கெளரவம் என்பது தகுதியில் உள்ளது. அது தேடி வரவேண்டுமே தவிர, தேடிச் செல்லக்கூடாது.

மந்திரச்சொல்

உண்மையான கெளரவம் என்பது கேட்டு வாங்குவது அல்ல. என்னை மதிக்க வேண்டும், எனக்கு மரியாதை கொடுக்க வேண்டும், நான் யார் தெரியுமா? என்று ஒருவர் அடிக்கடி தன்னுடைய முக்கியத்துவத்தை நிரூபிக்க முயற்சிக்கிறார் என்றால், இன்னமும் அவர் தகுதி அடையவில்லை என்றே அர்த்தம்.

ஒரு நல்ல மருத்துவர் அவரது திறமையை விளம்பரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவருடைய திறமையை நோயாளிகள் பேச வேண்டும்.

ஒரு நல்ல ஆசிரியர், அவரது திறமையை யாரிடமும் சொல்லவேண்டிய அவசியமில்லை. அவருடைய வகுப்பில் இருந்து வெளியேறும் மாணவர்கள் பேசுவார்கள். தகுதி பேசத் தொடங்கும்போது, தனிமனிதர் தன்னைப் பற்றி பேச வேண்டிய அவசியம் குறைகிறது.

யாராவது பாராட்டினால் மகிழ்ச்சி அடைவதும், யாரும் கண்டுகொள்ளவில்லை என்றால் மனவருத்தம் அடைவதும் பக்குவப்படாத மனநிலை. இது வெளிப்புற அங்கீகாரம், மதிப்புக்கு எதிர்பார்ப்பு.

அதேநேரம் நான் என்ன செய்கிறேன் என்பது எனக்குத் தெரியும்; என் மதிப்பு பிறர் பாராட்டில் மட்டும் இல்லை என்பது தன்னம்பிக்கையின் இலக்கணம். தேடுபவரை விட, தகுதியை வளர்த்துக்கொள்பவரைத் தேடி வருகிறது அங்கீகாரம்.  

கெளரவத்தைத் தேடிச் செல்வதில் ஒரு ஆபத்து இருக்கிறது. மரியாதை அதிகமாகத் தேடும் ஒருவர், அதற்காக தன்னுடைய கொள்கைகளை விட்டுக்கொடுக்கலாம். ஒருவர் மதிக்க வேண்டும் என்பதற்காக அவரை மகிழ்விக்க முயற்சி செய்வார். தேவையில்லாத இடத்தில் தன்னை நிரூபிக்க முயற்சிப்பார். அங்கீகாரத்துக்காக தன்னுடைய கருத்தை மாற்றிக்கொள்வார். அவமானப்படுத்தப்பட்டாலும் உறவைத் தொடர்வார். இப்படி சுயமரியாதையை விட்டுக்கொடுத்து பெறப்படும் அங்கீகாரம், உண்மையான கெளரவம் அல்ல.

அதற்காக கெளரவம் தேடி வரட்டும் என்று காத்திருக்க வேண்டுமா..?

வேண்டாம். அங்கீகாரம் தேடுவதற்குப் பதிலாக தகுதியைத் தேடுங்கள். புகழ் தேடுவதற்குப் பதிலாக திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள். பதவி தேடுவதற்குப் பதிலாக பொறுப்பைச் சிறப்பாகச் செய்யுங்கள். மரியாதை கேட்பதற்குப் பதிலாக மதிப்புக்குரிய மனிதராக மாறுங்கள். அப்போது கெளரவம், தானே தேடி வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.

மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று சிந்திப்பதைவிட, நான் நேற்று இருந்ததைவிட இன்று என்ன தகுதியை வளர்த்துக்கொண்டேன்? என்று கேட்பது வாழ்க்கையின் திசையை மாற்றக்கூடும்.

அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள். தொழிலில் திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள். வாக்கைக் காப்பாற்றுங்கள். நேர்மையாக இருங்கள். மற்றவர்களை மதியுங்கள். தவறு செய்தால் ஒப்புக்கொள்ளுங்கள். அதேநேரம், உங்களுக்கான எல்லைகளைத் தெளிவாக வைத்துக்கொள்ளுங்கள். தேவையில்லாத இடத்தில் உங்களை நிரூபிக்க முயற்சி செய்யாதீர்கள்.

புகழைத் தேடுபவர், புகழ் கிடைக்காதபோது ஏமாற்றமடைகிறார். ஆனால் தகுதியை வளர்த்துக்கொள்பவர், புகழ் வந்தாலும் வராவிட்டாலும் வளர்ந்துகொண்டே இருப்பார்.

Leave a Comment