உங்க நாட்டில் இப்போது என்ன நேரம்..?

டிகிரி கணிதம்

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு நேரம் கணக்கிடப்படுகிறது. இப்படி நாடுகளுக்கிடையில் நேரம் ஏன் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த நேர வித்தியாசத்தை எப்படி கண்டுபிடிப்பது?

காலம், நேரம் எல்லாமே மனிதர்களால் மனிதர்களுக்கு உருவாக்கிக்கொள்ளும் ஒரு வசதியான கணித ஏற்பாடு. மற்ற எந்த உயிரினங்களுக்கும் இயற்கைக்கும் இந்த மணி, நேரம், பருவம் போன்ற கணக்கு தேவையில்லை.


பூமியின் இடங்களைத் துல்லியமாக அடையாளப்படுத்த, உலக உருண்டையின் மத்தியில் பூமத்திய ரேகை, கிடைமட்டமாக அட்சரேகைகள், செங்குத்தாக தீர்க்கரேகைகள் என கற்பனைக் கோடுகளை வரைந்துள்ளனர்.  

ஒவ்வொரு ரேகையும் ஒரு ‘ டிகிரி ‘ என்று கணக்கு. தீர்க்கரேகை அடிப்படையில்தான் சர்வதேச நேரம் கணக்கிடப்படுகிறது. தீர்க்கரேகைகளின் ‘ 0 ‘ டிகிரி ரேகை, கிரீன்விச் சர்வதேச நேரக் கணக்கின் மையப்புள்ளியாக அமைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நேரக்கணக்கில், ஒவ்வொரு தீர்க்கரேகையும் 4 நிமிடங்களைக் குறிக்கும். அதாவது, கிரீன்விச்சில் மதியம் 12 மணி என்றால் அதற்கு அடுத்த ஒன்றாவது டிகிரி ரேகையில் உள்ள இடங்களின் நேரம் 12 மணி 4 நிமிடம்.
கிரீன்விச்சிற்கும் பிற இடங்களுக்கும் உள்ள ரேகை டிகிரி வித்தியாச அடிப்படையில் நேர வித்தியாசம் தீர்மானிக்கப்படுகிறது.
உதாரணமாக, கிரீன்விச் நேரத்திற்கும் நமது இந்திய நேரத்திற்கும் ஐந்தரை மணி நேரம் வித்தியாசம். ஏனென்றால், நமது நாட்டுக்குரிய நேரக்கணக்கு தீர்க்கரேகையின் குறியீடு 82.5 டிகிரி. ஒரு டிகிரியின் மதிப்பு 4 நிமிடங்கள். எனவே 82.5 டிகிரியின் மதிப்பு 330 நிமிடங்கள். அதாவது 5 மணி 30 நிமிடங்கள்.

இந்த கணக்கு இல்லையென்றால் மனிதர்களுக்கு எல்லாமே குழப்பமாகிவிடும்.

Leave a Comment