சோம்பலே நோய்… சுறுசுறுப்பே ஆரோக்கியம்

ஸ்டாலின் குணசேகரன் அனுபவங்கள்

எழுத்தாளர், வழக்கறிஞர், பத்திரிகையாசிரியர், சமூக செயற்பாட்டாளர்,தொழிற்சங்கத் தலைவர், மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர், மேடைப் பேச்சாளர், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் தலைவர் என்று பல்வேறு முகங்கள் கொண்டவர் ஸ்டாலின் குணசேகரன். இருபது நூல்கள் ஏராளமான விருதுகள் என்ற பெருமைக்குரியவர். இங்கே தனது ஆரோக்கியம் சார்ந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

“ஈரோடு அருகே மாணிக்கம் பாளையம் தான் எனது சொந்த ஊர். எனக்கு சிறுவயதில் இருந்து அமைப்பாக இயங்குவது பிடிக்கும். எனது பள்ளிப் பருவத்திலேயே நான் மாணவர் அமைப்புகளை உருவாக்கினேன். கல்லூரிக் காலத்தில் அகில இந்திய மாணவர் பெருமன்றத்தில் பொறுப்பு வகித்தேன். என்னைச் சுற்றி மனிதர்கள் இருக்க, எப்போதும் இயங்கிக் கொண்டிருப்பது எனக்குப் பிடிக்கும். எப்போதும் ஊக்கமும் செயல்பாடும் உடலைப் புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும் என்று நம்புவேன்.

எங்கள் வீட்டில் சைவம், அசைவம் இரண்டும் சமைப்பார்கள். அரிசி பருப்பு சாப்பாடு என்பது கொங்குச் சீமையில் புகழ்பெற்ற உணவு. அதை என் அம்மா அருமையாகச் செய்வார்கள். அசைவமும் அருமையாகச் சமைப்பார்கள். நான் மாணவர் இயக்கத்தில் தீவிரமாக இருந்தபோது என் நண்பர்களை எந்த நேரத்தில் அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தாலும், இரவு 10 மணிக்கு கூட அம்மா சமைத்துப் போடுவார்கள்.  மிக்ஸி, கிரைண்டர் போன்ற இல்லாத காலத்தில் அம்மா சளைக்காமல் கையால் அரைத்து செய்வார்கள். அதற்காக ஒரு நாளும் முகம் சுழித்ததில்லை. அம்மாவின் ருசியான சமையலும் விருந்தோம்பலும் சிறுவயதிலேயே என் மனதில் ஆழப் பதிந்து இருந்தன. என் நண்பர்களுக்கும் அம்மாவின் சமையல் என்றால் மிகவும் பிடிக்கும்.

நான் பள்ளிப் பருவத்திலே காந்திய சிந்தனையால் ஈர்க்கப்பட்டேன். நான் படித்த பள்ளிக்கூடத்திலேயே சத்திய சோதனை படிக்க வைத்தார்கள். அது சார்ந்து வகுப்பெடுத்தார்கள். எனவே காந்திய சிந்தனையின் பால் ஈர்க்கப்பட்டு முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள், காந்தி பிறந்த நாளின் போது ஓர் உறுதி எடுத்துக் கொண்டேன், இனி அசைவம் சாப்பிடுவதில்லை என்று .அது முதல் சைவம் தான் சாப்பிட்டு வருகிறேன். சீனா போயிருந்த போது கூட அங்கே நான் அசைவம் சாப்பிட வில்லை.

அதுமட்டுமல்ல என்னிடம் மது, புகை போன்ற எந்த கெட்ட பழக்கங்களும் கிடையாது. உணவு என்றால் நான் எளிமையான உணவு தான் எடுத்துக் கொள்வேன். மேடைப்பேச்சு, பட்டிமன்றம் என்று பல ஊர்கள், வெளிநாடுகள் என்று செல்வதுண்டு. நான் பெரும்பாலும் வெளியூர்ப் பயணங்களில் இருப்பவன்.எங்கு செல்கிறோமோ அங்கு கிடைக்கும் எளிமையான உணவுகளை நான் எடுத்துக் கொள்வேன்.

