இப்படி ஆசைப்பட்டால் துன்பம் வராது..!

சந்தோஷத்திற்கு வழிகாட்டி

ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்றார் புத்தர். ஆனால், துன்பம் வராமல் ஆசைப்பட முடியும் என்பதே உண்மை. ஆம், குட்டிக் குட்டியாக ஆசையை வளர்த்துக்கொண்டால் வாழ்க்கையில் துன்பம் நேராமல் தப்பித்துக்கொள்ள முடியும் என்கிறார் ஞானகுரு

எதற்காக சின்னச்சின்னதாக ஆசைப்பட வேண்டும்..?

வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் சந்தோஷமாக இருப்பதுதான். சந்தோஷமாக இருப்பதற்கு பல்வேறு ஆசைகள் நிறைவேற வேண்டும். பெரிதாக ஆசைப்பட்டால் அதனை நிறைவேற்றுவது கடினம். அந்த ஆசை நிறைவேறும் வரை சந்தோஷம் கிடைக்காது. மேலும் பெரிய ஆசைக்காக சின்னச்சின்ன சந்தோஷங்களை தியாகம் செய்யவேண்டி இருக்கும். ஒருவேளை பெரிய ஆசை நிறைவேறவில்லை என்றால் வாழ்க்கையே நரகமாகத் தெரியும்.

பெரிதாக ஆசைப்பட்டால்தானே வாழ்க்கையில் முன்னேற முடியும்?

லட்சியம் பெரிதாக இருக்கலாம் ஆனால் அதனை அடையும் வழியில் ஏராளமான சின்னச்சின்ன ஆசைகள் இருக்கவேண்டும். பெரிய குறிக்கோளை அடைவதற்கு முன்பு, அந்த குறிக்கோளை சின்னச்சின்னதாக பிரித்துக்கொள்ள  வேண்டும். ஐந்து வருடங்களில் இரண்டாயிரம் அடியில் ஒரு சொந்தவீடு கட்ட வேண்டும் என்ற குறிக்கோள் இருக்கலாம். இந்த குறிக்கோளை 20 சின்னச்சின்ன ஆசைகளாக மாற்றிக்கொள்ளலாம். ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட பணம் சேர்ப்பது, இடம் தேர்வு செய்வது, வில்லங்கம் இல்லாமல் வாங்குவது, வரைபடம் தயார் செய்வது, கட்டுமானப் பொறியாளரை தேர்வு செய்வது என பிரித்துப்பிரித்து திட்டம் போடுவது நல்லது. ஒவ்வொரு திட்டம் நிறைவேறியதும் மனதுக்கு சந்தோஷமும் நம்பிக்கையும் வரும். வீடு கட்டும் குறிக்கோள் தள்ளிப்போனாலும் துன்பமாகத் தெரியாது. சரியான பாதையில் போகும் இன்பம் தெரியும்.

சின்னச்சின்னதாக ஆசைப்பட்டால் வாழ்க்கை சந்தோஷமாக இருக்குமா?

சின்ன ஆசைகள் நிச்சயம் சந்தோஷம் தரும். அந்த சந்தோஷத்தை தக்கவைக்கும் சாமர்த்தியம் வேண்டும். ஏனென்றால் ஒருவருக்கு எல்லாமும் எப்போதும் கிடைத்தாலும் மனம் சந்தோஷம் அடைவதில்லை. தன்னிடம் இல்லாத ஒன்றைத் தேடி ஏமாற்றம் அடையும். அதனால் மகிழ்ச்சி ஒரே இடத்தில் நிற்பதில்லை என்ற உண்மையைப் புரிந்துகொண்டு, அதனை பிடித்துவைப்பதுதான் முக்கியம்.

மகிழ்ச்சியைப் பிடித்துவைப்பது எப்படி?

ஒரு பெரிய ஹோட்டலுக்குப் போய் சாப்பிடுவது சந்தோஷமாக இருக்கும். ஆனால் அடுத்த சாப்பாட்டு நேரத்தில் அந்த சந்தோஷம் மறைந்துவிடும். மீண்டும் எப்போது அதைவிட உயர்ந்த ஹோட்டலுக்குப் போய் சாப்பிடலாம் என்று நினைக்காமல்… ஹோட்டலில் எத்தனை நிறைவாக சாப்பிட்டோம் என்பதை நினைத்து நினைத்துப் பார்த்தால், சந்தோஷத்தை பிடித்துவைக்க முடியும். அதனால் உன்னிடம் என்ன இருக்கிறதோ அதனை உயர்வாக, சந்தோஷமாக நினை. அதுதான் நீடித்த சந்தோஷம் தரும்.

Leave a Comment