ரோபோ இருக்க, டாக்டர் எதற்கு..?

  • மெடிக்கல் மிரக்கிள்

காலம் மாறிப்போச்சு என்பது காலகாலமாக சொல்லப்பட்டு வரும் விஷயம்தான். ஆனால், இப்போது உண்மையிலே மிகப்பெரும் மருத்துவ மாற்றம் நடக்கப்போகிறது.

விஞ்ஞான வளர்ச்சி அடுத்தடுத்த கட்டங்களுக்குப் போய்கொண்டே இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் மருத்துவர்களின் தேவையை ரோபோ எடுத்துக்கொண்டு, சிக்கலான அறுவை சிகிச்சையையும் திறம்பட செய்து முடிக்கும் என்கிறார்கள்.

இப்படி நடப்பதற்கு வாய்ப்பு உண்டா என்று மருத்துவ வல்லுநர்கள், தொழில்நுட்ப அறிஞர்களிடம் பேசினோம்.

அவர்கள் கூறுகையில், ‘’மருத்துவம் ஒரு கடினமான படிப்பு. மேலும் ஒவ்வொரு நாளும் நோய், மருந்துகளில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. இவற்றை எல்லாம் மருத்துவர்கள் முழுமையாக அறிந்துகொள்வது கடினம். அதேநேரம், ரோபோக்களால் இவற்றை எல்லாம் சிறப்பாக செயல்படுத்த முடியும்.

இப்போது ரோபோ அறுவை சிகிச்சை என்று சொல்லப்பட்டாலும், அதனை டாக்டர்களே இயக்குகிறார்கள். டாக்டர்கள் இல்லாமலே ரோபா அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் காலம் நெருங்கிவிட்டது. டிரைவர் இல்லாமல் கார் ஓடுவது போன்று, டாக்டர் இல்லாமல் ஆப்டிமஸ் ரோபோ மிகச் சிறந்த அறுவை சிகிச்சைகளைச் செய்ய முடியும்.

மனித ரோபோ வளர்ச்சியின் வேகத்தைப் புரிந்து கொள்ள, அதை மூன்று அதிவேக வளர்ச்சிகளால் பெருக்க வேண்டும்: ஏஐ மென்பொருளின் வளர்ச்சி, ஏஐ சிப் செயல்திறனின் அதிவேக வளர்ச்சி, மின் மற்றும் இயந்திர நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி. இவற்றால் அடுத்த பத்தாண்டுகளில் எல்லாம் மாறும். தற்போது கிடைக்கும் பராமரிப்பை விட சிறந்த மருத்துவ சேவை அனைவருக்கும் கிடைக்கும்…’’ என்கிறார்கள்.

இத்தகைய சூழலில், ‘ஏஐ பயன்பாடு அதிகரிக்கும் நிலையில் மருத்துவக் கல்லூரிக்குப் போய் மாணவர்கள் படிப்பது வீண்’ என்ற எலான் மஸ்கின் கணிப்பு சூடான விவாதங்களை கிளப்பி உள்ளது.

இதுகுறித்து மருத்துவ ஆய்வாளர்கள், ‘‘எலான் மஸ்க் சொல்வது முற்றிலும் சரி. ஏஐ விரைவில் உயர்மட்ட மருத்துவ சேவையை இலவசமாக்கி அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றும். இதனால் மருத்துவக் கல்லூரி இனி பயனற்றதாகத் தோன்றலாம்.

ஏஐ உலகை பல வழிகளில் மாற்றப் போகிறது. சுகாதாரப் பராமரிப்பு விரைவில் ஒரு பெரிய மாற்றத்தைக் காணும். மருத்துவம் ஏஐக்கான ஒரு சோதனைக் களம்.  மில்லியன் கணக்கான மாணவர்கள் மருத்துவர்களாக வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். ஆனால், அவர்கள் எல்லோருமே ரோபோவிடம் தோற்றுப் போவார்கள். இப்போது ரோபோக்களை இயக்குவதற்கு மனிதர்கள் தேவைப்படுகிறார்கள். இன்னும் சில வருடங்களில் ரோபோக்களே ஆய்வு செய்து, ரோபோக்களே சிகிச்சை அளிப்பதற்கு வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

மனிதர்களை விட துல்லியமான சிகிச்சையை ரோபோ கொடுக்கலாம். தவறு செய்வதற்கு வாய்ப்பு இல்லை என்பதால் மனிதரின் வாழ்நாள் வயது 100 ஆண்டுகள் என்பது எளிதாக மாறிவிடும்’’ என்கிறார்கள்.

இந்த யுகத்திலே புதிய மாற்றங்களைப் பார்க்கப் போகிறோம்.

Leave a Comment