ஞானகுரு பார்வை
மது, சிகரெட் போன்ற போதைப் பொருள் வாங்குவதற்கு எந்த ஆணும் கூச்சப்படுவதில்லை. ஆனால், இப்போதும் சானிடரி பேடு வாங்குவதற்கு பெண்கள் தயங்குகிறார்கள். யார் கண்ணிலும் படக்கூடாது என்று கருப்பு பிளாஸ்டிக் கவரில் மறைத்து எடுத்துப் போகிறார்கள்.
மாதவிலக்கு புரிதல் இல்லாமல் லட்சக்கணக்கான பெண் பிள்ளைகள் படிப்பை நிறுத்துகிறார்கள். அந்த நாட்களின் அவஸ்தையை மறைப்பதற்காக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருக்கிறார்கள்.
அனைத்து துறைகளிலும் பெண்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கியிருக்கும் நிலையில், மாதவிலக்கு நாட்களில் பெண்களுக்கு லீவு வேண்டும் என்று சிலர் கோரிக்கை வைக்கிறார்கள். இது உண்மையில் பெண்களுக்கு ஆதரவான குரல் இல்லை. பெண்களை மேலும் அடிமைப்படுத்தும் குரல்.
ஏனென்றால், ஆண்களைப் போல் பெண்களால் எல்லா வேலையும் செய்ய முடியாது, பெண்கள் பலவீனமானவர்கள், பெண்கள் அடிக்கடி லீவு எடுப்பார்கள் என்றெலல்லாம் ஏற்கெனவே பொது கருத்துகள் உள்ளன. இந்த நிலையில் பெண்களுக்கு லீவு என்பதை கட்டாயமாக்கினால், பெண்களை வேலைக்கு எடுப்பதற்கு நிறுவனங்கள் தயக்கம் காட்டும் என்பதால் மகளிர் வேலை வாய்ப்பு குறைந்துவிடும். ஆணுக்கும் பெண்ணுக்குமாக ஊதிய வித்தியாசம் அதிகரித்துவிடும். அதோடு, தலைமைப் பொறுப்பைப் பெண்ணுக்குக் கொடுக்கவும் நிறுவனங்கள் தயங்கும்.
இன்னொரு வகையில் பெண்ணும் தன்னம்பிக்கை இழந்துவிடுவார். ஆண் போன்று தன்னால் அந்த நாட்களில் வேலை செய்ய முடியாது என்று அவரே நம்பத் தொடங்கிவிடுவார்.
உண்மை என்னவென்றால், அனைத்துப் பெண்களுக்கும் மாதவிலக்கு நாட்களிலும் இயல்பாக இயங்க முடியும். சத்தான உணவு, வசதியான உடை, சரியான சானிடரி பேடு, சிறு ஓய்வு மூலம் மாதவிலக்கு நாட்களை சமாளித்துவிட முடியும். சிலருக்கு மாதவிலக்கு நாட்களில் வலி, வேதனை அதிகம் என்றால், மருத்துவச் சிகிச்சை மூலம் சரிசெய்துவிட முடியும். இந்த விழிப்புணர்வை பெண்களுக்கு சிறு வயதிலிருந்தே கொடுக்க வேண்டியதே முக்கியம்.
இப்படி விழிப்புணர்வு கொடுக்காமல் சலுகை என்று லீவு கொடுப்பது, பெண் முன்னேற்றத்தை, பெண் சுதந்திரத்தை, பெண் உரிமையைப் பறித்துவிடும். பணியிடத்தில் கேட்கப்படும் விடுமுறை அடுத்து பள்ளியிலும் கேட்கப்படும். அதன் பின் மீண்டும் பெண்கள் அந்த நாட்களில் வீட்டுக்குள் முடக்கி வைக்கப்படுவார்கள்.
அதனால் ஆணுக்கு சமமானவள் என்பதை நோக்கியே பெண் நகரவேண்டுமே தவிர, சலுகைகள் பெற விரும்பக்கூடாது. வலியைக் கடந்து சாதிப்பதே பெண்ணின் வலிமை. மகிழ்ச்சியாக வாழுங்கள்.
