84 வயது இளைஞன் கவிஞர் முத்துலிங்கம்

சாப்பாட்டில் ஆரோக்கிய ரகசியம்

நாடறிந்த திரைப்படப் பாடல் ஆசிரியர் கவிஞர் முத்துலிங்கம் 1500க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதியவர். அவற்றில் பெரும்பாலானவை பெரிய வெற்றி பெற்றவை. கலைமாமணி, பாவேந்தர் பாரதிதாசன் விருது, சிறந்த பாடலாசிரியர், கலைத்துறை வித்தகர், கபிலர் விருது போன்ற விருதுகளைப் பெற்றவர்.

முன்னாள் அரசவைக்கவிஞரான இவர், சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்தவர். தனது உடல் நலம் சார்ந்த அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

“நான் சிவகங்கை அருகே கடம்பங்குடி என்ற சிறிய ஊரில் 1942 இல் பிறந்தேன். விவசாயக்குடும்பம் .எனக்கு விவசாய வேலைகள் அனைத்தும் தெரியும். ஆனாலும் 15 வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கினேன்.

எங்கள் ஊரில் நெல், கேழ்வரகு, குதிரைவாலி விளையும். இவற்றைக் கொண்ட உணவுப் பொருள்கள்தான் சாப்பாடு. ஊரில் கோழி, மீன், ஆடு என்று அனைத்தையும் சாப்பிடுவார்கள். அம்மாவை ஆத்தா என்றுதான் அழைப்போம். ஆத்தா எது சமைத்தாலும் நன்றாக இருக்கும்.

ஆத்தாவின் கைமணத்தில் கேப்பைக்களி, குதிரைவாலி பொங்கல், அரிசி சோறு எல்லாம் அருமையாக மணக்கும்.

எனக்குத் திருமணமான பிறகு தான் 1964 இல் சென்னைக்கு வந்தேன். ஆனாலும் நான் இங்கே தனியாக நண்பருடன் அறையில் தங்கி, சமைத்துச் சாப்பிட்டேன். எளிய உணவுகளை நான் சமைப்பேன். முதலில் முரசொலி இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தேன். 1972இல் எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து விலகியதும் எம்ஜிஆர் ரசிகனாக இருந்த நானும், முரசொலியிலிருந்து விலகி அலை ஓசை பத்திரிகையில் சேர்ந்தேன். அங்கிருந்த போது இயக்குநர் பி. மாதவனின் அறிமுகத்தால் பொண்ணுக்கு தங்க மனசு படத்தில் பாட்டு எழுதினேன்.

அதற்குப் பிறகு எம்ஜிஆர் படங்களில் பாட்டு எழுதினேன். உழைக்கும் கரங்களில் கந்தனுக்கு மாலையிட்டால் பாடல் தொடங்கி மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை தொடர்ந்து எழுதினேன்.

நான் திருமணம் ஆகி மனைவியை ஊரில் விட்டுவிட்டு இங்கே பிரம்மச்சாரி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததை அறிந்த எம்ஜிஆர் என்னைக் கடிந்து கொண்டார். மனைவியைச் சென்னைக்கு அழைத்து வந்தால் தான் உனக்கு பாடல் வாய்ப்பு என்றார். அப்படித்தான் நான் மனைவியை இங்கே அழைத்து வந்தேன். எங்களுக்கு ஒரே மகள் பெயர் மோகனவல்லி. எனது மனைவியும் நன்றாக சமைப்பார். இப்போது முடியாததால் ஆள் வைத்திருக்கிறோம்.

உடற்பயிற்சி என்று நான் பெரிதாகச் செய்வதில்லை. ஆனால் நடைப்பயிற்சி உண்டு. அதாவது எங்கு போனாலும் நடந்து செல்வேன். நடக்கக்கூடிய தூரம் எவ்வளவு தூரம் என்றாலும் நான் நடந்தே செல்வேன். அது எனக்கு ஒரு நடைப் பயிற்சியாக இருக்கும்.

வண்டி வாகனங்களைப் பயன்படுத்துவதை விட முடிந்தவரை நான் நடந்து செல்வது என் வழக்கம். எனக்கு 84 வயதாகிறது ஆனாலும் எனக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம் என்று எந்த பிரச்சினையும் கிடையாது. ஆனால் தூக்கப் பிரச்சினை உள்ளது .நான் 20 ஆண்டுகளாகத் தூக்கம் இல்லாமல் இருக்கிறேன். நான் பத்திரிகையில் இரவு, பகல் என்று வேலை பார்த்து எப்படியோ எனக்குத் தூக்கம் வராமல் போய்விட்டது.

