கண்ணீர் சிந்துங்கள் பாஸ்
குழந்தைகளும் பெண்களும் அழுதே காரியம் சாதித்துக் கொள்கிறார்கள். அதேநேரம், ஆண் அழுவதை பலவீனமாகப் பார்க்கிறார்கள். ஆண்கள் அழவில்லை என்றால் இதயத்தில் பாதிப்பு வரலாம் என்பதுதான் மருத்துவ உண்மை.
அழுகை மனித உடலுடன் ஒட்டிப்பிறந்த செயல். வெங்காயம் வெட்டும்போது, புகையினால் எல்லோருக்கும் கண்ணீர் வரும். கண்கள் உலராமல் பாதுகாக்கவும் கண்ணீர் வரும். இந்த கண்ணீருக்கு ஆண், பெண் வித்தியாசம் கிடையாது.
அதேநேரம், வலி, துன்பம், ஏமாற்றம், பயம், அவமானம், மகிழ்ச்சி போன்ற தருணங்களில் வரும் பெண் அழுவதை இயல்பாகவும், ஆண் அழுவதை அவமானமாகவும் பார்க்கிறார்கள்.
பொதுவாக மருத்துவரீதியாக அழுகை உடலுக்கு ஐந்து நன்மைகள் செய்கிறது.
- எமோஷனல் கண்ணீரில் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களான அட்ரனலின், கோரிடிசோல் போன்ற ரசாயனங்கள் கலந்து வெளியேறுகின்றன. எனவே மன அழுத்தம், எதிர்மறை எண்ணம் வெளியேறுகிறது. தோல்வி, துயரத்தில் மனம் விட்டு அழுத பிறகு, தன்னம்பிக்கை வருகிறது.
- அடக்கிவைத்த உணர்ச்சிகள் வெளியேறிவிடுவதால் கோபம் வெடிக்காமல் தடுக்கப்படுகிறது. மனம் இளகிய நிலைக்கு மாறிவிடும். மற்றவர்களின் அனுதாபம் அதிகரிக்கவும், நம்பிக்கை பெறவும் அழுகை உதவுகிறது.
- மனிதர்களின் மன நிலையில் துக்கம், சோகம் அதிகரிப்பதற்கு மாங்கனீஸ் அதிகரிப்பு முக்கிய தாக்கமாக இருக்கிறது. அழும்போது உடலில் மாங்கனீஸ் குறைவதால், மன நிலையில் நிம்மதியான மாற்றம் ஏற்படுகிறது. எண்டோர்பின் சுரந்து நல்ல தூக்கம் வரும்
- கண் இமைகள் மற்றும் விழிகளுக்கு இடையிலான பகுதியை கண்ணீர் சுத்தம் செய்கிறது. இதனால் பார்வை தெளிவாகிறது. அதோடு கண்ணீரில் இருக்கும் லைசோசைமை (Lysozyme) பாக்டீரியாக்களை அழிக்கிறது. இந்த நச்சுகள் வெளியேறுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
- இயற்கை முறையில் ரத்த அழுத்தம் சீராவதற்கும் இதயத்தைப் பாதுகாக்கவும் அழுகை சிறந்த வழி. இதயத் துடிப்பு குறைவதற்கும் உடல் தளர்வு அடையவும் தசைகளின் இறுக்கம் குறையவும் அழுகை பயன்படுகிறது.
இத்தனை நன்மைகள் இருப்பதால் ஆண் அழுவதில் தவறு இல்லை. அழுகையைக் கட்டுப்படுத்தும் ஆண்கள் கோபமாக மாறுகிறார்கள். மது, புகை போன்ற அடிமை பழக்கங்களுக்கு ஆளாகிறார்கள். உணர்ச்சிகளை அடக்கும்போது கார்டிசோல் ஹார்மோன் அதிகரித்து இதயம் பலவீனமாகும்.
அழுவதற்குத் தயக்கமிருந்தால் தனிமையில் அழலாம் அல்லது எழுதலாம். அழுகை என்பது மனிதத் தன்மையின் அடையாளம். கண்ணீர் சிந்துபவர் உடைந்துபோவதில்லை, தன்னை மீட்டெடுத்துக் கொள்கிறார்.
அதேநேரம், சின்னச்சின்ன விஷயங்களுக்கும் அழுவது, ஒரே விஷயத்துக்கு மீண்டும் மீண்டும் அழுவது சரியல்ல. வாய் விட்டு சிரித்தால் மட்டுமல்ல, மனம் விட்டு அழுதாலும், நோய் விட்டு போகும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