எனது ஆரோக்கியத்தைப் பார்த்து சிலர் ஆச்சரியப்படுவதுண்டு. அதில் ஒன்றும் ரகசியம் இல்லை. நான் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்குவேன். காலையில் 4:00 மணிக்கு எழுந்து விடுவேன். காலையில் எழுந்து இயங்குவது உடலுக்குப் புத்துணர்ச்சி தரும் .அப்போது உடலும் மனமும் உற்சாகமாக இருக்கும். நான் என் எழுத்து வேலைகளை விடியற்காலையில் வைத்துக்கொள்வேன். அப்போது ஒரு செயல் ஊக்கம் வரும். கருத்துக்கள் ஊற்றெடுக்கும். அதை உணர்ந்தால் தான் புரியும். எவ்வளவு தாமதமாக உறங்கினாலும் விடியற் காலையில் எழுவது எனது பழக்கம்.

நான் பள்ளி, கல்லூரிப்பருவத்தில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போன்ற அனைத்து விளையாட்டுகளிலும் கலந்து கொள்வேன். பரிசுகள் வாங்கியிருக்கிறேன். என்.எஸ்.எஸ்., என்.சி.சி போன்றவற்றில் நாட்டு நலப்பணித் திட்டங்களில் ஊக்கமாகப் பங்கெடுப்பேன். கல்லூரிக் காலத்தில் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் தேர்வு எழுத இருப்பதால் இது மாதிரி சமூக சேவைப் பணிகளில் ஈடுபட வேண்டாம் என்று கூறுவார்கள். ஈடுபட அனுமதியும் கிடைக்காது. ஆனால் அந்த விதியை மீறி நான் எனக்கு அனுமதி வாங்கி நான் ஈடுபட்டேன்.

நான் உலகம் முழுக்க சுற்றி இருக்கிறேன். ஆயிரக்கணக்கான மேடைகளில் பேசியிருக்கிறேன். இருபது நூல்கள் எழுதி இருக்கிறேன். ஆனாலும் நான் என்னை ஒரு செயல்பாட்டாளராகவே அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புவேன். ஏனென்றால் செயல்படுவது எனக்குப் பிடிக்கும். நான் தொழிற்சங்கங்களுக்கும் தலைவராக இருந்திருக்கிறேன். சிறுவயதிலிருந்து நான் செயல்பட்டுக் கொண்டே இருப்பதால் ஓய்வு, சோம்பல் என்றால் எனக்குப் பிடிக்காது. நான் கடினமான உடற்பயிற்சிகள் செய்வதில்லை. எளிமையான நடைபயிற்சி தான் செய்கிறேன். நான் எப்போதும் எனது உடல் எடையைச் சீராக பராமரிக்கிறேன்.

மனிதன் உழைக்கப் பிறந்தவன் ஓய்வெடுக்க அல்ல என்று நான் கருதுவேன். நான் சோம்பி இருப்பதை ஒரு நோய் போல எண்ணுவேன்.

நான் எந்த உணவையும் தேடிப் பிடித்து உண்பதில்லை. எளிமையான உணவுகளை கிடைக்கும் இடத்தில் உண்பேன். நான் ஒரு முறை ஒரு மலைவாழ் கிராமத்தில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வுப் பாடம் எடுக்கச் சென்றிருந்தேன். அப்போது அங்கே கிடைத்த களியை உண்டேன். இப்படி இருக்கிறதை விருப்பத்தோடு சாப்பிடுவது என்னுடைய வழக்கம்.

உலகத்தில் எத்தனையோ வகையான உணவுகள் உள்ளன. ஆனால், எனக்கு எந்த உணவின் மீதும் பெரிதாக விருப்பமில்லை. இன்று உணவு வணிகம் பெரிதாக வளர்ந்திருக்கிறது. ஆனால் நான் எளிமையாக உண்பதையே விரும்புகிறேன்.

எந்த இடத்தோடும் என்னால் பொருந்திக்கொண்டு அங்கே செயல்பட முடியும். அதேபோல் உணவு வகையிலும் அப்படித்தான். கிடைப்பதை விருப்பத்தோடு எடுத்துக் கொள்வேன்.

வேலை என்றால் எனக்கு உறக்கமோ தூரமோ நேரமோ தெரியாது. இயங்கிக் கொண்டே இருப்பது பிடிக்கும். சுருக்கமாகச் சொன்னால் ஊக்கம் தான் எனது ஆரோக்கியத்தின் அடிப்படை என்று சொல்வேன். பிடித்தவற்றில் ஊக்கமாகச் செயல்பட்டுப் பாருங்கள். ஆரோக்கியம் தானாக வரும்.

ஆக, சுறுசுறுப்பு ஊக்கம் செயல்பாடு போன்றவை தான் எனது ஆரோக்கியத்தின் ரகசியம்” இவ்வாறு ஸ்டாலின் குணசேகரன் கூறினார்.

  • அருள்செல்வன்

Leave a Comment