வாழ்வில் பெரிய அற்புதம் நடக்கும் என்று காத்திருப்பவர்கள், தினமும் நிகழும் சின்னச்சின்ன மாயாஜாலங்களை ரசிக்கத் தவறுகிறார்கள்.

மந்திரச்சொல்

ஒரு பூ மலர்வது பெரிய அற்புதமல்ல. சுவையான டீ கிடைப்பது கடினமல்ல. நண்பர்களுடன் பேசுவது சிரமம் அல்ல. ஆனால் இவற்றை எல்லாம் ரசிப்பதற்குத் தயங்குகிறார்கள். அதாவது, சின்னச்சின்ன மாயாஜாலங்களை ரசித்துக்கொண்டிருந்தால், பெரிய இலக்கை அடையமுடியாது என்று நினைக்கிறார்கள்.

இந்த சின்னச்சின்ன விஷயங்களில் கிடைக்கும் மகிழ்ச்சியும் திருப்தியும் பெரிய அற்புதத்தை நிகழ்த்தும் வல்லமை கொண்டவை. அதனால், பெரிய அற்புதம் நிகழும் வரும் வரை மகிழ்ச்சியை நிறுத்தி வைக்கத் தேவையில்லை. அன்றாடம் நிகழும் சின்னச்சின்ன மகிழ்ச்சியை முழுமையாக அனுபவியுங்கள். ஏனென்றால், இந்த நாள் திரும்பக் கிடைக்கப்போவதில்லை.

பொதுவாகவே, மனிதர்களிடம் ஒரு விசித்திரமான எண்ணம் இருக்கிறது. அதாவது பெரிய விஷயத்தை சாதிக்கும் வரை கவனம் சிதறாமல் இலக்கை நோக்கியே ஓட வேண்டும். சின்னச்சின்ன விஷயங்களை எல்லாம் ரசித்துக்கொண்டிருந்தால், பெரிய விஷயங்களை அடையவே முடியாது என்று நினைக்கிறார்கள்.

அதனால்தான், நல்ல வேலை, நிறைய பணம், சொந்த வீடு, திருமணம், குழந்தைகள் முதல் மதிப்பெண் போன்ற இலக்கு பெறும்வரையிலும் கடுமையாக ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். இதை அடையும் வரை சின்னச்சின்ன சந்தோஷங்களைத் தியாகம் செய்கிறார்கள். பெரிய வெற்றிக்கு எத்தனை காலம் வேண்டுமானாலும் காத்திருக்கத் தயாராக இருக்கிறார்கள்.

ஒரு பெரிய வெற்றி கிடைத்தவுடன் வாழ்க்கை முழுமையாகிவிடும் என்பது உண்மையில்லை. ஏனென்றால், அந்த வெற்றிக்குப் பிறகு அதைவிட பெரிய வெற்றியை மனம் தேடத் தொடங்கிவிடும். அதேபோன்று பெரிய வெற்றி மீண்டும் கிடைக்கவில்லை என்றால் வாழ்க்கை மீண்டும் சூன்யமாகிவிடும்.  

அதனால், வாழ்க்கையின் உண்மையான அழகு பெரும்பாலும் பெரிய நிகழ்வுகளில் மட்டும் இல்லை. சின்னச்சின்ன விஷயங்களை ரசிப்பதும் உணர்வதும் தினசரி செயலாக மாற வேண்டும். தினமும் மகிழ்ச்சியுடன் இருப்பவராலே, பெரிய சாதனைகள எளிதாக அடைய முடியும்.  

காலையில் விழித்தவுடன் உடல்நிலை நன்றாக இருப்பது மிகப்பெரும் மகிழ்ச்சி.
நமக்குப் பிடித்தவரிடமிருந்து வரும் ஒரு தொலைபேசி அழைப்பு ஒரு உற்சாகம்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு சாப்பிடும் நல்ல உணவு ஒரு திருப்தி. மழை பெய்யும்போது வரும் மண்ணின் மணம் ஒரு மெகா மேஜிக். குழந்தை எதிர்பாராமல் வந்து கட்டிப்பிடிப்பதும், மழலை மொழியில் பேசுவதும் ஆனந்தம். எதிர்பாராத சூழலில் நமக்குப் பிடித்த ஒரு பழைய பாடல் கேட்பது அந்த நாளையே சந்தோஷமாக்கிவிடும். உண்மையில், இவை எல்லாமே வாழ்க்கையின் சின்னச்சின்ன மாயாஜாலங்கள்.

எனவே, இவற்றை சாதாரணமான விஷயங்கள் என்று கடந்து செல்லத் தேவையில்லை. இவற்றை அனுபவித்தால் சாதிக்கும் மனப்பான்மை போய்விடும் என்று குற்றவுணர்வு கொள்ளத் தேவையில்லை. வாழ்க்கையை மாற்றும் ஒரு பெரிய சம்பவம் ஒரு நாள் நடக்கலாம் அல்லது நடக்காமல் போகலாம். ஆனால் இந்தச் சின்னச் சின்ன அழகான தருணங்கள் வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன.

அதனால் வாழ்க்கையை ரசிப்பதற்குத் தேவையான பயிற்சி என்னவென்றால், எப்போது பெரிய விஷயம் நடக்கும் என்று காத்திருப்பது அல்ல. இன்று என்னைச் சுற்றி எத்தனை அழகான சம்பவங்கள் நடக்கின்றன என்று ஆவலுடன் பார்த்து, கேட்டு, ரசிப்பதுதான்.

எனவே, பெரிய மகிழ்ச்சியைத் தேடி வாழ்க்கையைத் தள்ளிப்போடாதீர்கள். சின்னச்சின்ன மகிழ்ச்சிகளை ரசிக்கத் தொடங்குங்கள். அப்போதுதான் ஒரு சாதாரண நாள் அழகான நாளாக மாறும்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment