தங்கம் விலை எப்போது குறையும்..?

பணமே மந்திரம்

தங்கம் விலை கிடுகிடுவென ஏறிவிட்டது. டிரம்ப் ஆட்சி முடியும் வரையிலும் தங்கம் குறையாது என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இது உண்மையா..?

முதலில் தங்கம் விலை எப்படி முடிவு செய்யப்படுகிறது என்று பார்க்கலாம். தங்கம் விலையை சர்வதேச அளவில் நிர்ணயம் செய்வது லண்டனில் உள்ள லண்டன் புல்லியன் மார்க்கெட் அசோசியேஷன் என்ற LBMA அமைப்பு.

தினமும் லண்டன் நேரப்படி காலை 10:30 மற்றும் மதியம் 3:00 மணிக்கு மின்னணு ஏலம் மூலம் விலை முடிவு செய்யப்படுகிறது. ஆனால் கவனிக்க வேண்டிய விஷயம் லண்டன் சந்தையில் விலை அமெரிக்க டாலரில் மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது.

இதில் இந்திய வரி, ஜிஎஸ்டி மொத்தம் ஒன்பது சதவீதம். இந்திய அரசு நினைத்தால் வெறும் இந்த 9 சதவீதத்தை மட்டும் தான் கட்டுப்படுத்த முடியும்.

டாலரை இந்திய ரூபாய்க்கு மாற்றும்போதுதான் நமக்கு அடி விழுகிறது. இது நிச்சயம் 100 ரூபாயைத் தொட்டுவிடும் என்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம் ஊசி முதல் மொபைல் வரை அனைத்தையும் நாம் இறக்குமதி செய்கிறோம். அதனால் அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது.

எனவே, டிரம்ப்புக்குப் பிறகு யார் ஆட்சிக்கு வந்தாலும் டாலர் மதிப்பு இப்போதைக்குக் குறையாது. நாம் இறக்குமதியைக் குறைத்து ஏற்றுமதியை அதிகரித்தால் மட்டுமே தங்கத்தின் விலையும் குறையும்.

தங்கம் விலை குறைய வேண்டுமென்றால், கீழ்க்கண்ட மூன்று விஷயங்களில் ஏதேனும் ஒன்று நடக்க வேண்டும்:

  1. அமைதியான உலகச் சூழல்: போர் மேகங்கள் (உக்ரைன், மத்திய கிழக்கு நாடுகள்) விலகி, உலக நாடுகள் அனைத்தும் அமைதியாக வியாபாரத்தில் கவனம் செலுத்தினால், மக்கள் ‘பாதுகாப்பான முதலீடு’ (Safe Haven) என்ற பெயரில் தங்கத்தை வாங்குவதைக் குறைப்பார்கள். அப்போது விலை குறையும்.
  2. வட்டி விகிதம் உயர்வு: அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி (US Fed Reserve) வட்டி விகிதத்தை உயர்த்தினால், முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்றுவிட்டு டாலரில் முதலீடு செய்வார்கள். இது தங்கத்தின் சர்வதேச விலையைக் குறைக்கும்.
  3. மத்திய வங்கிகளின் விற்பனை: இந்தியா, சீனா போன்ற நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தைச் சேமிப்பதை நிறுத்திவிட்டு விற்கத் தொடங்கினால் விலை சரியும். ஆனால், தற்போது அனைத்து நாடுகளும் தங்கத்தைச் சேமிப்பதில்தான் குறியாக உள்ளன.

எனவே, தங்கம் விலை குறையும் என்று காத்திருப்பது ஓடும் ரயிலைப் பிடிக்கக் காத்திருப்பது போன்றது. எனவே, விலை குறைவுக்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் சாத்தியமே இல்லை. கொஞ்சம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக தங்கம் கண்ணாமூச்சு காட்டுமே தவிர, விலை குறையாது. எப்போது டாலர் மதிப்புக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்கிறதோ, அப்போதுதான் தங்கத்தின் விலை குறையும்.

எனவே, கொஞ்சம் கொஞ்சமாக தங்கம் சேகரித்துக்கொண்டே இருங்கள்.

Leave a Comment