கலைஞன் மறையலாம் கலை என்றும் மறைவதில்லை என்பார்கள். என் இனிய தமிழ் மக்களே என்ற பாரதிராஜாவின் உயிர் மறைந்துவிட்டாலும், அவரது குரல் தமிழர்களின் இதயத்தில் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
இது எம்.ஜி.ஆர். படம், சிவாஜி படம் என நடிகர்களின் பெயரைச் சொல்லியே ஒரு திரைப்படத்தினை அடையாளப்படுத்தும் போக்கு இருந்த காலத்தில், இயக்குநரின் பெயரிலான படங்களாக அடையாளப்பட வைத்த மாற்றத்தை நிகழ்த்தியவர்களில் ஸ்ரீதர், பாலசந்தருக்கு அடுத்த முக்கியமான நபர். அதேநேரம், இயக்குனரின் படம் என்று முத்திரை குத்தப்பட்டு வெற்றி அடைந்தவர்களில் முதல் நபர்.
அவரது ஒவ்வொரு படமும், தமிழ் சினிமாவை கிராமத்துக்கும், வயலுக்கும், கண்மாய்க் கரைக்கும், கடல் அலைகளுக்கும் அழைத்துச் சென்றது. இன்று தமிழ் திரையுலகின் உச்சத்தில் நிற்கும் பல நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என எண்ணற்றவர்களுக்கு முதல் வாய்ப்பையும் நம்பிக்கையையும் வழங்கியவர். புதுமுகங்களை நம்புவதில் அவர் காட்டிய துணிச்சல், அபாரமானது.
பாரதிராஜாவின் காலம் என்பது தமிழ் சினிமா தனது வேர்களைத் தேடி மீண்டும் கண்டுபிடித்த காலம். இயற்கை ஒளி, இயல்பான நடிப்பு, மண்ணோடு கலந்த கதைகள், புதுமுகங்களின் துடிப்பு, இசையும் காட்சியும் ஒன்றாக இணைந்த கவிதை – இவை அனைத்தையும் ஒரு புதிய சினிமா மொழியாக மாற்றியவர் அவர்.
இயக்குநர் மறையலாம். ஆனால் அவர் உருவாக்கிய காட்சிகள் மறைவதில்லை. ஒரு மனிதர் பிரியலாம். ஆனால் அவர் விதைத்த கனவுகள் அழிவதில்லை.
பாரதிராஜா அவர்களின் தடையமின்றி தமிழ் சினிமா கிடையாது.. எதிர்காலத்திலும் ஒவ்வொரு தமிழ் சினிமாவின் படைப்புகளிலும் பாரதிராஜா வாழ்ந்துகொண்டு இருப்பார்.
