எது லாபம் தருமோ அதுவே நஷ்டமும் தரும்

ஹோட்டல் வெற்றி ரகசியம்

மிகவும் லாபகரமான தொழிலாக கண்ணுக்குத் தெரிவது ஹோட்டல் தொழில். அதேநேரம், ஹோட்டல் தொழிலில் ஈடுபடும் 80% பேர் நஷ்டமடைந்து வெளியேறுவதாக சொல்லப்படுகிறது.

ஏன் நிறைய பேர் இந்த தொழிலை தேர்வு செய்கிறார்கள் என்பதில்தான் ஹோட்டல் தொழில் நஷ்டமடைவதற்கான காரணமும் இருக்கிறது.

எந்த ஹோட்டலைப் பார்த்தாலும் கூட்டம் மொய்க்கிறது, சுவையாகக் கொடுத்தால் எங்கிருந்தாலும் மக்கள் தேடி வருவார்கள், ஒன்றுக்கு நான்கு மடங்கு லாபம் உறுதி, சுவை உணர்வு அதிகம், நல்ல கைப்பக்குவம் உண்டு என்றெல்லாம் நம்புகிறார்கள்.

நல்ல டேஸ்ட்டான உணவைத் தேடிச் செல்கிறார்கள் என்பது எத்தனை தூரம் உண்மையோ, அதேபோல் இது மிகப்பெரும் லாபம் தருவது இல்லை என்பதும் உண்மை.

கணக்கு போட்டுப் பார்க்கும்போது நல்ல லாபம் இருப்பது தெரியும். குறிப்பாக சமையல் பொருட்கள், வாடகை, வேலையாட்கள் சம்பளம் போன்றவை கணக்கில் கொண்டுவர முடியும். அதேநேரம், தரமான உணவு, அன்பான உபசரிப்பும் முக்கியம்.

அதேநேரம், ஹோட்டல் தொடங்கிய முதல் மாதமே லாபம் வரவேண்டும் என்று நினைக்கிறார்கள். அதிகபட்சம் மூன்று மாதங்களில் லாபம் வரவில்லை என்றால் மூடிவிடுகிறார்கள். ஒரு ஹோட்டல் இருப்பது நன்கு பரவலாகத் தெரிந்து, ரெகுலர் கஸ்டமர் வரவேண்டும் என்றால் குறைந்தது 6 மாதங்களிலிருந்து 1 வருடம் வரை ஆகும். அதுவரையிலும் நஷ்டம் வருவதையும் கணக்கிட்டே ஹோட்டல் தொழில் தொடங்க வேண்டும்.

அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகளின் விலை அன்றாடம் மாறிக்கொண்டு இருக்கும். ஹோட்டல் விலையை அதற்கேற்ப மாற்றிக்கொண்டே இருக்க முடியாது. எனவே, இதையும் கணக்குப் பார்க்கவேண்டும்.

எல்லோரும் ஒரு கடையில் வந்து வாங்குகிறார்கள் என்றாலும், அவர்கள் ஏற்கெனவே பல கடைகளில் சாப்பிட்டு ஒப்பிட்டுப் பார்த்தே ஒரு கடையைத் தேர்வு செய்கிறார்கள். எனவே, ருசி, விலை, கவனிப்பு ஆகியவை ஆட்களுக்கு ஏற்ப, நேரத்துக்கு ஏற்ப மாறக்கூடாது.

மற்ற தொழில்களில் விற்பனையாகாத பொருளை அடுத்த நாள் ஸ்டாக் வைக்க முடியும். ஆனால், ஹோட்டலில் விற்பனையாகாததை குப்பையில் மட்டுமே போட வேண்டும். முதல் நாள் செய்த உணவுப் பண்டங்களை ஏதேனும் சரிக்கட்டி விற்பனை செய்ய முயன்றால் வாடிக்கையாளர்கள் எளிதில் கண்டுபிடித்துவிடுவார்கள். அப்படி செய்தது தெரிந்துவிட்டால் அது நெகடிவ்வாக மாறிவிடும். இந்த நஷ்டத்தையும் கணக்கிட வேண்டும்.

இத்தனை பேர் வருவார்கள் என்று கணக்குப் போட்டு சமைத்து வைத்திருக்கும் நேரத்தில் பெரிய மழை பெய்துவிட்டால், நிறைய பேர் வீட்டிலேயே சாப்பிட்டுக் கொள்வார்கள். எனவே, எதிர்பாராத நஷ்டத்தை தாங்கிக்கொள்ள வேண்டும்.

புரோட்டா மாஸ்டர், சர்வர், கிளீனர்கள் திடீர் திடீரென தொழில் மாறுவது ஹோட்டல் தொழிலில் சகஜம். எனவே, ஒரு நல்ல சமையல்காரர் போய்விட்டால் சுவை மாறும். அது வாடிக்கையாளரை அதிருப்தியடைய வைக்கும்.

நிறைய பேர் அன்றாடம் கணக்கு பார்ப்பதில்லை. தினமும் பணம் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருப்பதால் நஷ்டம் கண்ணுக்குத் தெரியாது. திடீரென கணக்கு பார்க்கும்போது மிகப்பெரும் நஷ்டம் வரும். அதேபோல் பார்க்கிங் பிரச்னை இருந்தாலும் ஆட்கள் வருவது குறைந்துவிடும்.

இத்தனை சிக்கல் இருந்தாலும் ஹோட்டல் தொழில் லாபகரமானது. சுவை, ரசனை மற்றும் மேலாண்மை தெரிந்தவர்களுக்கு நிச்சயம் லாபம் தரும் தொழில். நஷ்டத்தை சந்தித்து, அந்த சிக்கலைத் தீர்த்து வெற்றி காண்பவர் ஹோட்டல் தொழிலும் லாபம் அடைவார்.

Leave a Comment