ஞானகுரு தரிசனம்
கேள்வி : படிக்காத மேதை காமராஜ், படித்த மேதை அப்துல்கலாம் எப்படி வெற்றியைத் தொட்டார்கள்..?
- கே.தனலட்சுமி, என்.ஜி.ஓ.காலனி
ஞானகுரு :
ஏதாவது ஒன்றை ஆழமாகப் பற்றிக்கொண்டால் நிச்சயம் உயர்ந்த நிலைக்குச் சென்றுவிட முடியும். காமராஜர் மக்களை அன்புடன் பற்றிக்கொண்டார். அப்துல் கலாம் படிப்பை கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். அது, அவரை எங்கேயோ கொண்டுபோய்விட்டது.
எதை பிடித்துக்கொள்கிறோம் என்பது முக்கியமல்ல, எதைப் பிடித்தாலும் உறுதியுடன் பிடிக்க வேண்டும் என்பதையே இவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
…………………
கேள்வி : மனிதனாய் பிறந்தவர்கள் மீண்டும் பிறக்க வேண்டாம் என்று நினைப்பதற்கு அதாவது மறுபிறவி வேண்டாம் என்பதற்கு என்ன காரணம்..?
- எல்.நர்மதா, சூலக்கரை மேடு.
ஞானகுரு :
அடுத்த பிறவியில் நீ ஒரு இளவரசியாகப் பிறந்து அரசியாகப் புகழ்பெற்று நீண்ட காலம் வாழ்வாய் என்று ஆருடம் சொன்னால், அத்தனை பேரும் மறுபிறவிக்கு ஆசைப்படுவார்கள். ஆனால், சாமியார்களும் ஜோதிடர்களும் அடுத்த பிறவியில் நீ கழுதையாகப் பிறக்கலாம் அல்லது தரித்தரம் பிடித்த குடும்பத்தில் பிறக்கலாம் என்றுதானே பயம் காட்டுகிறார்கள். ஆகவே, இப்போது வாழ்வதைவிட மோசமான வாழ்வு மீண்டும் வேண்டவே வேண்டாம் என்று பயப்படுகிறார்கள். மறுபிறவி எனும் கனவைக்கூட சந்தோஷமாக காண முடியாத அப்பாவிகள்.
