இந்த உலகத்தில் எல்லாவற்றையும் அனுபவியுங்கள், எதையும் சொந்தம் கொண்டாடாதீர்கள்.

மந்திரச்சொல்

ஒரு அழகான வீட்டில் வாடகைக்கு வசிக்கிறீர்கள். வீட்டை சுத்தமாக பராமரிக்கிறீர்கள். அலங்காரம் செய்து பாதுகாக்கிறீர்கள். வீட்டை காலி செய்யுங்கள் என்று உரிமையாளர் சொல்லும்போது, போகமாட்டேன் என்று அடம் பிடிக்க முடியாது. இந்த வாழ்க்கையும் ஒரு வாடகை வீடு போன்றது. அத்தனை உயிர்களும் இங்கு விருந்தினர்கள்.

உறவுகள் நமக்குக் கொடுக்கப்பட்ட வாடகை அறைகள். பணம் நமக்குக் கொடுக்கப்பட்ட ஒரு வசதி. பதவி ஒரு தற்காலிக இருக்கை. உடல் கூட ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான பரிசு. எல்லாவற்றையும் நன்றாகப் பயன்படுத்த வேண்டும். நேசிக்க வேண்டும். ரசிக்க வேண்டும். ஆனால் எதுவும் நிரந்தரமானது என்று நினைக்கக் கூடாது. இதை புரிந்துகொண்டால் வாழ்க்கை லேசாகிவிடும்

இந்த உலகத்தில் ஒருவருக்கு நிறைய உறவுகள், பணம், பதவி, வீடு, பொருட்கள், புகழ் என எல்லாமே கிடைக்கலாம். ஆனால் இவை எதுவும் உங்களுடையது இல்லை. இரவலாக கொடுக்கப்பட்டவை.

ஒரு அழகான பூவை ரசிக்கலாம். அதன் மணத்தை அனுபவிக்கலாம். ஆனால், இந்தப் பூ என்னுடையது என்று பறித்து, பாதுகாத்தாலும் அது வாடிவிடும். வாழ்க்கையும் அப்படித்தான். ஒருவரை நேசிப்பது தவறல்ல. ஆனால், அவர் எனக்காக மட்டுமே வாழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது வேதனையின் தொடக்கம். பணம் சம்பாதிப்பது தவறல்ல. ஆனால், இன்னும் வேண்டும் என்று பணத்திற்கு அடிமையாகிவிட்டால், எவ்வளவு பணம் இருந்தாலும் மகிழ்ச்சி நம்மிடம் நிலைக்காது.

பதவி கிடைப்பது பெருமை. ஆனால் பதவியே அடையாளம் என்று நினைத்துவிட்டால், பதவி போகும்போது மதிப்பும் பெருமையும் போய்விடும். எனவே, இருப்பதை அனுபவிப்பதில் எந்த பிரச்னையும் இல்லை, அதன் மீது பற்று வைப்பதில்தான் பிரச்னை. பற்றுதல் அதிகமாகும்போது, நம்முடைய மகிழ்ச்சி மற்றவர்களின் செயல்களாலும், சூழ்நிலைகளாலும் கட்டுப்படுத்தப்படுகிறது.

பற்றில்லாத வாழ்க்கை என்பது அன்பில்லாத வாழ்க்கை அல்ல. மாறாக, அது மிகவும் ஆழமான அன்பு. ஏனென்றால் பற்றுதல் என்பது நீ எனக்கு சொந்தம் என்று உரிமை எடுத்துக்கொள்வது. அன்பு என்பது, ‘நீ எனக்கு கிடைத்த பரிசு’ என்று கொண்டாடுவது. எனவே, இந்த இரண்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது.

நாம் இந்த உலகத்திற்கு எதையும் கொண்டு வரவில்லை. போகும்போதும் எதையும் எடுத்துச் செல்ல முடியாது. இடையில் கிடைத்திருக்கும் இந்தச் சிறிய காலத்தில்தான் சிரிக்கிறோம், நேசிக்கிறோம், சம்பாதிக்கிறோம், பயணிக்கிறோம், சாதிக்கிறோம், அழுகிறோம் மரணிக்கிறோம். அதனால் வாழ்க்கையை வெறுக்க வேண்டாம். நன்றாக வாழுங்கள். முழுமையாக அனுபவியுங்கள். ஆழமாக நேசியுங்கள். உங்களிடம் இருப்பதை மதியுங்கள்.

அதேநேரம், இவை எதுவும் என்னுடையது அல்ல என்பதை மறக்க வேண்டும். என்னுடன் இருப்பவை எல்லாம் எனக்குக் கொடுக்கப்பட்ட பரிசு என்ற எண்ணம் வந்துவிட்டால் இழப்பின் பயம் குறைந்துவிடும். பொறாமை குறையும். எதிர்பார்ப்பு குறையும். கோபம் குறையும். மன அழுத்தம் குறையும்.

வாழ்க்கையைப் பிடித்துக்கொண்டு வாழ்வதைவிட, வாழ்க்கையை ரசித்துக்கொண்டு பயணியுங்கள். வாழ்க்கை சுகமானது.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment