யாருக்கெல்லாம் உதவி செய்தீர்கள் என்பதை ஒருபோதும் நினைவில் வைக்காதீர்கள்.

மந்திரச்சொல்

வலது கை கொடுப்பதை இடது கை அறியக்கூடாது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. இதன் நேரடி அர்த்தம் என்னவென்றால், ஒருவருக்கு நன்மை செய்தவுடன், அந்த செயலை மறந்துவிட வேண்டும். அப்போதுதான் அந்த உதவி தூய்மையானதாக கருதப்படும்.

ஒருவருக்கு உதவி செய்துவிட்டு, அதை மனதில் பட்டியல் போட்டு வைத்துக்கொண்டால், அந்த உதவி ஒரு பரிசாக இருக்காது. அது எதிர்பார்ப்புக்கான முதலீடாக மாறிவிடும். நான் அவருக்கு இந்த உதவி செய்தேன், ஆனால் அவர் எனக்கு திருப்பிச் செய்யவில்லை என்ற எண்ணம் உருவாகும். இந்த ஏமாற்றமே கோபம், உறவு விரிசலுக்குக் காரணமாகிவிடும்.

பிரதிபலன் எதிர்பார்த்து செய்வது உதவி அல்ல. அது கடன் என்றே கருதப்படும். அப்படி உதவி செய்யும்போது பதிலுக்கு நன்றி, பாராட்டு அல்லது உதவி எதிர்பார்க்கப்படுகிறது. அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாதபோது, நன்மை செய்த மகிழ்ச்சி மறைந்து, தவறான நபருக்கு உதவி செய்துவிட்டதாக ஏமாற்றம், எரிச்சல் உருவாகிறது.

அதேபோல், ’நான் மட்டும் அந்த உதவியை அன்று செய்யவில்லை என்றால் அவர் இப்படி வளர்ந்திருக்க மாட்டார்’ என்று செய்த உதவியை சொல்லிக்காட்டுவதும் சரியான செயல் அல்ல. நான் உதவினேன் என்ற எண்ணம் அகந்தையாக மாறிவிடுகிறது. இந்த அகந்தை உறவுகளைக் காயப்படுத்திவிடும்.

அதேநேரம், ஒருவருக்கு செய்த உதவியை மறந்துவிடும் மனிதர்கள் மனதார திருப்தி அடைகிறார்கள். அடுத்தவரை மகிழ்ச்சி அடையச்செய்து பார்ப்பதே உண்மையான மகிழ்ச்சி என்று வாழ்பவர்கள் உதவி செய்வதை தங்கள் கடமையாகப் பார்க்கிறார்கள். அதனால் அவர்கள் மனதில் சுமை சேர்வதில்லை. மற்றவர்களின் நன்றியை எதிர்பார்க்காமல் வாழ்வதால் ஏமாற்றம் அடைவதில்லை.

ஒரு மரம் தினமும் நிழல் தருகிறது, பழம் தருகிறது, விறகாகவும் உதவுகிறது. எனக்கு மனிதர்கள் என்ன கொடுத்தார்கள் என்று ஒருபோதும் கேட்பதில்லை. அப்படியே மனிதர்களும் வாழ வேண்டும்.

சிலர் திருமணத்திற்கு செய்த மொய் கணக்கு எழுதி வைத்திருக்கிறார்கள். யாரேனும் ஒருவர் குறைவாக மொய் எழுதினால், நான் உனக்கு கொடுத்த பணத்தைக்கூட எனக்கு திருப்பி செய்யவில்லை என்று சண்டை போடுகிறார்கள். படிப்புக்குப் பணம் கொடுத்தேன், எத்தனை மதிப்பெண் வாங்கினார் என்ற தகவலைக்கூட சொல்லவில்லை என்றெல்லாம் சண்டை போடுகிறார்கள். இது உதவி பெற்றவருக்கு அவமானத்தை உருவாக்கும். உதவி பெறாமல் வாழ்ந்திருக்கலாம் என்று நினைக்கத் தூண்டும்.  

எனவே, உதவி செய்வது ஒருவரது இயல்பான குணமாக இருக்க வேண்டும். உதவி செய்வதில் கிடைக்கும் மகிழ்ச்சியை விட வேறு எதுவும் உயர்வானது இல்லை. உதவி செய்ததை மறந்துவிடுவதால் மனதுக்கு அமைதியும் நிம்மதியும் கிடைக்கிறது. செய்த உதவியை மறப்பதே மனிதநேயம். அதுவே, உண்மையான மனிதம். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment