புகழ்ச்சிக்கு மயங்குவது கூர்மையான கத்தியை விட ஆபத்தானது. .

மந்திரச்சொல்

பாராட்டு, புகழ்ச்சியை விரும்பாத மனிதர்கள் இல்லை. நல்ல செயல்கள் செய்யப்படும் நேரத்தில் பாராட்டுவது அர்த்தமுள்ளது. அது ஊக்கம், மகிழ்ச்சி கொடுக்கும். அதேநேரம், தகுதிக்கு மீறிய புகழ்ச்சி, காரியம் சாதிப்பதற்கான புகழ்ச்சிக்கு மயங்குவது ஒருவரின் சிந்தனை, ஆளுமையை சேதப்படுத்திவிடும்.  

புகழ்ச்சி என்பதும் ஒரு போதை. பாராட்டுவது, புகழ்வதைக் கேட்கும்போது மூளையில் டோபமைன் என்ற மகிழ்ச்சி வேதிப்பொருள் சுரக்கிறது. அதனால், புகழ்பவர்களிடம் நம்பிக்கை, நெருக்கம் உருவாகிறது. புகழ்பவர்களை நல்லவர்கள் என்று நம்புகிறார்கள். ஆனால், இதை சிலர் தங்கள் சுயநலத்திற்குப் பயன்படுத்துகிறார்கள்.

ஒரு கத்தி தாக்கும்போது, தற்காத்துக்கொள்ள முயற்சிப்போம். ஆனால் புகழ்ச்சி தாக்கும்போது, அதை அன்பு என்று தவறாக நம்பி விடுகிறார்கள். அதனால் அங்கேயே ஆபத்து தொடங்குகிறது.

வரலாற்றில் பல அரசர்களின் வீழ்ச்சிக்கு வீண் புகழ்ச்சியே காரணமாக இருந்திருக்கிறது. இந்திரனே, சந்திரனே என்று புகழ்வதைக் கேட்டு உச்சி குளிரும். உலகத்திலே உங்களைப் போன்ற வீரர் இல்லை, நீங்களே மிகச்சிறந்த தலைவர், முடிவு எடுப்பதில் நீங்களே வல்லவர் என்றெல்லாம் புகழ்பவர்களை நம்பி, தவறான முடிவு எடுத்து மரணத்தைத் தழுவியிருக்கிறார்கள்.

இன்று குடும்பங்களிலும், அலுவலகங்களிலும் புகழ்ச்சி அரசியலுக்கு முக்கிய இடம் இருக்கிறது. ஒரு நிறுவனத்தில் மேலதிகாரியை எப்போதும் புகழ்ந்து பேசும் ஊழியர், உண்மையான திறமைசாலியை விட அதிக பயன் பெறுகிறார். உறவுகளில், ’நீங்கள் சொல்வதுதான் சரி’ என்று தொடர்ந்து புகழ்பவர் நிறைய ஆதாயம் பெறுகிறார்.  

ஒருவர் நம்மைப் புகழும்போது, அந்தப் புகழ்ச்சி முழு உண்மையல்ல என்று தெரிந்தாலும், அதை விரும்பி ஏற்றுக்கொள்ளும் மனநிலை நிறைய பேருக்கு இருக்கிறது. இந்தப் புகழ்ச்சிக்குத் தான் தகுதியான நபர் என்று நம்புகிறார்கள். இதனால் உண்மையைப் பார்க்க முடியாமல் பலவீனமாகிறார்கள்.  

உண்மையான நண்பர் எப்போதும் புகழ்பவர் அல்ல. தேவையான நேரத்தில் தவறுகளைச் சுட்டிக்காட்டுபவர்தான் உண்மையான நண்பர். உண்மை கசப்பாக இருந்தாலும், இதுவே ஒருவரின் பலத்தை உணர வைக்கும். எச்சரிக்கையுடன் அடுத்த அடி எடுத்துவைக்க உதவும். பொய் இனிப்பாக இருக்கலாம், ஆனால் சிக்கலில் மாட்டவைத்து அழித்துவிடும்.

ஒரு நல்ல மருத்துவர், நோயாளி விரும்பும் வார்த்தையைச் சொல்ல மாட்டார்.  நோயைக் குணப்படுத்துவதற்கான சிகிச்சையைத்தான் சொல்வார். அதுபோல, உண்மையாக நேசிப்பவர், புகழ்ந்துகொண்டே இருக்க மாட்டார். தேவையான நேரத்தில் தெரிந்துகொள்ள வேண்டியதை மட்டுமே பேசுவார். அந்த வார்த்தைகள் சில நேரங்களில் காயப்படுத்தலாம். ஆனால் அந்தக் காயமே வளர்ச்சிக்கான மருந்தாக இருக்கும்.

எனவே புகழ்பவர்களை விட,  திருத்துபவர்களை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். பாராட்டுகளை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை. ஆனால் அந்தப் பாராட்டின் நோக்கத்தை ஆராயும் விழிப்புணர்வு அவசியம்.

கத்தி ஒருமுறை மட்டுமே காயப்படுத்தும். ஆனால் போலியான புகழ்ச்சி, ஒருவரின் அகந்தையை வளர்த்து, தவறான முடிவுகளை எடுக்க வைத்து, வாழ்க்கை முழுவதையும் பாதிக்கக்கூடும். அதனால்தான், கூர்மையான கத்தியை விட ஆபத்தானது தகுதிக்கு மீறிய புகழ்ச்சி.

புகழ்ச்சிக்கு ஆசைப்பட்டு உண்மை சொல்லும் மனிதர்களை இழந்துவிடாதீர்கள்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.

Leave a Comment