பொய்யை உண்மையாகக் காட்டுவதற்கு ரொம்பவே மெனக்கெடுவார். நிறைய பேசுவார். நான் சொல்வது உண்மை என்று சத்தியமே செய்வார். ஏனென்றால், பொய்க்கு தனியாக நிற்கும் வலிமை இருப்பதில்லை. அதனால் ஒரு பொய், இன்னொரு பொய், அதற்குப் பின் விளக்கம் என்று வார்த்தைகளால் ஒரு சுவர் கட்ட வேண்டியிருக்கிறது.

உண்மைக்கு அந்தத் தேவை குறைவு. உண்மை சில நேரங்களில் உடனடியாக நிரூபிக்கப்படாமல் இருக்கலாம். ஆனால்,காலம் நகரும்போது உண்மை சம்பவங்கள், செயல்கள் தன்னை சரியாக வெளிப்படுத்திவிடும்.

அலுவலகத்தில் பணம் காணாமல் போகிறது. ஒருவர் தானாக முந்திக்கொண்டு, ‘நான் அந்த அறைக்கே போகவில்லை, அந்த நேரத்தில் நான் வேறு இடத்தில் இருந்தேன். என்னைப் பற்றி யாரோ தவறாகச் சொல்கிறார்கள். நான் ஏன் இப்படிச் செய்வேன்? நான் அப்படி செய்திருந்தால் இப்படிப் பேசுவேனா?’ என்று நிறைய விளக்க்கம் கொடுக்கிறார் என்றால், அவர் பொய் சொல்கிறார் என்று அர்த்தம். அதேநேரம் மற்றொருவர் அமைதியாக, “ஏதேனும் தடயம் தேடுவோம்..’ என்றால் உண்மை பேசுகிறார் என்று அர்த்தம்.

பொய் சொல்பவர்கள் ஏன் அதிகம் பேசுகிறார்கள் என்றால், தன்னைப் பற்றிய சந்தேகத்தை உடனடியாக மாற்ற வேண்டும் என்ற அழுத்தமே, அவர்களை அதிகமாகப் பேச வைக்கிறது. ஒரு சிறிய பொய்யை மறைப்பதற்கு சொல்லப்பட்ட பத்து வாக்கியங்கள், அடுத்த கேள்விக்கு இன்னொரு பத்து வாக்கியங்களைத் தேவைப்படுத்தலாம். அதனால்தான், பொய்க்கு நினைவாற்றல் தேவை; உண்மைக்கு நினைவூட்டல் தேவையில்லை என்கிறார்கள்.

அதாவது பொய் சொன்னவர், “நான் முன்பு என்ன சொன்னேன்?” என்று நினைவில் வைத்திருக்க வேண்டும். உண்மை சொன்னவருக்கு அந்தச் சுமை இல்லை. உறவுகளில் இது இன்னும் ஆழமானது.

ஒருவர் உங்களைப் பற்றி தவறான கருத்தை மற்றவர்களிடம் பரப்புகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஒவ்வொருவரிடமும் சென்று, அது உண்மையல்ல என்று விளக்குவதற்கு அவசியம் இல்லை. அமைதியாக இருப்பதே அதிக சக்தி வாய்ந்த பதில். ஏனென்றால், உங்களை நீண்ட காலமாக அறிந்தவர்கள் பிறர் பேசுவதை வைத்து உங்களை மதிப்பிட மாட்டார்கள்.

உண்மைக்கு மௌனம் போதும் என்பதன் அர்த்தம் எப்போதும் மௌனமாக இருக்க வேண்டும் என்பதல்ல. சட்டரீதியான குற்றச்சாட்டு, பணம் தொடர்பான பிரச்சினை, வேலை தொடர்பான தவறான புகார், குடும்பத்தில் தீவிரமான குற்றச்சாட்டு இருக்கும்போது உண்மையைத் தெளிவாகச் சொல்ல வேண்டிய நேரம் உண்டு.

மௌனம் என்பது பலவீனம் அல்ல. அதேபோல், அதிகமாகப் பேசுவது குற்றத்தின் அடையாளமும் அல்ல. எப்போது விளக்கம் கொடுக்க வேண்டும், எப்போது விளக்கம் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்பதை அறிவதே முக்கியம்.

பொய் வேகமாக ஓடலாம். வதந்தி அதைவிட வேகமாக ஓடலாம். ஆனால் உண்மை மெதுவாக நடந்தாலும், அது தடயங்களுடன் நடக்கும். அதனால் வாழ்க்கையில் சில நேரங்களில் நம்முடைய மிகச் சிறந்த பதில் ஒரு நீண்ட விளக்கம் அல்ல. ஒரு அமைதியான புன்னகை போதும்.

ஏனென்றால், பொய் தன்னை காப்பாற்ற தினமும் பேச வேண்டும். உண்மை பேசாமலே ஜெயித்துவிடும்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment