தன் திறமையை தானே அறிந்துகொண்டவர் முதலாளி. பிறர் அறிந்துகொண்டால் அவர் தொழிலாளி

மந்திரச்சொல்

எல்லோருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. சிலரிடம் மிகப்பெரிய திறமை இருக்கிறது. ஆனால் அந்தத் திறமை அவர்களுக்குத் தெரியவில்லை என்றால், அது அவர்களுக்கு உபயோகப்படாது.

அந்த திறமையை வேறு ஒருவர் கண்டுபிடித்துவிட்டால், அவரது திறமையைப் பயன்படுத்தி முன்னுக்கு வந்துவிடுவார். அப்போது திறமை அந்த மனிதனுடையதாக இருந்தாலும், அந்தத் திறமையின் மூலம் உருவாகும் லாபத்துக்கு உரியவர் வேறு ஒருவர்.

ஒருவர் அழகாக ஓவியம் வரைகிறார். அவரை யாரும் பெரிதாக மதிக்கவில்லை. வேறு ஒருவர், அவரது தனித்தன்மையைக் கண்டுபிடிக்கிறார். அபாரமான திறமை ஒளிந்திருக்கிறது என்று அறிகிறார். அவரை ஊக்குவித்து, அவரது ஓவியங்களை வாங்கி விற்பனை செய்கிறார். கண்காட்சிகளை நடத்துகிறார். புகழ் ஓவியருக்குக் கிடைக்கலாம். ஆனால், வருமானம் அந்த நபருக்குப் போகிறது.

ஒரு பெண்ணுக்கு அற்புதமாக சமைக்கத் தெரியும். ஆனால், அவர் அதை தொழிலாக மாற்றவில்லை. உறவினர் ஒருவர் அவரது திறமையை அறிந்து, சிறு ஹோட்டல் தொடங்கி அவரை வேலைக்கு அமர்த்துகிறார். அவரது திறமையால் ஹோட்டல் சிறப்பாக நடக்கிறது. அந்த பெண்ணின் தொழில்நுட்பத்தை மேலும் சிலருக்குக் கற்றுக்கொடுத்து அந்த ஹோட்டலை பெரிதாக மாற்றுகிறார் உறவினர். நன்கு சம்பாதிக்கிறார். ஆனால், அந்த பெண் இன்னமும் அங்கு வேலைக்காரியாக மட்டுமே தொடர்கிறார்.

திறமை இருப்பது ஒரு நிலை என்றால், திறமையை மதிப்பாக மாற்றுவது அடுத்த நிலை. அந்த மதிப்பின் மீது உரிமை வைத்திருப்பது அதைவிட உயர்ந்த நிலை. ஒரு சிறந்த தொழிலாளி எதிர்கால முதலாளியாகலாம்.

என்னிடம் என்ன திறமை இருக்கிறது? எந்த வேலையில் நான் இயல்பாகச் சிறப்பாக செயல்படுகிறேன்? என்னுடைய அறிவை எப்படி மதிப்பாக மாற்ற முடியும்? என்று ஒருவர் தன்னைத்தானே கேட்கத் தொடங்கும்போது, அவர் வாழ்க்கையின் உரிமையாளராகிறார்.

பலர் தங்கள் திறமையை மற்றவர்கள் அடையாளம் காட்டும் வரை காத்திருக்கிறார்கள். யாராவது என்னிடம் திறமை இருக்கிறது என்று சொல்ல வேண்டும், யாராவது எனக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று காத்திருப்பவர்கள் தங்கள் வாழ்க்கையின் அதிகாரத்தை மற்றவர்களிடம் ஒப்படைக்கிறார்கள்.

ஆனால் சுயமாகச் சிந்திப்பவர், தனது பலத்தைத் தானே ஆராய்கிறார். தவறுகளைச் செய்கிறார். முயற்சி செய்கிறார். சிறிய வாய்ப்புகளை உருவாக்குகிறார். பின்னர் அந்தத் திறமைக்கு சந்தையில் மதிப்பு உருவாக்குகிறார். வெற்றி பெறுகிறார். இதுதான், வேலை தேடுபவருக்கும் வாய்ப்பை உருவாக்குபவருக்கும் உள்ள வித்தியாசம்

ஒவ்வொருவரும் முதலாளியாக வேண்டும் என்பது இதன் பொருள் அல்ல. நல்ல வேலை செய்வதும், திறமையான தொழிலாளியாக இருப்பதும் மிகப்பெரிய சாதனைதான். ஒரு சிறந்த மருத்துவர் ஒரு மருத்துவமனையில் பணியாற்றலாம். ஒரு சிறந்த ஆசிரியர் ஒரு பள்ளியில் பணியாற்றலாம். ஒரு சிறந்த பொறியாளர் ஒரு நிறுவனத்தில் பணியாற்றலாம். அவர்கள் தொழிலாளிகள் என்பதால் அவர்களின் மதிப்பு குறைந்துவிடாது.

அதனால், நீங்கள் யாருக்காக வேலை செய்கிறீர்கள் என்பது கேள்வி அல்ல. உங்கள் திறமை மீது உங்களுக்கு எவ்வளவு உரிமை, கட்டுப்பாடு இருக்கிறது என்பதுதான் முக்கியம்.

உங்கள் திறமையை உலகம் கண்டுபிடிக்கும் வரை காத்திருக்காதீர்கள். முதலில் நீங்கள் உங்களையே கண்டுபிடியுங்கள். மற்றவர்கள் உங்கள் திறமையைப் பார்ப்பதற்கு முன்பே, அதை நீங்கள் பாருங்கள். மற்றவர்கள் அதன் மதிப்பை நிர்ணயிப்பதற்கு முன்பே, அதன் மதிப்பை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் திறமையை நீங்கள் அறியாதபோது, அது மற்றொருவரின் வாய்ப்பாக மாறலாம். உங்கள் திறமையை நீங்கள் அறிந்துகொள்ளும்போது, அது உங்கள் வாழ்க்கையின் வாய்ப்பாக மாறுகிறது. அதனால் உண்மையான முதலாளித்தனம் என்பது பணத்தில் தொடங்குவதில்லை, தன் திறமையை அறிதலில் தொடங்குகிறது.

Leave a Comment