உங்களால் கட்டுப்படுத்த முடியாததை, விட்டுத்தள்ளுங்கள்.

மந்திரச்சொல்

நமது கண் முன்னே இரண்டு வாழ்க்கை எப்போதும் இருக்கிறது. ஒன்று கட்டுப்படுத்த முடிவது, அடுத்தது கட்டுப்படுத்தவே முடியாத ஒன்று.  இந்த இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் சிந்திப்பதுதான், மனிதர்களின் ஏராளமான பிரச்னைகளுக்குக் காரணமாகிறது.

வேகமாக அலுவலகம் கிளம்பும்போது மழை பெய்கிறது. மழை பெய்வதை நம்மால் நிறுத்த முடியாது. ஆனால் குடை எடுத்துக்கொள்ளலாம். வேகமாக கிளம்பவேண்டிய நேரத்தில் இப்படி மழை பெய்கிறதே என்று கோபப்படுவதால், சலித்துக்கொள்வதால் மழை நிற்கப் போவதில்லை.

அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கவில்லை. இரண்டு வழி இருக்கிறது. என் திறமையை மீண்டும் நிரூபித்து, அடுத்த முறை பதவி உயர்வு பெறுவேன் என்று உறுதி எடுப்பது. இது நம்மால் செய்யக்கூடிய விஷயம். என்னை வேண்டுமென்றே ஒதுக்குகிறார்கள் என்று கோபப்படுவதால் எதுவும் மாறப்போவதில்லை.

உடல்நலப் பிரச்சினை வந்தால் மருத்துவரைச் சந்திப்பது நம் கட்டுப்பாட்டில் இருக்கிறது. சிகிச்சையைப் பின்பற்றுவது நம் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆனால் மருத்துவ வழிமுறைகளும், நலம் அடையும் காலமும் நம் கட்டுப்பாடில் இல்லை.

அடுத்தவர் என்ன நினைக்கிறார்? அவர் நம்மைப் பற்றி ஏன் இப்படி பேசுகிறார்? மற்றவர் நம்மை மதிக்க வைப்பது எப்படி? எல்லோரும் நம்மை விரும்பும்படி செய்ய வேண்டும் என்றெல்லாம் சிந்திக்கலாம். ஆனால், இது எதுவும் நம் கட்டுப்பாட்டில் இல்லை. இவை எல்லாமே அடுத்தவர் முடிவு செய்யவேண்டியவை.  

நமது முடிவுகள், முயற்சி, பேச்சு, நடத்தை, நேரத்தை எப்படிப் பயன்படுத்துகிறோம், ஒரு பிரச்சினைக்கு எப்படி பதிலளிக்கிறோம் என்பதை கட்டுப்படுத்தலாம்.

ஆனால், மற்றவர்களின் எண்ணங்கள், அவர்களின் முடிவுகள், கடந்த காலம், வானிலை,  எதிர்பாராத விபத்துகள், ஏற்கனவே நடந்த நிகழ்வுகளைக் கட்டுப்படுத்த முடியாது.  

அடுத்தவர் மனதை கட்டுப்படுத்த முயற்சிப்பது மிகப்பெரிய மனச்சுமை. ஒருவர் உங்களை நேசிக்க வேண்டும் என்று விரும்பலாம். ஆனால் அவரை உங்களை நேசிக்க வைக்க முடியாது. ஒருவர் உங்களை மதிக்க வேண்டும் என்று விரும்பலாம். ஆனால் அவருடைய மனதில் மரியாதையை கட்டாயப்படுத்த முடியாது.

எனவே, எந்தப் பிரச்சினை வந்தாலும் மூன்று கேள்விகள் கேளுங்கள்:

1. இது என் கட்டுப்பாட்டில் இருக்கிறதா?

2. என் கட்டுப்பாட்டில் இருந்தால், நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?

3. என் கட்டுப்பாட்டில் இல்லையென்றால், இதைப் பற்றி கவலைப்படுவதால் என்ன பயன்?

மூன்றாவது கேள்விக்கு, “எந்தப் பயனும் இல்லை” என்று விடை கிடைத்தால் அந்த எண்ணத்திலிருந்து மெதுவாக விலகக் கற்றுக்கொள்ளுங்கள்.

கட்டுப்படுத்த முடியாததை விட்டுத்தள்ளுவது என்றால் கைவிடுவது அல்ல. என்னால் முடிந்ததைச் செய்துவிட்டேன். இனி என்னால் கட்டுப்படுத்த முடியாத பகுதியை என் மனதில் சுமக்கப் போவதில்லை என்று தெளிவடைவதே மன அமைதியின் தொடக்கம்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.

Leave a Comment