ஞானகுரு பதில்
கேள்வி : மாத சம்பளத்துக்கு ஆசைப்படும் இளைஞர்கள், சுயதொழில் செய்ய முன்வராதது ஏன்?
- பி.ராமசாமி, முதுமலை.
ஞானகுரு :
சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் ஜாலியாக ஊர் சுற்றும் மாத சம்பளம் வாங்கும் இளைஞர்களின் குதூகலத்தை கல்லூரி மாணவர்கள் பரவசத்துடன் பார்க்கிறார்கள். சொந்தத் தொழிலில் நேரம், காலமின்றி உழைக்கும் முதலாளிகளையும் பார்க்கிறார்கள். இவர்களை ஒப்பிட்டுப் பார்த்து மாத சம்பளம் என்ற பாதையை தேர்வு செய்கிறார்கள். ஒரு வேலை போனால் வேறு வேலையில் சேர முடியும். ஆனால், சொந்தத் தொழில் நஷ்டமானால் வாழ்க்கை போய்விடும் என்ற அச்சத்தாலும் மாத சம்பளத்தை விரும்புகிறார்கள்.
படிச்சு முடிக்கணும், வேலைக்குப் போகணும், கல்யாணம் முடிக்கணும், பிள்ளை பெத்துக்கணும் என்பதெல்லாம் வரிசையாக நடக்க ஆசைப்படுபவர்களுக்கு மாத சம்பளமே வசதியாக இருக்கிறது. வேலையில் நல்ல அனுபவம் உள்ளவர்களும் ரிஸ்க் எடுக்கத் துணிவதில்லை.
இந்த கூட்டத்தில் தொழில் செய்வதை ஆசையாக, ஆர்வமாக முன்னெடுப்பவர்கள் மிகவும் குறைவு. ஆனால், இவர்கள்தான் அத்தனை மாத சம்பளத்துக்காரர்களுக்கும் வேலை கொடுக்கிறார்கள். தைரியமாக ரிஸ்க் எடுப்பவர்களே தொழிலில் வெற்றி பெறுகிறார்கள். சொகுசுக்கு ஆசைப்படுபவர்கள் வாழ்நாள் முழுவதும் அடிமையாக இருக்கிறார்கள்.
தோல்வியை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பவர்கள் தொழிலதிபர்களாக மாறுகிறார்கள். தோல்விக்கு அஞ்சுபவர்கள் வேலைக்காரர்களாகத் தொடர்கிறார்கள். நீங்கள் யாராக வாழ வேண்டும் என்று முடிவெடுங்கள். உங்கள் தேர்வு எதுவாக இருந்தாலும் அதை பிறருடன் ஒப்பிட்டுப் பாராமல் ஏற்றுக்கொள்ளுங்கள். அதுவே மகிழ்ச்சி.
