ஞானகுரு பதில்
கேள்வி : அம்மாவுக்கும் மனைவிக்கும் வீட்டில் அடிக்கடி சண்டை நடக்கிறது. இருவர் பேசுவதும் நியாயமாக இருக்கிறது. நான் யார் பக்கம் நிற்க வேண்டும்..?
- சி.அரவிந்த், நாமக்கல்.
ஞானகுரு ;
ஆண்களுக்கு இந்த சந்தேகம் ஒருபோதும் வரவே கூடாது. எல்லா நேரத்திலும் மனைவி பக்கமே ஆண் நிற்க வேண்டும்.
அம்மாவுக்கு பிள்ளையிடம் சண்டை போடுவதற்கும், கேட்டு வாங்குவதற்கும் உரிமை இருக்கிறது. ஆனால், மருமகளிடம் சண்டை போடுவதற்கு எந்த அம்மாவுக்கும் உரிமை இல்லை. திருமணம் முடிந்த பிறகு பிள்ளையிடம் இருந்து விலகி நிற்பது மட்டுமே தாய்க்கு அழகு.
மருமகளைக் கட்டுப்படுத்துவதும், திருத்துவதும் அவருடைய வேலை இல்லை என்பதை அம்மாவுக்குப் புரிய வையுங்கள். மனைவி பக்கம் மட்டுமே மகன் உறுதியாக நிற்பார் என்று தெரியவந்தால், அம்மாக்கள் சண்டை போடாமல் அமைதியாகி விடுவார்கள்.
ஆண் எதற்காக மனைவி பக்கம் நிற்க வேண்டும் தெரியுமா..? மனைவி மட்டுமே ஆணுக்குச் சொந்தமானவர். ஆணை நம்பி வாழ்பவர். ஆனால், அம்மாவுக்கு அப்பா இருக்கிறார், வேறு சில பிள்ளைகளும் இருக்கலாம். எனவே, சண்டை நேரத்தில் மனைவியை விட்டுக்கொடுக்காதீர்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
