பலத்தை யாரிடம் காட்டுகிறோம் என்பதில்தான், நம்முடைய உண்மையான வலிமை இருக்கிறது.

மந்திரச்சொல்

நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். தென்னாப்பிரிக்காவில் நிறவெறி அரசியலை நடத்தி, கருப்பின மக்களை ஒடுக்கிய அதிகார வர்க்கம் அவரை சிறையில் தள்ளி துன்புறுத்தியது. மண்டேலாவின் இளமை, குடும்ப வாழ்க்கை, கனவுகள், சுதந்திரம் என அனைத்தையும் பறித்தனர்.

சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு, மண்டேலாவுக்கு மிகப்பெரிய அதிகாரம் கிடைத்தது. அவர் தென்னாப்பிரிக்காவின் அதிபரானார். அவர் விரும்பியிருந்தால், அவரை 27 ஆண்டுகள் சிறையில் வைத்தவர்களை பழிவாங்கியிருக்கலாம். அவரால் முடியும். அவரிடம் அதிகாரமும் இருந்தது. மக்கள் ஆதரவும் இருந்தது. ஆனால் அவர் அப்படி செய்யவில்லை.

ஏனென்றால், கையில் அதிகாரம் கிடைத்தவுடன் பலவீனமானவர்களை பழிவாங்குவது பலம் அல்ல. பழிவாங்கும் சக்தி இருந்தும், நாட்டின் எதிர்காலத்திற்காக மன்னிப்பைத் தேர்ந்தெடுப்பதுதான் உண்மையான பலம் என்பதை மண்டேலா உணர்ந்திருந்தார்.

இன்று பெரும்பாலோர் தன்னைவிட பலவீனமானவரிடம் மட்டுமே தங்கள் வலிமையைக் காட்டுகிறார்கள். அதாவது மனைவி, குழந்தை, வயதான பெற்றோர், கடைநிலை ஊழியர்களிடம் கோபப்படுகிறார்கள். எச்சரிக்கிறார்கள். தவறு செய்தால் அடிக்கிறார்கள். அவர்கள் எதிர்த்து நிற்க முடியாதவர்கள் அல்லது எதிர்க்க விரும்பாதவர்கள் என்று தெரிந்தும் அவர்களை அதிகாரம் செய்கிறார்கள்.  இது வீரம் அல்ல, கோழைத்தனமான செயல். எதிர்த்து நிற்கும் அளவுக்கு சக்தியுள்ள ஒருவருடன் போராடுவதுதான் உண்மையான பலம்.

ஒரு மேலதிகாரி அவருக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம் கத்துகிறார். சிறிய தவறுக்கும் அவமானப்படுத்துகிறார். அனைவரையும் பயமுறுத்துகிறார் என்றால் அவர் வலிமையானவர் என்று அர்த்தம் அல்ல. உண்மையான வலிமையுள்ள தலைவர், அதிகாரத்தை பலவீனமானவர்களை நசுக்கப் பயன்படுத்த மாட்டார். அவர்களை உயர்த்துவதற்கே பயன்படுத்துவார்.

ஒருவர் உண்மையில் பலமானவர் என்பதை மூன்று செயல்கள் மூலம் அறியலாம்.

  • பலவீனமான நபர், உதவி கேட்கும் நபருக்கு உரிய மதிப்பு கொடுப்பதே பலம்.  
  • அதிகாரம் கிடைத்தவுடன் யாரையும் பழிவாங்காமல் இருப்பதே பலம்.
  • நம்மை கோபப்படுத்துபவரை அடிக்க முடிந்தபோதும், அடிக்காமல் இருப்பதே பலம். பதிலடி கொடுக்க முடிந்தபோதும் அமைதியைத் தேர்வு செய்வது பலம்.

ஒருவரிடம் பணம் இருக்கலாம். அதிகாரம் இருக்கலாம். உடல் பலம் இருக்கலாம். ஆனால் அவற்றையெல்லாம் கட்டுப்படுத்தும் திறன் இல்லையென்றால், அவர் வலிமையானவர் அல்ல. கையில் வாள் இருப்பது பலம் அல்ல, தேவையில்லாத இடத்தில் அதை உறைக்குள் வைத்திருப்பதுதான் பலம். எதிராளியை அழிக்க முடியும் என்பதல்ல பலம். அழிக்க வேண்டிய அவசியம் இல்லாதபோது விட்டுவிடுவதுதான் உயர்ந்த பலம்.

உண்மையான பலம் என்பது மற்றவர்களை பயமுறுத்துவதில் இல்லை. நமது பலத்தை தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதில்தான் இருக்கிறது. அதாவது, தன்னிடம் இருக்கும் சக்தியை அடக்குபவரே உண்மையான பலசாலி.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment