மந்திரச்சொல்
எதிரி நம்மை வீழ்த்துவதற்கு முயற்சிப்பார் என்பது நிச்சயமாகத் தெரியும். அதனால் அவரிடமிருந்து எச்சரிக்கையாக இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.
ஆனால் போலி நண்பர் எப்போதும் நம்முடன் நிற்பார். தோளில் உரிமையுடன் கை போட்டு, ‘நான் இருக்கிறேன், கவலைப்படாதே’ என்று உறுதி கொடுப்பார். அதே நேரத்தில், நமது அனைத்துப் பலவீனங்களைப் அறிந்துகொண்டு, சரியான நேரத்தில் வீழ்த்திவிடுவார்.
அதனால்தான் எதிரியின் தாக்குதலைவிட, போலி நண்பரின் துரோகம் ஆழமாகக் காயப்படுத்துகிறது. உளவியல் ரீதியாக இதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. அதாவது, எதிரியிடம் நாம் எச்சரிக்கையாக இருப்போம். ஆனால், நண்பரிடம் நம் பாதுகாப்பைத் தளர்த்திவிடுவோம்.
எதிரியிடம் பேசும்போது வார்த்தைகளை அளந்து பேசுவோம். ஆனால் நண்பரிடம் நம் பயம், தோல்வி, பணநிலை, குடும்பப் பிரச்சினை, ஆசை, பலவீனம் என எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வோம். அதனால் நண்பர் துரோகம் செய்யும்போது அது ஒரு சாதாரண இழப்பாக இருப்பதில்லை.
நண்பர் ஏமாற்றிவிட்டார் என்பதோடு முடிவதில்லை. நான் எத்தனை தூரம் நம்பினேன் என்ற கேள்வி உயிரை உலுக்குகிறது. அதுதான் துரோகத்தின் வலி.
அதுசரி, போலி நண்பரை எப்படி அடையாளம் காண்பது?
போலி நண்பர் எப்போதும் வெளிப்படையாகத் தீமை செய்ய மாட்டார். சில நேரங்களில் அவரது நடத்தை மிகவும் நுட்பமாக இருக்கும். நீங்கள் வெற்றி பெறும்போது அவருக்கு மகிழ்ச்சி இருக்காது. உங்கள் முன்னேற்றத்தைப் பார்த்து வாழ்த்து தெரிவித்தாலும், அதில் உண்மையான மகிழ்ச்சி இருக்காது.
அதுவே, நீங்கள் தோல்வியடைந்தால் வெளிப்படையாக ஆறுதல் கூறினாலும், மனதுக்குள் ரொம்பவே மகிழ்ச்சி அடைவார். ஒரு நல்ல முடிவு எடுக்கும்போது, காரணமே இல்லாமல் தடுத்து நிறுத்தி, குழப்பம் உருவாக்குவார். இதை உன்னால் செய்ய முடியாது, இப்போது எதற்கு இதை செய்ய வேண்டும் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு, தன்னம்பிக்கையைக் குறைத்துவிடுவார். உங்கள் முன்னால் ஒரு முகம், பின்னால் இன்னொரு முகம் என்பதே போலி நட்பு.
ஒருவரின் வார்த்தைகளைவிட அவருடைய செயல்களைப் பாருங்கள். நீங்கள் இல்லாதபோது அவர் உங்களைப் பற்றி எப்படி பேசுகிறார் என்பதை கவனியுங்கள். உங்கள் வெற்றியில் அவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதைப் பாருங்கள். உங்கள் கஷ்டத்தில் அருகில் நிற்கிறாரா என்பதைப் பாருங்கள்.
உண்மையான நண்பர் நம்முடைய தவறைச் சுட்டிக்காட்டுவார், தவறான பாதையில் சென்றால் தடுத்து நிறுத்துவார். வெற்றியைப் பார்த்து மகிழ்வார். தோல்வியில் நம்மைவிட அதிகமாக வருந்துவார்.
நம்மைச் சுற்றி நிறைய பேர் இருப்பது முக்கியமல்ல. நம்முடைய நன்மையை உண்மையாக விரும்பும் சிலர் இருப்பதே போதும். அதற்காக எல்லோரையும் சந்தேகிப்பது புத்திசாலித்தனம் அல்ல. அதேபோல், எல்லோரையும் கண்மூடித்தனமாக நம்புவதும் புத்திசாலித்தனம் அல்ல. நம்பிக்கை என்பது ஒரே நாளில் கொடுக்கப்படும் பரிசு அல்ல. காலப்போக்கில் சம்பாதிக்கப்படும் வலிமை.
கிழேவிழும்போது கையை நீட்டுபவரே நண்பர். நாம் விழும்போது ரசிப்பவர் போலி. நண்பர்களின் எண்ணிக்கையைப் பெரிதாக்குவதைவிட, நம்பிக்கைக்குத் தகுதியானவர்களின் எண்ணிக்கையைச் சிறியதாக வைத்திருங்கள். ஆயிரம் பேர் நம்மைச் சுற்றி இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒருவர் உண்மையாக நம்முடன் இருந்தாலே போதும்.
ஆயிரம் எதிரிகள் நம்மைத் தாக்கினாலும், தப்பிக்க முடியும். ஆனால் ஒரு போலி நண்பர் நம்மை அணைத்துக்கொண்டே குத்தினால், அந்தக் காயம் உடலில் மட்டுமல்ல, மனதிலும் நீங்கவே செய்யாது. எனவே, சரியான நபர்களை மட்டும் பக்கத்தில் வைத்திருங்கள்.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.
