பட்டினத்தார் காட்டும் வழி
மரணம் எப்போது என தெரிந்துவிட்டால் வாழ்நாள் நரகமாகிவிடும் என்று சிலர் சொல்வதுண்டு. மரணம் அருகில் நிற்பது தெரிந்துவிட்டால் மனிதர்கள் பிறருக்குத் துன்பம் இழைக்க மாட்டார்கள். வாழும் நாட்களை மகிழ்ச்சியாக வாழ்ந்து கழிப்பார்கள்.
ஏனென்றால் இந்த வாழ்க்கையில் எதுவுமே இல்லை என்ற உண்மை தெரிந்துவிட்டால், காணும் அத்தனையிலும் இன்பத்தைக் காண முடியும்.
எது முக்கியம் என்று தேடி அலைகிறோமோ, அதுவே நிலையாமை. உடல், செல்வம், உறவுகள் அனைத்தும் நிரந்தரமற்றவை என்கிறார் பட்டினத்தார்.
ஊரும் சதமல்ல – உற்றார் சதமல்ல – உற்றுப் பெற்ற
பேருஞ் சதமல்ல – பெண்டில் சதமல்ல – பிள்ளைகளுஞ்
சீரும் சதமல்ல – செல்வம் சதமல்ல – தேசத்திலே
யாரும் சதமல்ல
என்ற பாடல் நிலையாமைக்கு நல்ல எடுத்துக்காட்டு.
உடல் அழகு
பட்டினத்தார் பாடலின்படி இந்த உடல் மண்ணில் மடிந்து போகக்கூடியது. காய்ந்து போன மார்பு, சுருங்கிய தோல் என உடலின் அழியும் தன்மை கொண்டது. இதை போய் கொண்டாடுவது சரியா.? உண்ட உணவு மலம் ஆவதைப் போல, உடலும் ஒரு நாள் அழிந்து போகும் என்பதால் உடல் மீது பற்று கொள்வது வீண். இளமையைக் கொண்டாடிய இதே உடல், இன்று முதுமையால் சுருங்கிப் போகிறது.
செல்வம்
செல்வம் இருந்தால் வாழ்நாள் மகிழ்ச்சியாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். எந்த செல்வமும் நிரந்தரம் இல்லை. பணம், வீடு, சொத்து, சுகம், பிள்ளைகள் போன்ற எல்லாமே குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே இருக்கும்.
உறவுகள்
வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ?” என்ற பாடல் போன்று இறுதிப் பயணம் வரை யாரும் துணையாக வரமாட்டார்கள். கண்ணே மணியே என்று கொஞ்சிய தாயும், உயிரே என்று உருகிய மனைவியும், மூச்சு நின்ற பின் நம்மைச் சுடுகாட்டில் விட்டுவிட்டுத் திரும்பி விடுவார்கள்.
முதுமை
இயற்கையில் வாழும் மிருகங்களைப் பாருங்கள். ஒரு பறவையோ, மாடோ தான் சாகும் வரை தன் வேலைகளைத் தானே செய்கிறது. யாரிடமும் கையேந்துவதில்லை. ஆனால், மனிதன் மட்டும் வயதாகிவிட்டது, நோய் வரும் என்று நம்பியே இயலாமையை வரவழைத்துக் கொள்கிறான். முதுமை என்பது உடலில் இல்லை, அது உங்கள் நம்பிக்கையில் இருக்கிறது.
முடிசார்ந்த மன்னரும் முடிவில் பிடி சாம்பல் என்பதை மறவாதிரு மனமே. என்ற பட்டினத்தார் பாடலை மனதில் வைத்திருந்தால் எல்லாம் நலமாகும்.
