ஞானகுரு பதில்கள்
கேள்வி : ஆங்கிலப் பள்ளிகளால் தமிழ் அழிவை நோக்கி நகர்கிறதா..?
- என்.மாரியப்பன், காந்திநகர்.
ஞானகுரு :
என்றாவது ஒரு நாள் உலகம் முழுவதும் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே இனம் எனும் நிலை நிச்சயம் வரத்தான் போகிறது. அதுவே மனிதகுலத்திற்கு அவசியம். அப்படியொரு காலகட்டத்தில் ஏதேனும் ஓர் எளிமையான மொழி காலத்தைத் தாண்டி நிலைத்து நிற்கும். நிச்சயம் தமிழ் அப்படி இருக்கப்போவதில்லை.
……..
கேள்வி : குடும்ப உறவுகள் மேம்பட மெளனம் தேவையா, கலகலப்பு அவசியமா..?
- பி.கார்த்தீஸ்வரி, அல்லம்பட்டி.
ஞானகுரு :
வீட்டில் எல்லோரும் அமைதியாக இருந்தால், அது நூலகமாகக் காட்சியளிக்கும். எப்போதும் சண்டையும் சச்சரவுமாக இருந்தால் சந்தையாக மாறிவிடும். எனவே கலகலப்பு, சண்டை, சமாதானம் என எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் இருக்கத்தான் வேண்டும். ஆனந்த அனுபவம் கிடைக்கும்போது அதனை ஆர்ப்பாட்டமாக பகிர்வதற்கும், சோகம் ஏற்படும்போது தனிமையும் அமைதியும் கொடுப்பதே நல்ல குடும்பத்துக்கு அழகு.
