மக்கள் குறை தீர்த்த பாகல்மேடு புரட்சி

காமராஜர் நினைவலைகள் – 7

மக்களாட்சி வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட முதல் சாதனை முயற்சி என்று 1957-ம் ஆண்டு மே மாதம் காமராஜர் பங்கேற்ற பாகல்மேடு மாநாட்டை கூறலாம்.

மக்களுக்கும் அரசுக்கும் எல்லா மட்டத்திலும் தொடர்பு இருக்க வேண்டுமென விரும்பினார் முதல்வர் காமராஜர். எனவே, ஆட்சியாளர்களும் மக்களும் ஒரே இடத்தில் கூடி, கலந்துரையாடி, பிரச்சனைகளுக்கு அதே இடத்தில் தீர்வு காணப்பட்டால்தான் விரும்புகிற, எதிர்பார்க்கிற வகையில் சமுதாய மேம்பாட்டுப் பணிகள் நடந்தேற வாய்ப்புண்டு என்று காமராஜர் கருதினார்.

காமராஜரின் புதிய சிந்தனைக்கு ஏற்ப செங்கல்பட்டு மாவட்டம், ஊத்துக்கோட்டை பகுதி, பாகல்மேட்டில் பிர்கா மாநாடு நடத்தப்பட்டது. பிர்கா என்பது கிராம பஞ்சாயத்திற்கும் மாவாட்ட பஞ்சாயத்திற்கும் இடைபட்ட ஐந்தாறு கிராமங்களை உள்ளடக்கிய அமைப்பு.

பாகல்மேடு பிர்கா கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் இந்த மாநாட்டிற்க்கு அழைக்கப்பட்டிருந்தனர். தமிழக முதல்வர் காமராஜர் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில், பொது மக்களால் முன் வைக்கப்படும் சமுதாய மேம்பாட்டுப் பிரச்சனைகளுக்கு உடனடியாக அங்கேயே தீர்வு காணப்படுமெனவும் அறிவிக்கபட்டிருந்தது.

முதல்வர் காமராஜருடன் தலைமைச் செயலாளர், சமுதாய மேம்பாட்டுத்துறை இயக்குனர், மாவட்ட ஆட்சி தலைவர், கீழ்நிலை அதிகாரிகள் கலந்துகொண்டனர். பாகல்மேடு மற்றும் பிர்கா கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். மாநாட்டின் தொடக்கமாக, அரசின் பல்வேறு திட்டங்களை விளக்கும் கண்காட்சியைத் தமிழக முதல்வர் காமராஜ் திறந்து வைத்தார்.

மாநாட்டின் அடிப்படையை முதல்வர் காமராஜ் முதலில் விளக்கினார். நேரிடையாக மக்கள் பிரச்சனைகளை அறிந்து, இயன்றவரை உடனடி தீர்வு காண வந்திருப்பதாகவும் கூறிய காமராஜ், அரசு மீதான மக்கள் நம்பிக்கையை எற்படுத்தவும் தன்னுடைய அரசு மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் அரசு என்பதை மக்கள் உணர்ந்திட வேண்டுமெனவும் கூறினார்.

அதன்பின்னர், பிரச்னைகளைப் பற்றி பேச பொதுமக்கள் அழைக்கப்பட்டனர். தங்கள் கிராமத்தில் ஒருவர் கூட படித்தவர் இல்லையென்றும், தங்களுக்கு ஒரு பள்ளிக்கூடம் வேண்டுமென்றும் ஒரு கிராமவாசி கூறி, தங்கள் கிராமத்தை சேர்ந்த 36 பேர்களுடைய பெருவிரல் ரேகை இட்ட மனுவை காமராஜரிடம் அளித்தார்.

முழுமையாக அரசு செலவிலேயே தங்கள் கிராமத்துக்கு சாலை வசதி அமைத்து தர வேண்டுமென்று இன்னொரு கிராமவாசி கூறினார். நெடுந்தொலைவிலுள்ள மருத்துவமனைக்கு செல்லும் வழியில், வயல்வெளியில் தங்கள் கிராமத்தை சார்ந்த பெண் குழந்தை பெற்றதாகவும் அதனால் தங்கள் கிராமத்திற்க்கு மருத்துவமனை வேண்டுமென்று மற்றொரு கிராமவாசி கூறினார்.

பக்கத்து ஊர் பள்ளிக்கு செல்லும் வழியில் ஆற்றைக் கடக்க முயன்ற சிறுவன் வெள்ளத்தில் மூழ்கிப் போய்விட்டான் எனக்கூறி, தங்கள் கிராமத்திலேயே பள்ளிக்கூடம் வேண்டுமென்று ஒரு கிராமவாசி கூறினார்.

கிராமத் தொழிகளில் தங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டுமென பெண்கள் கோரிக்கை விடுத்தனர். தங்களுடைய குடியிருப்புகளில் குடிநீர் கிணறுகளும் பள்ளிகளும் வேண்டுமென்வும் தங்களுக்கு வீட்டு மனைகள் வழங்கப்பட வேண்டுமென்று தாழ்த்தப்பட்டோர் சார்பாக கோரிக்கை வைத்தார்.

இப்படி இரண்டு பெண்கள் உள்பட ஐம்பது கிராமவாசிகள் தங்கள் குறைகளை முதல்வர் காமரஜரிடம் நேரிடையாக எடுத்துரைத்தனர். அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அன்றைய தினம் ஏழு கிராம சாலைகள் அமைக்கவும், ஐந்து கிணறுகள் தோண்டவும், மூன்று பள்ளிகள் திறக்கவும் அந்த இடத்திலேயே முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. மேலும் நிலுவையில் உள்ள பல திட்டங்கள் முழுமைப் பெற காலக்கெடு வரையறை செய்யப்பட்டது.

மக்களின் மனதில் நம்பிக்கை தீபத்தை ஏற்றி வைத்த இந்த பாகல்மேடு மாநாடு மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது.  பாகல் மேடு பாணி மக்களிடையே பலத்த வரவேற்பை கண்ட திராவிட முன்னேற்ற கழக தலைவர் அண்ணாத்துரை இதற்காக காமராஜரை பாராட்டியதோடு மட்டுமின்றி, தன்னுடைய தொகுதியிலும் பாகல்மேடு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று சட்ட மன்றத்தில் வலியுறுத்தினார்.

அரசுக்கும் மக்களுக்கும் இடைவெளி இல்லாத நிலையை காமராஜர் உருவாக்கிக் காட்டினார்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment