சாதாரணமாக எடுத்துக்காதீங்க.
சின்னச்சின்ன அறிகுறிகளை கவனிக்காமல் அசட்டையாக இருந்தால், அது பெரிய நோயை உருவாக்கிவிடும். அதில் நெஞ்செரிச்சல் முக்கியமானது.
எல்லோருக்கும் ஏதேனும் ஒரு சில நாட்களில் சாப்பிட்ட பிறகு மார்பில் எரிச்சல், புளிப்பு ஏப்பம், தொண்டை வரை உணவு திரும்பி வந்தது போன்ற உணர்வு ஏற்படுவது சகஜம். இப்படி ஒரு நிலை உருவானால் உடனே சோடா குடிப்பார்கள். இதனால் அப்போதைக்கு பிரச்னை தீர்ந்தது போன்று தெரியும்.
என்றாவது ஒரு நாள் இப்படி பிரச்னை ஏற்படுவது சாதாரண அஜீரணமாகவே இருக்கும். ஆனால், அடிக்கடி நெஞ்செரிச்சல் வருவது நிச்சயம் அஜீரணம் அல்ல, கெர்டு எனப்படும் காஸ்ட்ரோஎசோஃபேஜியல் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD – Gastroesophageal Reflux Disease) என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
இது என்ன நோய்?
வயிற்றில் உள்ள அமிலம் மற்றும் உணவு மீண்டும் உணவுக்குழாய்க்குள் மேலே வரும்போது ரிஃப்ளக்ஸ் ஏற்படுகிறது. இதைத் தடுக்க வேண்டிய கீழ் உணவுக்குழாய் வால்வு சரியாக செயல்படவில்லை என்றால் இந்த பிரச்சினை உருவாகிறது. பொதுவாக சாப்பிட்டதும் படுத்துத் தூங்குபவர்களுக்கு இந்த பிரச்னை அதிகம் வருகிறது.
இந்த கெர்டு ஏற்படும்போது மார்பில் எரிச்சல் அல்லது நெஞ்செரிச்சல் உருவாகும். சாப்பிட்ட உணவு அல்லது ஒரு வகையான புளிப்புத் திரவம் தொண்டை வரை வந்தது போன்ற உணர்வு ஏற்படும். இதையொட்டி வாயில் கசப்பு அல்லது புளிப்பு சுவை தெரியும்.
சாப்பிட்ட பிறகு வயிறு மற்றும் மார்புப் பகுதியில் அசௌகரியம் உண்டாகும். இதனால் இருமல், தொண்டை எரிச்சல், குரல் கரகரப்பு, தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பது போன்ற உணர்வு உண்டாகும்.
யாருக்கு ஆபத்து?
திருமண வீடு, ஹோட்டல் சாப்பாடு என்றால் ஒருசிலர் தொண்டை வரை சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிடும் நேரத்தில் மட்டும் இதுபோன்ற பிரச்னை வருகிறது என்றால், சாப்பாட்டை குறைத்துக்கொண்டால் போதும். அதேநேரம், உடல் பருமன் உள்ளவர்கள், சாப்பிட்டதும் படுத்துத் தூங்கும் பழக்கம் உள்ளவர்கள், புகை பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், ஹெர்னியா உள்ளவர்கள், அதிக கொழுப்பு, காரம், சாக்லேட், கஃபீன் போன்றவை சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு இதுபோன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனே கவனிக்க வேண்டும்.
இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தினால் முதலில் உணவுக் குழாய் சுருங்கத் தொடங்கும். இது, ஆரம்ப காலத்தில் எத்தகைய கடுமையான விளைவுகளையும் வெளியே காட்டுவதில்லை. இந்த சுருக்கம் அதிகமாகும்போது உணவு விழுங்குவதில் சிரமம் உருவாகும். அதோடு, உணவுக்குழாயில் அழற்சி, உணவுக்குழாய் புண்கள் போன்ற நீண்டகால சிக்கல்கள் உருவாக வாய்ப்பு உள்ளது.
வாழ்க்கை முறை
ஆரம்பகட்டத்தில் இந்த பிரச்னையைத் தீர்ப்பதற்கு வாழ்க்கை முறையை மாற்றுவதே போதும். சாப்பிட்ட பிறகு குறைந்தது மூன்று மணி நேரம் படுக்கக்கூடாது. அதேபோல், மூன்று நேரம் சாப்பிடுவதற்குப் பதிலாக நான்கு அல்லது ஐந்து நேரம் என்று கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடலாம்.
உடல் எடையை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும். அதேபோல், புகை பிடித்தல், மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். ஒரு சில உணவுகள் சாப்பிடும்போது எரிச்சல் அதிகமாகலாம். அப்படிப்பட்ட உணவுகளை கண்டறிந்து கட்டுப்படுத்துங்கள்.
இரவு ஏழு மணிக்குள் உணவு சாப்பிட்டு முடித்துவிட வேண்டும். அப்போதும் அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்கவும். படுக்கையில் கொஞ்சம் பெரிய தலையணை வைத்து உறங்குவது சிலருக்கு உதவலாம்.
அரிதாக ஏற்படும் இந்த பிரச்னை அடிக்கடி தென்படத் தொட்ங்கினால், அதாவது வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை நெஞ்செரிச்சல் ஏற்பட்டால், அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை சந்திக்க வேண்டும்.
உணவு விழுங்குவதில் சிரமம் இருந்தால், காரணமில்லாமல் உடல் எடை குறைந்தால், மார்பு வலியும் நெஞ்செரிச்சலும் நீண்ட நேரம் இருந்தால், ரத்த வாந்தி அல்லது கருப்பு நிறத்தில் மலம் போகிறது என்றால் உடனடியாக மருத்துவ சிகிச்சை அவசியம்.
சாதாரண நெஞ்செரிச்சல் என்று சோடோ குடித்து புறக்கணிப்பது உணவுக்குழாயை பாதிக்கக்கூடிய சிக்கலான நோயாக மாறிவிடலாம். எனவே, உடல் காட்டும் அறிகுறிகளை ஒருபோதும் அலட்சியப்படுத்த வேண்டாம்.
