மந்திரச்சொல்
அழகான ரோஜா செடியிலும் முள்ளை மட்டும் பார்க்கும் மனிதர்கள் இருக்கிறார்கள். ஒருவர் உதவி செய்தாலும் அதற்கு உள்ளர்த்தம் கண்டுபிடித்து குறை சொல்பவர்கள் இருக்கிறார்கள். நல்ல உறவையும் சந்தேகப்படுகிறார்கள்.
இந்த வகை மனிதர்கள் வாழ்க்கையில் எதுவுமே சரியில்லை என்ற எண்ணத்துடன் வாழ்கிறார்கள். வாழ்க்கையில் கிடைக்கும் சின்னச்சின்ன மகிழ்ச்சிகளை அனுபவிப்பதற்குப் பதிலாக, பெரிய மகிழ்ச்சி கிடைக்கவில்லை என்று வருந்துகிறார்கள். இரண்டாவது பரிசுக்கு சந்தோஷப்படாமல் முதல் பரிசு கிடைக்கவில்லை என்ற வருத்தத்தை சுமக்கிறார்கள்.
இப்படிப்பட்ட மனநிலை ஏற்படுவதற்கு, குழந்தைப் பருவத்தில் அவர்கள் சந்தித்த அதிக விமர்சனங்கள், ஏமாற்றங்கள், தண்டனைகள் காரணமாக இருக்கலாம். தன்னம்பிக்கை குறைவு, பிறருடன் ஒப்பிடும் மனப்பான்மையினால் இந்த மனநிலை உருவாகலாம்.
எல்லோரும் பாராட்டுக்கும் அங்கீகாரத்துக்கும் ஆசைப்படுகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு முதலில் பாராட்ட வேண்டும். அதன்பிறகே விமர்சனம் அல்லது குறைகளைத் தெரிவிக்க வேண்டும்.
ஒருவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே ஏற்றுக்கொள்ளப் பழகுங்கள். மான் மட்டுமல்ல முள்ளம்பன்றியும் அழகு என்ற பார்வையே முக்கியம். எப்போதும், எல்லோரும் பரிபூரணமாக இருக்க வேண்டும் என்ற நெகடிவ் மனநிலை உள்ளவர்களுக்கு வாழ்வின் அழகு தெரியாமல் போகிறது.
அதேநேரம், பாசிடிவ் மனம் கொண்டவர்கள் குறைகளுக்குள் கூட புதிய அர்த்தத்தைப் பார்க்கிறார்கள். வாழ்க்கை என்பது முழுமை அல்ல. யாரும் இங்கு முழு நல்லவர் இல்லை, யாரும் முழு கெட்டவர் இல்லை. வெயில் காலம், மழை காலம், குளிர் காலம் என்று மாறி மாறி வருவதே அழகு என்பதை புரிந்துகொண்டு ரசிக்கிறார்கள்.
எப்போதும் குறை கண்டுபிடிப்பதிலே மனதை செலுத்தினால், மூளையும் அதற்கே பழகிவிடும். இதனால் மழை பெய்தாலும், பட்டாம்பூச்சி பறப்பதும் இடையூறாகத் தெரியும். நல்லவரும் கெட்டவராகத் தெரிவார்கள். இதனால் மனஅழுத்தம், உறவு சிக்கல், தனிமை அதிகரிக்கலாம்.
நிறைவு என்பது எல்லாம் சரியாக நடப்பது அல்ல, நடப்பவை எல்லாம் சரியானது என்ற மனப்பக்குவம். மரணத்தையும், தோல்வியையும், பிரிவையும் அர்த்தமுள்ளதாகப் பார்க்கத் தொடங்கினால், எல்லாம் மகிழ்ச்சியாக மாறிவிடும்.
