அன்பை ரகசியமாக வைத்திருப்பதில் அர்த்தமேயில்லை, வார்த்தைகளில் வெளிப்படுத்துங்கள்.

 மந்திரச்சொல்

மனம் நிறைய அன்பு இருக்கும். ஆனால் அதை வெளிப்படுத்துவதற்கு அவசியமில்லை என்றே நினைக்கிறார்கள். என் அன்பு அவருக்குத் தெரியும், சொல்லாமல் புரிந்துகொள்வார் என்று நினைப்பார்கள்.

உண்மை என்னவென்றால் அன்பு உணரப்படுவது மட்டுமல்ல; அது கேட்கப்படவும் வேண்டும்.

மனிதரின் மூளை அன்பான வார்த்தைகளை கேட்க விரும்புகிறது. நான் உன்னை நேசிக்கிறேன், நீ எனக்கு முக்கியம், உன்னால் என் வாழ்க்கை அழகாக இருக்கிறது, உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன் என்பது போன்ற வார்த்தைகள் பாதுகாப்பு உணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி தருகின்றன. தன்னை ஒருவர் உண்மையாக நேசிக்கிறார் என்ற உறுதி கிடைக்கிறது. இந்த உணர்வு மனஅழுத்தத்தைக் குறைத்து, உறவை ஆழமாக வலுப்படுத்துகிறது.

அன்பை மனதில் வைத்துக்கொண்டு வெளிப்படுத்தாமல் இருப்பதுதான் மனித உறவுகளில் மிகப்பெரிய தவறு. வெளிப்படுத்தப்படாத அன்பு பார்ட்னருக்கு அன்பின்மையாகத் தோன்றலாம். இதனால் தேவையற்ற சந்தேகங்கள், ஏமாற்றங்கள், உருவாகும்.

காதலன் – காதலி, கணவன் – மனைவி, பெற்றோர் – குழந்தை, ஆசிரியர் – மாணவர்கள், அதிகாரி – தொழிலாளர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்று எல்லா உறவுகளிலும் அன்பை வெளிப்படையாகப் பேசுபவர்களே நீண்ட காலம் மகிழ்ச்சியாக நிலைத்திருக்கிறார்கள்.

அன்பு என்பது மனதில் பூட்டி வைக்கவேண்டிய ரகசியம் அல்ல. அது பகிர்ந்தால் பெருகும் செல்வம். அன்பான வார்த்தைகள் செலவு இல்லாத பரிசுகள்.

எனவே, அன்பை மனதில் பூட்டி வைக்காதீர்கள். அவ்வப்போது வார்த்தைகளால் வெளிப்படுத்துங்கள். நீங்கள் சொல்லும் ஒரு அன்பான சொல், ஒருவரின் முழு நாளை மாற்றக்கூடும். சில நேரங்களில், அவரது முழு வாழ்வையும் மாற்றிவிடும்.

அன்பை பேசிக்கொண்டே இருங்கள். அதுவே, மகிழ்ச்சி.

Leave a Comment