மந்திரச்சொல்
பண மேலாண்மை என்பது ஒருவரை செல்வந்தர் அல்லது கோடீஸ்வரராக மாற்றுவது அல்ல. பணம் பற்றிய அன்றாடக் கவலை இல்லாத மனிதராக மாற்றுவதுதான்.
திடீரென வேலை போய்விட்டால், இந்த மாதம் சம்பளம் வரவில்லை என்றால், உடல்நிலை சிக்கல் ஏற்பட்டால் என்னாகும் என்ற அச்சம் இல்லாமல் ஒருவர் வாழும் நிலையே சிறப்பான பண மேலாண்மை.
எவ்வளவு பணம் ஒரு நாளைக்குத் தேவை என்பதில் ஏழைக்கும், பணக்காரருக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கலாம். அவசரச் செலவுக்கும் அவசியச் செலவுக்கும் யாரையும் நம்பியிராத சூழலில் வாழ்வது மிகப்பெரிய நிதிச் சுதந்திரம்.
வேலை பிடிக்கவில்லை என்றால், உடனடியாக அதிலிருந்து வெளியேறி மனதுக்குப் பிடித்த வேறு ஒரு வேலை அமையும் வரையிலும் நிதி பாதுகாப்பு இருப்பது நல்ல பண மேலாண்மை.
வயதான பிறகு குழந்தைகளிடம் ஒவ்வொரு செலவுக்கும் கை நீட்டி பணம் வாங்கவேண்டிய நிலை இல்லாதது சிறப்பான பண மேலாண்மை. இப்படிப்பட்ட நபர்களுக்காக பணம் வேலை செய்கிறது என்று அர்த்தம்.
இன்று, சம்பளத்துக்காக வேலை செய்பவர், சம்பளத்தில் கிடைக்கும் பணத்தில் மிச்சப்படுத்தும் புத்திசாலித்தனமான சேமிப்பும் முதலீடும் நாளைய நிதி சுதந்திரத்திற்குப் பாதுகாப்பு.
ஏனென்றால், பணத்திற்காக வாழ்நாள் முழுவதும் வேலை செய்வது ஒரு வாழ்க்கை முறை. பணத்தை உங்களுக்காக வேலை செய்ய வைப்பது ஒரு வாழ்க்கை முறை. பணம் வேலை செய்யத் தொடங்கிவிட்டால், ரொம்பவே கஷ்டப்பட்டு உழைப்பதற்கு அவசியம் இல்லை.
தினமும் வேலைக்குச் செல்கிறார்கள். மாதம் முழுவதும் உழைக்கிறார்கள். சம்பளம் வருகிறது. வீட்டு வாடகை, மாதக் கடன், மருத்துவம், மின்சாரம், குழந்தைகளின் கல்வி, உணவு, பயணம் என்று செலவாகிறது. அடுத்த மாதச் சம்பளத்துக்காக மீண்டும் வேலைக்குச் செல்கிறார்கள்.
ஆண்டுகள் கடந்து செல்கின்றன. சம்பளம் உயர்கிறது. ஆனால் பணத்திற்கான தேவை, கவலை மட்டும் குறைவதில்லை. ஏனென்றால், அவர்கள் பணத்தை சம்பாதிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் பணத்தை தங்களுக்காக வேலை செய்ய வைக்கக் கற்றுக்கொள்ளவில்லை.
ஒருவர் 60 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார் என்றாலும் சம்பளம் வந்தவுடன் முழுமையாக செலவு செய்கிறார் என்றால், ஆண்டுகள் கடந்தாலும் அவரது சொத்து பெரிதாக வளர்வதில்லை.
அதே அளவு சம்பளம் வாங்கும் இன்னொரு நபர் தனது தேவைகளை கட்டுப்படுத்தி, ஒவ்வொரு மாதமும் ஒரு தொகையை சேமித்து, அவசர நிதியை உருவாக்குகிறார். அதன் பிறகு, தனது இலக்கு, பொறுமையுடன் பணத்தை முதலீடு செய்வதற்குத் தொடங்குகிறார்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் சம்பளம் ஒரே மாதிரியாக வாங்கலாம். ஆனால், இருவருடைய சொத்து நிலவரம், வாழ்க்கைத் தரம் முற்றிலும் வேறுபட்டிருக்கும்.
முதல் நபர் தனது சம்பளத்தை நம்பியே வாழ்கிறார். இரண்டாவது நபருக்கு சேமிப்பும் முதலீடுகளும் இருக்கின்றன என்பதால் நம்பிக்கையுடன் வாழ்கிறார்.
எனவே, 1 லட்சம் ரூபாய் சம்பாதிப்பவர் பணக்காரராக இருக்க வேண்டிய அவசியமில்லை. மாதம் 50 ஆயிரம் சம்பாதிப்பவர் ஏழையாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. சேமிப்பை முதலீடாக மாற்றத் தெரிந்தவர் சுதந்திரமான பணக்கார மனிதராக இருப்பார்.
பணத்தை வேலை செய்ய வைப்பதற்கு சில வழிகள் உள்ளன. வருமானத்தில் ஒரு பகுதியை தொடர்ந்து சேமிப்பது, தேவையற்ற கடன்களை கட்டுப்படுத்துவது, அவசரகால நிதியை உருவாக்குவது, நீண்டகால இலக்குகளுக்கேற்ற முதலீடுகளைப் புரிந்துகொள்வது. ஒரே இடத்தில் அனைத்து பணத்தையும் வைத்திருக்காமல், பல்வேறு வகை முதலீடு மேற்கொள்வது போன்றவை பணத்தை திறமையாக வேலை செய்ய வைக்கிறது.
அதிக லாபம், பணம் இரட்டிப்பு, ரிஸ்க் இல்லாத வருமானம் போன்றவை பேராசை. இது ஏமாற்று வேலை என்பதை உணர்வதும் பண மேலாண்மையே. பணத்தை வேலை செய்ய வையுங்கள். சுதந்திரமாக வாழுங்கள்.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்
