யாருடைய வேலைகளைப் பறிக்கப்போகிறது ஏஐ..?

அச்சத்தில் ஐடி பணியாளர்கள்

கொரோனா கிருமி பற்றி மக்களுக்கு எதுவுமே தெரியாத காலம் அது. திடீர் திடீரென மரணங்கள் நிகழ்ந்தன. எப்படிப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல் எல்லா மக்களையும் வீட்டுக்குள் போட்டு பூட்டினார்கள். கை தட்டினார்கள், விளக்கு ஏற்றினார்கள்.

ஒரு வழியாக வைரஸைக் கண்டுபிடித்து அதற்கு தடுப்பூசியும் கொண்டுவந்தார்கள். இப்போது அதைவிட பெரிய அச்சமாக வந்திருக்கிறது ஏஐ தொழில்நுட்பம். இது என்னவெல்லாம் செய்யும் என்று யாருக்கும் தெரியவில்லை. யாருடைய வேலைகளை எல்லாம் பறிக்கும் என்பதும் புரியவில்லை.

ஓவியர்களுக்கு வேலை இல்லை, எழுத்தாளர்களுக்கு வேலையில்லை. கணக்கு போடுபவர்களுக்கு வேலை இல்லை. கடிதம் எழுதுபவர்களுக்கு வேலை இல்லை.

இன்னும் என்னவெல்லாம் செய்யும்?

எழுத்து, புகைப்படம், அசைபடம், ஒலித் துணுக்கு, எல்லாவற்றுக்கும் மேலாக கம்ப்யூட்டரில் கோடிங் எழுதவும் ஏஐ உதவும். ஏஐ என்றாலே முன்பெல்லாம் எந்திர நாய், எந்திர மனிதன் என்ற யோசனை இருந்தது. ஆனால், இப்போது எல்லாமே செய்யும்.

ரோபோ என்பது ஒரு வகையில் இன்றைய நமது தேவைகளை மட்டும் செய்து தரும் மாடல். ஆனால், மனிதர்கள் மாங்கு மாங்கென்று செய்து கொண்டிருக்கும் அத்தனை வேலையையும் ஏஐ எளிதாக்குகிறது. அதனால் நேரடிப் பயன்மிக்கது.

மருத்துவம், தொழிற்சாலைகள், ராணுவம் போன்ற இடங்களில் எல்லாம் ஏஐ வந்துவிடும். உடல் உழைப்பு தரும் புளூ காலர் வேலைகளை எளிமையாக்கும். அதேபோல் உட்கார்ந்த இடத்திலிருந்து ஒரே வேலையை செய்துகொண்டிருக்கும் ஒயிட் காலர் ஜாப்களை விழுங்கிவிடும்.

இது வரை கம்ப்யூட்டர்கள் குழப்பம் இல்லாத நேரடி ஆணைகளை மட்டுமே நிறைவேற்றிவந்தன. ஆனால், ஏஐ தானே சிந்தித்து வேலையை தானாகவே மேம்படுத்திச் செய்யும்.

சாதாரணப் பிரஜைகள் இன்று ஏஐயின் மிக மேலோட்டமான சில வசதிகளை மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதேநேரம், கூகுளில் சிரமப்பட்டுத் தேட வேண்டியதை ஏஐ சாட்பாட்கள் எளிதில் பிரத்யேகமாக கொண்டுவந்து தந்து விடும். எதையும் கஷ்டப்பட்டு ஆய்வு செய்ய வேண்டியதும் இல்லை. முன்பு கூகுளில் அதிக‌ நேரம் செலவிட்டு பல படிகளில் கண்டறிந்த ஒரு தகவலை சுலபத்தில் தொகுத்துச் சொல்லி விடுகிறது.

பெரும்பாலான‌ தருணங்களில் துல்லியமான, விரிவான, வேகமான தகவல்கள் கிடைக்கிறது.  ஆனால், இந்த பயன்பாடுகள் யாவும் மேம்போக்கானவை. தீவிரமான பயன்பாடு என்றால் எங்கே எல்லாம் இம்மாதிரி தரவுகளை ஆக்க (Generate) வேண்டி இருக்கிறதோ அங்கெல்லாம் அதற்கான‌ வேலையை ஏஐ குறைத்துக் கொண்டே இருக்கிறது. உதாரணமாக உங்கள் வேலை பல புத்தகங்கள், கட்டுரைகள், கோப்புகள் படித்து ஒரு புதிய டாகுமெண்ட் எழுதுவது என்றால் இன்றிருக்கும் ஏஐ கருவிகளைக் கொண்டே உங்கள் வேலையை 90% குறைத்து விட முடியும்.

ஏஐ என்பது நாம் நம்ப முடியாத அளவு அசுர பலம் கொண்டது, நாம் கற்பனை செய்ய முடியாத வேகத்தில் வளர்ந்து வருகிறது, நாம் விரும்பாத அத்தனை மாற்றங்களையும் உண்டாக்கும். ஏஐ‍யால் நிகழப் போகும் வேலை இழப்புகளை, இன்ன பிற ஆபத்துகளை, சிக்கல்களை உலகம் எதிர்கொள்ளப் போவதுதான் அடுத்த பத்தாண்டுகளுக்கான‌ மிகப் பெரிய சவால்.

விட்டில் பூச்சிகளைப் போல் ஒரு பேரொளியை நோக்கி நடக்க ஆரம்பித்திருக்கிறோம். ஏஐ என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். அதேநேரம், மனித ஆற்றல் மிச்சப்படும் நேரத்தில் நிறைய நன்மைகளும் நடக்கும் என்றே நம்புவோம்.

ஆபரேஷன்களை ஏஐ மூலம் துல்லியமாக செய்து முடித்தால் அது மருத்துவரின் பணிச்சுமையைக் குறைக்கவே செய்யும். மிக்ஸி வந்ததும் அம்மி காணாமல் போனது போன்று ஒரு சில காணாமல் போகலாம். பழையன கழிதலும் புதியன புகுதலும் மனிதகுலத்தின் ஆகப்பெரும் சொத்து.

Leave a Comment