ஞானகுரு தரிசனம்
கேள்வி : தேடல், பயிற்சி இவை வாழ்வின் முன்னேற்றத்திற்கு எவ்வளவு உதவும்..?
- டி.வரதராஜன், என்.ஜி.ஓ. காலனி.
ஞானகுரு :
ஆசைக்கும் தேடுதலுக்கும் இடையில் மாபெரும் வித்தியாசம் இருப்பது நிறைய பேருக்குப் புரிவதில்லை. இளம் வயதினர் பெரும்பாலோருக்கு சினிமா கலைஞராகும் ஆசை இருக்கும். ஆனால், சினிமாவே வாழ்க்கை என்று அதனை நம்பி தேடிச் செல்பவர்கள் வெகு சிலரே. அந்த வெகு சிலரில் முறையாகப் பயிற்சி எடுத்து வெற்றியைத் தொடுபவர் ஒரு சிலரே.
ஆனால், நான் சினிமா கலைஞனாக ஆசைப்பட்டேன், அது நடக்கவில்லை என்று சொல்லி தங்கள் திறமையை யாரோ தடுத்து நிறுத்தியது போன்று வருந்துபவர்களே அதிகம். எந்த ஓர் ஆசையும் தானாக நிறைவேறாது, ஆசையை தேடுதலாக்கும் அளவுக்கு தீவிரம் இருந்தால், அந்த தேடுதலுக்குத் தேவையான பயிற்சியும் எடுத்துக்கொண்டால் மட்டுமே முன்னேற்றம் சாத்தியமாகும்.
……………………………..
கேள்வி : ஞாபகசக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம்..?
- டி.பவினா துரைராஜ், முத்தால் நகர்.
ஞானகுரு :
கம்ப்யூட்டர் பாணியில் சொல்வது என்றால் ஒவ்வொரு மனிதரின் மனதிலும் ஆயிரம் ஜிபி அளவுக்குத் தகவல்கள் சேகரமாகி இருக்கிறது. அந்த தகவல்கள் சரியான ஆர்டரில் சேர்த்து வைக்கப்பட்டிருந்தால், அவற்றை தேடி எடுப்பது மிகவும் சுலபமாக இருக்கும். எந்த தகவலும் ஒருபோதும் அழிவதே இல்லை என்பதுவே மனித உடலின் மகத்தான சக்தி. யோசித்து யோசித்துப் பார்த்துக்கொண்டே இருந்தால், எத்தகைய நினைவுகளையும் மீட்டுவிட முடியும். எனவே ஞாபகம் வைத்துக்கொள்ள விரும்புபவர்கள், அதற்கும் திட்டமிட வேண்டும்.
குறிப்பாக வீட்டின் ஸ்பேர் சாவி, வாகனத்தின் ஸ்பேர் சாவி போன்றவைகளை எல்லாம் போட்டு வைப்பதற்கென பிரத்யேகமாக ஒரு பை உருவாக்கி, அதனை வீட்டில் குறிப்பிட்ட இடத்தில் வைத்திருந்தால், எந்த நேரத்தில் தேவைப்பட்டாலும் சுலபமாக எடுத்துவிட முடியும். அப்படித்தான் படிப்பதற்கும் திட்டமிடல் வேண்டும். ஆழ்ந்து தெளிவாக படித்தல், குறிப்புகள் எடுத்துவைத்துப் படித்தல், எழுதிப் பார்த்தல் ஆகியவற்றை கடைப்பிடித்தால் ஞாபகம் நிலைத்து நிற்கும். வெறுமனே வெண்டைக்காய் சாப்பிட்டு நீடித்த ஞாபக சக்திக்கு ஆசைப்பட்டால் ஏமாற்றமே கிடைக்கும்.
