பெற்றோருக்கு அடங்காத பிள்ளைகள் என்னாவாகும்?

ஞானகுரு தரிசனம்

கேள்வி : அதியமான் ஒளவைக்கு நெல்லிக்கனி கொடுக்க காரணம் என்ன..?

  • பி.முருகன், பாத்திமா நகர்.

ஞானகுரு :

அரசனை பாடும் புலவர்கள் அனைவருமே பரிதாபத்துக்குரியவர்கள். தங்கள் வறுமை தீர்வதற்காக அரசர்களை இந்திரனே சந்திரனே என்றெல்லாம் புகழ்ந்து பாடல் புனைந்து பரிசு பெற்றுச் செல்வார்கள். ஒளவையும் வஞ்சகம் இல்லாமல் பாராட்டுபவர் என்றாலும், செல்வத்தைத் தேடாமல் நல்ல தமிழுக்காக உழைத்தவர். அதனாலே, மிகவும் கஷ்டப்பட்டு பறித்த அரிய நெல்லிக்கனியை தான் சாப்பிடுவதைவிட ஒளவை சாப்பிடுவது தமிழுக்கு நல்லது என்று அதனைக் கொடுத்தான் அதியமான். இதனை நெல்லிக்கனியின் நன்மை சொல்லக்கூடிய பாடல் என்று எடுத்துக்கொண்டால் போதும். சாகாவரம் என்பதும் அரிய கனி என்பதும் புலவரின் கற்பனை.

……………….

கேள்வி : தாய், தந்தைக்கு அடங்காத பிள்ளையை என்னவென்று சொல்வது..?

  • ஏ.அனந்தி, சிவகாசி.

ஞானகுரு :

பிள்ளைகளை அடக்கி வளர்க்க வேண்டிய அவசியம் இல்லை. பிள்ளைகளுக்கு பெற்றோரிடம் பயம் தேவையில்லை. ஆனால் உண்மை பேசுதல், பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருத்தல், மற்றவர்களை மதித்தல் போன்ற அடிப்படைக் குணங்களை பிள்ளைகளுக்கு நிச்சயம் கற்றுக்கொடுக்க வேண்டும்.

செல்லம் என்ற பெயரில் இந்த பண்புகளில் அசட்டை காட்டினால் பெற்றோருக்கு மட்டுமல்ல, பிறருக்கும் தொந்தரவாக மாறிவிடுவான். பின்னர் சட்டம் தன் கடமையை செய்யும்.

Leave a Comment