மந்திரச்சொல்
வாழ்க்கையில் பெரும்பாலான மனிதர்கள் ஏன் தோல்வி அடைகிறார்கள் தெரியுமா..? வெற்றி வெகு அருகில் இருக்கிறது என்று தெரியாமல், முயற்சியை நிறுத்துவதால் தோற்கிறார்கள்.
புதிய முயற்சியில் உடனடியாக பலன் எதிர்பார்க்கிறார்கள். எதிர்பார்த்த பலன் கிடைப்பது போல் தெரியவில்லை என்றால் இந்த முயற்சி வீண் என்று தவறாக முடிவு செய்து செயல்படுவதை நிறுத்திவிடுகிறார்கள். உளவியலில் இதை பிரிமெச்சூர் கிவிங் அப் (Premature Giving Up) என்கிறார்கள்.
உண்மை என்னவென்றால், பல வெற்றிகள் கடைசி நேர முயற்சிகளால்தான் கிடைக்கிறது. ஓட்டப் போட்டிகளில் கடைசி சில விநாடிகளில் முந்திச் சென்று வென்றவர்கள் இருக்கிறார்கள்.
ஒருவர் கிணறு தோண்டினார். 100 அடி தோண்டியும் தண்ணீர் வரவில்லை. மனம் உடைந்து அந்த நிலத்தை விற்றுவிட்டார். புதிய உரிமையாளர் அதே இடத்தில் இன்னும் சில அடிகள் தோண்டியபோது, மிகப்பெரிய ஊற்று கிடைத்துவிட்டது. முதல் நபர் திறமை இல்லாமல் தோற்கவில்லை, வெற்றிக்கு மிக அருகில் இருந்தபோது முயற்சியை நிறுத்தியதால்தான்.
ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களின் முயற்சி ஆச்சர்யமாக இருக்கும். நிறைய மாணவர்கள் நான்காவது, ஐந்தாவது முயற்சிகளில் தேர்ச்சி அடைகிறார்கள். அவர்களின் முந்தைய முயற்சிகள் வீண் அல்ல, அவை வெற்றிக்கான பயிற்சிகள். ஆனால், நிறைய மாணவர்கள் முதல் ஆண்டு தோல்வியிலே, ஐ.ஏ.எஸ். கடினமான தேர்வு என்று முயற்சியை கைவிடுகிறார்கள்.
எந்த ஒரு தொழிலும் எடுத்தவுடன் லாபம் தராது. முதல் ஆண்டு சுமாராக வியாபாரம் நடக்கும். சில தவறுகள் நடக்கும். அவற்றை எல்லாம் சரி செய்து தொடர்ந்து நடத்தினால் மட்டுமே அடுத்தடுத்த ஆண்டுகளில் லாபகரமான தொழிலாக மாற்ற முடியும். முதல் ஆண்டிலேயே தொழிலை மூடியிருந்தால் வெற்றியை ஒருபோதும் சுவைக்க முடியாது.
அதனால் தோல்வியை முடிவாகப் பார்க்காமல் கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக பார்க்கும் மனிதர்களே தொடர்ந்து முன்னேறுகிறார்கள். இன்றைய தோல்வி சோர்வு தரலாம். ஆனால், இலக்கை நோக்கி போய்க்கொண்டே இருங்கள். வெற்றி கிடைக்கும் வரை போராடுவதே சரியான முயற்சி.
வெற்றி இன்னும் ஒரு சில நாட்களில் கிடைத்துவிடும் தூரத்தில்தான் இருக்கும். ஆனால், அந்த நேரத்தில் முயற்சி செய்யாமல் பலர் விலகிவிடுகிறார்கள். இது உண்மையான வாழ்க்கை அனுபவங்களால் நிரூபிக்கப்பட்ட வாழ்க்கை நெறி.
எனவே, இன்று கைவிட நினைக்கும் முயற்சி, நாளைய மிகப்பெரிய வெற்றியின் வாசலாக இருக்கலாம். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். விட்டுக் கொடுக்காதவர்களுக்கே வெற்றி சொந்தமாகிறது.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்
