இனிப்பு அரக்கன் ஜாக்கிரதை
வெள்ளைச் சர்க்கரை போன்று நாட்டுச்சக்கரை ஆபத்து கிடையாது என்று பலரும் நினைக்கிறார்கள். இது சரிதானா என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
கருப்பட்டி, நாட்டுச்சக்கரை, வெல்லம், பனங்கற்கண்டு கலந்து செய்யப்படும் இனிப்புகளை நீரிழிவு நோயாளிகள் கொஞ்சமாக சாப்பிடுவதால் எந்த பாதகமும் இல்லை என்று சோஷியல் மீடியாவில் நிறைய பேர் சத்தியம் செய்கிறார்கள். இதை நம்பி பல சர்க்கரை நோயாளிகள் வாங்கி சாப்பிடுகிறார்கள். காபி, டீயில் கலந்து குடிக்கிறார்கள்.
கரும்பில் இருந்து வரும் நாட்டுச்சர்க்கரை என்பது இயற்கை உணவு என்றாலும், அது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது இல்லை என்பதே உண்மை. குழந்தைகள், பெரியவர்கள் விரும்பி சாப்பிடும் அத்தனை தின்பண்டங்களிலும் வெல்லத்தைக் கலந்தவுடன், அது ஆரோக்கியமாக மாறிவிடுவதில்லை.
இனிப்பு எந்த வடிவில் இருந்தாலும் அதில் கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்து நிரம்பியிருக்கிறது. இந்த வழியில் தேன் என்பதும் நல்லது இல்லை. தேன் இயற்கைப் பொருள் என்றாலும் மனிதர் ஆரோக்கியத்திற்கு ஏற்றது இல்லை. ஏனென்றால், தேனிலும் மாவுச்சத்து இருக்கிறது.
தேனில் இருப்பது ஃபரக்டோஸ் எனும் மாவுச்சத்து. இந்த ஃபரக்டோஸ் நிரம்பிய பழங்களும் உடலுக்கு நல்லதல்ல. அதனாலே, நேரடியாகவே அத்தனை இனிப்புகளும் ஆபத்து என்று ஒதுக்குவதே நல்லது.
ஏனென்றால், எந்த ரூபத்தில் இனிப்பு சுவை எடுத்துக்கொண்டாலும், அதனால் ரத்த சக்கரை அளவு கூடும். எனவே இனிப்பு இல்லாமல் டீ, காபி அருந்தும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதே ஆரோக்கியத்திற்கு நல்லது. குறிப்பாக நீரிழிவு, ரத்த கொதிப்பு உள்ளவர்கள் அடிக்கடி பால், டீ, காபி அருந்துவதை தவிர்ப்பது சிறந்தது.
பாலில் உள்ள லேக்டோஸ் எனும் மாவுச்சத்து நமது ஜீரண மண்டலத்தால் குளூகோஸ் மற்றும் கேலக்டோஸாக உடைக்கப்படுகிறது. இந்த குளூகோஸ் ரத்தத்தில் கலந்ததும் கணையம் இன்சுலினை வெளியிட்டாக வேண்டும். ஆனால், குளூகோஸ் உள்ளே வந்தால் கணையம் இன்சுலினை தேவைக்கு மீறி சுரப்பது அல்லது தேவைக்கு குறைவாக சுரப்பது நோய் இல்லாதவர்களை நோயாளியாக மாற்றிவிடும்.
சுரக்கப்பட்ட இன்சுலின் நமது செல்களில், தசைகளில், கல்லீரலில் முறையாக தனது பணியை செய்யாமல் போவதை இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் என்கிறோம். இத்தகைய பிரச்சனைகளை ரத்தத்தில் குளூகோஸ் கலக்கும் போதெல்லாம் உடல் சந்திக்கும்.
எனவே, பால், இனிப்பு எடுத்துக்கொள்வதை நீரிழிவு, ரத்த அழுத்தம், உடல் பருமன், பிசிஓடி பாதிப்பு உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது. முழுமையாக தவிர்க்க முடியவில்லை என்றால், குறைவான அளவில் அதுவும் ஒரே ஒரு நேரம் மட்டும் பருகலாம்.
நிறைய பேர் காபியில் கால் ஸ்பூன் மட்டுமே சக்கரை சேர்க்கிறேன், சும்மா கொஞ்சம் என்றெல்லாம் சொல்லி, அவர்களை அவர்களே சமாதானம் செய்துகொள்கிறார்கள். கொஞ்சமாக எடுத்துக்கொள்வது என்றாலும், இனிப்பு சுவை உணவுகள் எல்லாமே நோயாளிகளுக்கு விஷம். உஷாரா இருந்துக்கோங்க.
