டோபமைன் ஹார்மோன் ரகசியம்
வாழ்க்கையில் சுவாரஸ்யம் இல்லை…. எதிலும் பெருசா ஆர்வம் வரமாட்டேங்குது. அப்படியே வாழ்க்கை ஓடுகிறது என்று சுணக்கமாக நிறைய பேர் பேசுகிறார்கள்.
தினசரி பார்க்கும் ஒரே மாதிரியான வேலை. அதோடு சோம்பேறித்தனம் அல்லது அலட்சியமான மனநிலை காரணமாக இப்படி பேசுகிறார்கள் என்று நினைக்கலாம்.

ஆனால், உண்மை அதுவல்ல. இப்படி பேசும் பெரும்பாலான நபர்களுக்கு உடலில் போதிய அளவுக்கு டோபமைன் ஹார்மோன் சுரக்கவில்லை என்றே அர்த்தம்.
டோபமைன் என்பது மூளையில் உற்பத்தியாகும் ஹார்மோன். ஒருவரது ஆசை, ஆர்வம், இயக்கம், கவனம் போன்ற உணர்வுகளை இந்த டோபமைன் ஹார்மோனே கட்டுப்படுத்துகிறது.
காலையில் எழும்போது இனம் தெரியாத உற்சாகம், மகிழ்ச்சி கிடைக்கிறது என்றால் போதிய அளவுக்கு டோபமைன் சுரந்திருக்கிறது என்று அர்த்தம். அதேபோல் ஒரு வேலை செய்து முடித்ததும் மனதுக்குள் சந்தோஷம் வருவதற்கும், மாணவன் ஆர்வமாகப் படிக்க அமர்வதற்கும் இந்த ஹார்மோன் அவசியம்.
போதிய அளவு டோபமைன் சுரப்பு இல்லாதவர்கள் கடமைக்காக வாழ்வார்கள். மனச்சோர்வு, அலட்சியம், ஆர்வமின்மை என டல்லான மனநிலையில் இருப்பார்கள்.
இந்த பிரச்னையை மாற்றி, டோபமைன் சுரப்பை அதிகரிப்பது வெகு சுலபம். சத்தான உணவு, வெயில், நடைபயிற்சி ஆகியவற்றுடன் நல்ல தூக்கம் மட்டுமே போதும். குறிப்பாக இரவு 10 – 12 மணியளவில் டோபமைன் சுரப்பு அதிகம் இருக்கும். எனவே, அந்த நேரத்தில் உறங்குபவர்களுக்கு டோபமைன் அதிகம் கிடைக்கிறது.
டோபமைன் மகிழ்ச்சி தரும் ஹார்மோன் அல்ல, மகிழ்ச்சி பெறும் முயற்சிக்கான ஹார்மோன். முயற்சி, முன்னேற்றம், வெற்றி, கொண்டாட்டத்துக்கான ஹார்மோன். எனவே, தொடர்ந்து சோர்வாக, சோம்பலாக இருப்பவர்கள் டோபமைன் பரிசோதனை செய்துகொள்ளுங்கள், மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்
