புதுப்புது காரணங்கள்
நிறைய பேருக்கு படுக்கையில் இருந்து எழுகையில் அல்லது ஏதேனும் ஒரு பணியில் சீரியஸாக இருக்கையில் திடீரென தலைசுற்றல் ஏற்படலாம். ஒரு சில நொடிகளில் இயல்புக்குத் திரும்பிவிடும் என்றாலும் மனதில் ஒரு பேரச்சம் உருவாகும்.
இது ஏன் வருகிறது என்று பார்த்தால் பொதுவாக உடல் பலவீனம், ரத்த அழுத்தம் ஏற்றத்தாழ்வு, சர்க்கரை குறைவு, காதில் உள்ள திரவம் சமநிலை பாதிப்பு, மன அழுத்தம், பதட்டம் போன்றவையே காரணங்களாக உள்ளன.
எப்போதேனும் ஒரு முறை வருகிறது என்றால் வீட்டில் எளிய மருத்துவம் மூலமே இதனை சரிசெய்துவிட முடியும்.
வாரம் ஒரு முறை ரத்த அழுத்த பரிசோதனையும் மாதம் ஒரு முறை சர்க்கரை பரிசோதனையும் செய்தால் தலைசுற்றல் காரணம் கண்டுபிடிக்க முடியும்.
- தினமும் குறைந்தது இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீரில் கொஞ்சம் உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்துக் குடித்தால் பலவீனம் குறையும்.’
- சிறிது இஞ்சி + சுக்கு + துளசி வைத்து கஷாயம் குடிக்கலாம். இது வாந்தி உணர்வு, மயக்கம் குறைக்க உதவும்
- படுக்கையில் இருந்து ஒருபோதும் சட்டென எழுந்து நிற்க வேண்டாம். முதலில் வலது அல்லது இடது பக்கமாக திரும்பி அமர்ந்து சில நிமிடம் கழித்து எழுந்து நிற்க வேண்டும்.
- படுக்கைக்குச் செல்லும்போதும் எழும்போதும் 10 நிமிடம் மெதுவான ஆழ்மூச்சுப் பயிற்சி செய்வது நல்ல பலன் கொடுக்கும்.
இந்த நேரத்தில் உடலுக்கு இரும்புச்சத்து அதிகம் தேவைப்படும். ஆகவே, இந்த நேரத்தில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கும் முருங்கைக்கீரை, பசலைக்கீரை, பேரிச்சம்பழம், கருப்பட்டி போன்றவை எடுத்துக்கொள்ளலாம்.
புரதச்சத்து மற்றும் ரத்தத்தில் சத்து குறைவாக இருந்தாலும் தலைசுற்றல் வரும். எனவே முட்டை, பாசிப்பருப்பு, கொண்டைக்கடலை, பாதாம், வேர்க்கடலை போன்றவை எடுத்துக்கொள்ளலாம். பழத்தில் மாதுளை, வாழைப்பழம், ஆப்பிள் எடுத்துகொள்ள வேண்டும்.
தலை சுற்றல் இருப்பவர்கள் அதிக காபி, டீ குடிப்பதை நிறுத்த வேண்டும். அதேபோல் அதிக எண்ணெய் உணவையும் தவிர்க்கவேண்டும். சரியான நேரத்தில் போதிய உணவு எடுத்துகொள்வதுடன் நல்ல தூக்கம் அவசியம். இதன் பிறகும் தலைசுற்றல் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.
