மந்திரச்சொல்
பொறுமையைவிட மேலான தவமில்லை. திருப்தியை விட மேலான இன்பமில்லை. இரக்கத்தை விட உயர்ந்த அறமில்லை. மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!
வாழ்க்கையில் பணம், பதவி, புகழ் போன்றவை மனிதனுக்கு வசதியைத் தரலாம். ஆனால் மன அமைதி, நல்ல உறவுகள், உள்ளார்ந்த மகிழ்ச்சி போன்றவற்றை நான்கு குணங்களான பொறுமை, திருப்தி, இரக்கம், மன்னிப்பு ஆகியவையே தருகின்றன.
பொறுமை
ஒரு விதை விதைத்தவுடன் மரமாக மாறாது. ஒரு குழந்தை பிறந்தவுடன் ஓடாது.
அதேபோல் வாழ்க்கையிலும் நல்ல விஷயங்களுக்கு காலம் தேவை.
பொறுமை என்பது காத்திருப்பது மட்டுமல்ல. எதிர்பார்த்தது உடனே நடக்காவிட்டாலும் மனதை திடமாக வைத்திருக்கும் திறன். இவர்கள் காலம் ஒரு மாற்றத்தை கொண்டு வரும் என்பதை நம்புவார்கள். மனிதர்களின் குறைகளை தாங்கிக் கொள்வார்கள்.
பொறுமை இல்லாத இடத்தில் கோபம் அதிகரிக்கும், உறவுகள் உடையும், தவறான முடிவுகள் எடுக்கப்படும். பொறுமை உள்ளவர்கள் மன அழுத்தத்தை சிறப்பாக சமாளிக்கிறார்கள். உடனடி உணர்ச்சிக்கு அடிமையாகாமல் சிந்தித்து செயல்படுகிறார்கள்.
திருப்தி
என்னிடம் இருப்பது போதும் என்று வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளும் மனநிலையே திருப்தி. சிறிய விஷயங்களிலும் மகிழ்ச்சி காண முடியும். பேராசையால் மன அமைதி சிதைவதில்லை
திருப்தி இல்லாதவர்கள் பிறருடன் ஒப்பிட்டு தங்கள் வாழ்கையை நினைத்து வருந்துவார்கள். திருப்தி அடைந்தவர்கள் தன்னிடம் இல்லாததைப் பற்றி மட்டும் கவலைப்படாமல், இருப்பதற்கும் நன்றி உணர்வுடன் வாழ்வார்கள். பணக்காரர் என்றால் அதிகம் வைத்திருப்பவர் அல்ல; கிடைத்ததில் மனநிறைவு காண்பவர்தான்.
இரக்கம்
இரக்கம் என்பது மற்றவர்களின் வலியை உணரக்கூடிய மனம். சிக்கலில் இருப்பவருக்கு எப்படி என்ன உதவி செய்யலாம் என்று சிந்திப்பதே இரக்கம்.
இவர்கள் மனிதர்களை மதிப்பார்கள், வார்த்தைகளால் யாரையும் காயப்படுத்த மாட்டார்கள். ஒரு நல்ல வார்த்தை, ஒரு ஆறுதல், ஒரு அன்பான பார்வை கூட
ஒருவரின் வாழ்க்கையை மாற்றிவிடலாம்.
மன்னிப்பு
மன்னிப்பு என்பது காயத்தை மனதில் சுமந்து கொண்டு வேதனையுடன் இல்லாமல், நம்மையே விடுவித்துக் கொள்வது.
பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம், கோபத்தை உள்ளே வைத்திருக்கும் மனநிலையால் மனம் அமைதியை இழந்துவிடுகிறது. மன்னிக்கும்போது மனதின் சுமை குறைகிறது. வெறுப்பை வெளியேற்றுகிறார்கள். உள்ளத்தில் அமைதி பெறுகிறார்கள்.
நீண்டகால கோபம் மற்றும் வெறுப்பு மன அழுத்தத்தை அதிகரிக்கும், உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். மன்னிப்பு என்பது மற்றவருக்கான பரிசு மட்டுமல்ல;
அது நமக்கே நாம் தரும் விடுதலை.
இந்த நான்கு குணங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. பொறுமை இருந்தால் கோபம் குறையும், திருப்தி இருந்தால் பேராசை குறையும், இரக்கம் இருந்தால் மனிதநேயம் வளரும், மன்னிப்பு இருந்தால் மன அமைதி கிடைக்கும்
இந்த நான்கு குணங்களும் சேர்ந்தால் உறவுகள் அழகாகும், குடும்பம் அமைதியாகும், மனம் இலகுவாகும், வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறும்
மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