தூக்கம் வராவிட்டால் அந்த இரவை எப்படிக் கழிப்பது? உட்கார்ந்து இருந்தால் தூக்கம் வருவது போல் இருக்கும். படுத்தால் தூக்கம் வராது. அதனால் படுத்துக்கண்ணை மூடிக்கொண்டு சிந்தித்துக் கொண்டிருப்பேன் .அப்படியே எனக்குப் பழகிவிட்டது.

நாலைந்து ஆண்டுகளுக்கு முன் மருத்துவரை அணுகியபோது தூக்க மாத்திரை தான் எழுதிக் கொடுத்தார். நான்கு ஆண்டுகளாக அரை மாத்திரை அளவில் சாப்பிடுகிறேன். மருத்துவர்கள் என் பிரச்சினைக்குக் காரணம் ஏதும் சொல்லவில்லை. மாத்திரை மட்டுமே எழுதுகிறார்கள்.

மாத்திரை சாப்பிட்டால் நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் தூக்கம் வரும் .சில மணி நேரம் மட்டும் தூங்குவேன். ஐந்தரை மணிக்கு எழுந்து கொள்வேன். எப்போது படுத்தாலும் ஐந்தரை மணிக்கு எழுந்து விடுவேன். தூக்க மாத்திரை போடாவிட்டால் தூக்கம் வராது. அதற்காக மாத்திரை போடுவதா என்று நான் தவிர்த்து வருகிறேன். முன்பு சாதாரணமாகத் தெரிந்தது, இப்பொழுது உடல் சோர்வாகத் தெரிகிறது. வயதின் தன்மையும் அப்படிப்பட்டது.

இந்த பிரச்சினையால் எனக்குச் சரியாகப் பசி எடுப்பதில்லை. .நிறைய சாப்பிட முடியாது. இரண்டு வேளைதான் சாப்பிடுவேன். காலையில் நான் எதுவும் சாப்பிடுவதில்லை, காலையில் இஞ்சி டீ சாப்பிடுவேன் .மதியம் தான் எனக்கு உணவு ,அரிசி சாதம், காய்கறிகள், அசைவம் அனைத்தையும் அளவோடு எடுத்துக் கொள்வேன். சாப்பாட்டில் எனக்கு எதுவும் தள்ளுபடி கிடையாது. ஒன்றே ஒன்று. குழம்பு வகையில் கருவாட்டுக் குழம்பு மட்டும் எனக்குப் பிடிக்காது. ஆனால் வறுவல் பிடிக்கும்.

மாலையில் சுக்கு மல்லி காபி சாப்பிடுவேன். இரவு சப்பாத்தி என்று எளிமையான சிற்றுண்டி. இதுதான் எனது உணவுப் பழக்கம். பசிக்காததால் உணவு குறைந்து  அதுவே பழகிவிட்டது.

நான் அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்று அத்தனை முதல்வர்களுடனும் பழகி இருக்கிறேன். ஆனாலும் எம்ஜிஆருடன் கொண்ட பற்றும் நெருக்கமும் அதிகம். என் வாழ்க்கையில் எம்.ஜி.ஆரை மறக்க முடியாது அவரால் நான் அடைந்த பெயரும் புகழும் கொஞ்ச நஞ்சமல்ல. எனது எல்லா பெருமைக்கும் அவர்தான் காரணமாக இருந்தார்.

அவருடன் ராமாவரம் வீட்டில் நான் பலமுறை சாப்பிட்டிருக்கிறேன். நிறைய சைவ அசைவ உணவுகள் இருக்கும். அவர் சாப்பிடுவதுடன் நம்மையும் சாப்பிடச் சொல்லி வற்புறுத்திச் சாப்பிட வைப்பார்.

நான் சொந்தமாக 80 ஆயிரம் ரூபாய்க்கு வீடு வாங்கினேன் அதை ஒரு லட்ச ரூபாய்க்கு விற்று விட்டேன். இன்று அதன் மதிப்பு பல லட்சம். ஆனாலும் நண்பர்கள் மனிதர்கள் தான் எனது சொத்து’ இவ்வாறு கவிஞர் முத்துலிங்கம் கூறினார்.

  • அருள்செல்வன்

Leave a Comment