ஞானகுரு தரிசனம்
கேள்வி : பணம் தான் வாழ்க்கை என்று எல்லோரும் சொல்ல ஆரம்பித்துவிட்டார்களே… இது சரியா..?
- ஏ.எஸ்.இராஜேந்திரன், வெள்ளூர்.
ஞானகுரு :
விரும்பியதை எல்லாம் கொடுப்பவரே கடவுள். அந்த வகையில் பணம் இருந்தால் வேண்டியதை எல்லாம் வாங்க முடியும். அதனால் பணத்தை பிரதானமாகக் கருதுகிறார்கள்.
அதேநேரம், பணம் நம்பிக்கை தரும் அளவுக்கு மகிழ்ச்சி தருவதில்லை. எனவே எவ்வளவு பணம் போதும் என்று முடிவெடுக்க வேண்டியது அவசியம்.
ஒரு விதை நன்கு வளரவேண்டும் என்றால் மண், தண்ணீர், சூரிய ஒளி என்று எல்லாமே போதுமான அளவுக்கு இருக்க வேண்டும். அப்படித்தான் பூமியில் பிறந்த மனிதர்களுக்கு முதல் தேவை ஆரோக்கியம். இதையடுத்து பணமும் இருந்தால்தான் மண்ணில் நல்லவண்ணம் வாழ முடியும். ஆகவே, பணத்தை தேடுவது தவறு அல்ல. பணம் ஓரளவு சேர்ந்த பிறகும், மேலும் மேலும் தேவை என்று தேடுவதுதான் முட்டாள்தனம்.
…………….
கேள்வி : மழை பெய்தால் வீடுகள் தண்ணீரில் மிதப்பதற்கு காரணம் இயற்கையா.. மனிதனா..?
- ஏ.எஸ்.இராஜேந்திரன், வெள்ளூர்.
ஞானகுரு :
இயற்கையை தெளிவாக அறிந்துகொள்ளும் அளவுக்கு இன்னமும் மனிதனின் மூளை வளரவில்லை என்பதையே இந்த பேரிடர் சுட்டிக் காட்டுகிறது. கண்டிப்பாக மனிதனால் இதுபோன்ற இயற்கை பேரிடர்களை சந்திக்கவும் சமாளிக்கும் அளவுக்கு வளர்ச்சியடைய முடியும். அதேநேரம், எத்தனை வளர்ச்சி அடைந்தாலும் இயற்கையிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள மட்டுமே மனிதனால் முடியுமே தவிர, ஒருபோதும் இயற்கைக்கு கட்டளையிட முடியாது.
இயற்கையால் மனிதனை அழிக்க முடியுமே தவிர, மனிதனால் இயற்கையை அழிக்கவும், சிதைக்கவும் முடியாது. இந்த மனிதர்களும் இவர்கள் உருவாக்கும் மாசுகளும் இயற்கையின் பிரமாண்டத்தின் முன்பு ஒன்றுமே இல்லை.
