மாதவிடாயில் ரத்தக் கட்டிகள்..?

கொஞ்சம் உஷாராக இருங்கள்

பெண்களுக்கு மாதவிலக்கு காலத்தில் எக்கச்சக்க தொந்தரவுகள் வரும். அதில், அதிக அவஸ்தை தரும் ரத்தக் கட்டிகள் பற்றி அறிந்துகொள்வோம்.

ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் வருவது என்பது மாதந்தோறும் இயற்கையாக நிகழும் உடலியல் மாற்றம். ஆனால் அதை வெறும் மூன்று அல்லது ஐந்து நாட்கள் அவஸ்தை என்று மட்டும் நினைத்துவிட முடியாது. அந்த நாட்களில் அவளுடைய உடல், மனம், உணர்வுகள் அனைத்தும் நிறைய தொந்தரவுகளை எதிர்கொள்கின்றன.

முதலில் உடல் வலி, அடிவயிற்றில் இழுக்கும் வலி, இடுப்பில் கனத்த உணர்வு, முதுகுவலி, தொடைகளில் வலி, கால்களில் சோர்வு போன்றவை ஏற்படும். சிலருக்கு அந்த வலி சாதாரணமாக இருக்கும். சிலருக்கு வலியின் தீவிரம் காரணமாக எழுந்து நிற்பதற்கே சிரமமாக இருக்கும். ஆனாலும் பெண்கள் பள்ளி, கல்லூரி, அலுவலகம், வீட்டு வேலை என அன்றாடப் பொறுப்புகளைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கவேண்டிய சூழல் உண்டாகிறது.

உடல் வலியுடன் மனதிலும் இந்த நாட்களில் நிறைய மாற்றங்கள் ஏற்படுவது சகஜம். ஹார்மோன் மாற்றங்களால் எரிச்சல், மன அழுத்தம், காரணமில்லாத சோகம், திடீர் கோபம், கவலை, அதிக உணர்ச்சிவசப்படுதல் போன்றவை ஏற்படலாம். சில பெண்கள் சிறிய விஷயத்திற்கே கண்ணீர் விடலாம். சிலர் யாரிடமும் பேச விரும்பாமல் அமைதியாக இருக்கலாம்.

அதோடு உடல் சோர்வு, தூக்கக் கலக்கம், தலைவலி, குமட்டல், வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல், வயிறு உப்புசம், மார்பகங்களில் வலி, சில உணவுகளை அதிகமாக விரும்புதல் போன்ற அறிகுறிகளும் இருக்கும். இவை ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரே மாதிரியாக இருக்காது, ஒருவருக்கொருவர் மாறுபடும்.

வெளியில் வேலைக்குச் செல்லும் பெண்கள் நீண்ட நேரம் நிற்க வேண்டியிருக்கலாம், கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டியிருக்கலாம். பொதுப் போக்குவரத்தில் பயணிக்க வேண்டியிருக்கலாம். மாணவிகள் வகுப்பறையில் அமர்ந்து படிக்கவும் தேர்வு எழுதவும் அவசியம் ஏற்படலாம். சிலர் விளையாட்டிலும் பங்கேற்க வேண்டியிருக்கும்.

அதனால்தான் மாதவிடாய் காலத்தில் ஒரு பெண்ணுக்கு மிகப் பெரிய மருந்து வலிநிவாரணி மாத்திரை மட்டுமல்ல, அவளைப் புரிந்துகொள்ளும் மனப்பான்மையுள்ள குடும்பத்தினர் அமைவதுதான். இந்த நிலையில் இருக்கும் பெண்களின் அவஸ்தையைப் புரிந்துகொள்ளாமல், சோம்பேறித்தனம், ஓவர் ஆக்டிங் என்றெல்லாம் பேசாமல் ஓய்வு கொடுப்பதும், ஆதரவாக பேசுவதும் மிகவும் முக்கியம்.  

ரத்தக் கட்டிகள்

இந்த காலகட்டத்தில் சில பெண்களுக்கு மாதவிடாய் ரத்தத்தில் கட்டிகள் தென்படுவதுண்டு. இது, பெண்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். வெளியே சொல்லவும் முடியாமல், சொல்லாமல் இருக்கவும் முடியாமல் தடுமாறுவார்கள். உண்மையில் எல்லா நேரங்களிலும் ரத்தகட்டி என்பது பிரச்னை அல்ல என்பது ஆறுதலான தகவல்.  

ஒவ்வொரு மாதமும் கருப்பையின் உள் சுவர் எனப்படும் எண்டோமெட்ரியம் கர்ப்பம் அடைவதற்காக தடிமனாகிறது. கர்ப்பம் ஏற்படாதபட்சத்தில் அந்த திசு ரத்தத்துடன் வெளியேறுகிறது. மாதவிடாய் ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும் போது அல்லது வேகமாக வெளியேறும் போது, கருப்பையின் இயற்கையான ரத்த உறைதலைத் தடுக்கும் அமைப்பினால், இவற்றை முழுமையாக கரைக்க முடியாமல் போகலாம். இதனால் சிறிய ரத்தக் கட்டிகள் உருவாகலாம்.

அதனால் அதிக ரத்தப்போக்கு உள்ள நாட்களில் மட்டும் ரத்தக்கட்டிகள் தோன்றுவதைக் கண்டு அச்சப்பட அவசியம் இல்லை. அதேபோல் ரத்தக்கட்டிகள் இரண்டு செ.மீட்டருக்கும் குறைவாக இருப்பதும் சிக்கல் இல்லை. பல பெண்களுக்கு, குறிப்பாக மாதவிடாயின் முதல் சில நாட்களில், ரத்தக்கட்டிகள் அவ்வப்போது ஏற்படுவது இயல்பாக இருக்கலாம்.

ஆபத்தான அறிகுறி

சில பெண்களுக்கு அதீத ரத்தப்போக்கு கட்டியுடன் இருக்கலாம். அதாவது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு நாப்கின் முழுவதும் நனையும் அளவிற்கு அதிக ரத்தப்போக்கு என்பது இயல்பானது இல்லை. பெரிய சைஸ் ரத்தக் கட்டிகள் இருப்பதும், அன்றாட செயல்களைச் செய்ய முடியாத அளவிற்கு கடுமையான வலியும் ஆபத்தான அறிகுறி. ஏழெட்டு நாட்களுக்கும் மேலாக ரத்தப்போக்கு இருப்பதும் இயல்பானது இல்லை.

இந்த ரத்தக் கட்டிகள் ஃபைப்ராய்டு எனப்படும் கருப்பை நார்க்கட்டிகள், பாலிப்ஸ், ரத்த உறைதல் போன்ற காரணங்களால் ஏற்படக்கூடும். எனவே மாதவிடாய் ரத்தக்கட்டிகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்தியுங்கள். இவை எளிதில் தீர்க்கக்கூடிய பிரச்னையே.

இதனை வெளியில் சொல்வதற்கு கூச்சப்படுவது, அஞ்சுவது இந்த பிரச்னையை மேலும் மேலும் அதிகரிக்கச் செய்துவிடும். எனவே, ஆரம்ப கட்டத்திலே மருத்துவரை சந்தித்து மாதவிடாய் சிக்கலை தீர்த்துக்கொள்ளுங்கள்.

Leave a Comment