மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிப்பதில்லையே ஏன்..?

ஞானகுரு பதில்கள்

கேள்வி : மகிழ்ச்சி அல்லது துக்கமான தருணம் வாழ்வில் எத்தகைய மாற்றத்தை தரும்..?

  • எம்.கார்த்திகைச் செல்வி, கங்கைதெரு.

ஞானகுரு : ஒரு திரைப்படத்துக்குப் போகிறீர்கள். நல்ல நகைச்சுவைக் காட்சிக்கு சந்தோஷமாக சிரித்து மகிழ்கிறீர்கள். சோகமான காட்சிக்கு உங்கள் நெஞ்சமும் பதைபதைக்கிறது. படம் உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்றால் சந்திக்கும் நபர்களிடம் எல்லாம் சிலாகித்துப் பேசுகிறீர்கள். பிடிக்கவில்லை என்றால் நேரம் வேஸ்ட் என்று, உங்கள் வேலையைப் பார்க்கத் தொடங்கிவிடுகிறீர்கள். இப்படித்தான் வாழ்க்கையை எடுத்துக்கொள்ள வேண்டும்.

மகிழ்ச்சியான தருணங்களை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்து சந்தோஷத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும்… துக்கமான விஷயங்களை எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் மறக்க வேண்டும். இதனை கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டால் வாழ்க்கை சக்கரம் சுலபமாகிவிடும்.

ஆனால், பெரும்பாலான மனிதர்கள் சின்னச்சின்ன துக்கங்களை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்து பெரிதாக்கிக்கொள்கிறார்கள். ஆனால், மகிழ்ச்சி நேரத்தை மறந்துவிடுகிறார்கள். மகிழ்ச்சியை நினைத்து நினைத்து கொண்டாடுங்கள்

கேள்வி : உறவு எனும் வட்டத்திற்குள் வாழ்வது மகிழ்ச்சியா… பயிற்சியா..?

  • கே.இந்திராகண்ணன், அல்லம்பட்டி.

ஞானகுரு :

மனிதனை ஒரு சமுதாய விலங்கு என்றே சொல்ல வேண்டும். தனித்து யாரும் வாழ்ந்துவிட முடியாது. உணவு, உடை, உறையுள் என எல்லா விஷயங்களுக்கும் ஏகப்பட்ட மனிதர்களின் உதவி தேவைப்படுகிறது. மருத்துவம், வேலை போன்ற காரணங்களுக்காக முகம் தெரியாத மனிதர்களிடம் உதவி பெறுவதற்கு யாரும் தயங்குவதே இல்லை.

அதேநேரம், நெருங்கிய உறவுகளிடம் உதவி பெறுவதற்கும், உதவி செய்வதற்கும் கணக்கு பார்க்கிறார்கள். இது தேவையில்லாத தயக்கம். உறவு வட்டத்தை பெரிதாக்கிக்கொண்டே சென்றால், இந்த உலகமே நம் உறவாகிவிடும். அதுவே மகிழ்ச்சி.

Leave a Comment