• Home
  • அழகு
  • முகப்பரு வராமல் தடுக்கலாமுங்க

முகப்பரு வராமல் தடுக்கலாமுங்க

Image

பருவ வயதினருக்கு சூப்பர் டிப்ஸ்

பருவ வயதுப் பெண்களின் அழகுக்கு அச்சுறுத்தலாகத் தோன்றுவது முகப்பருக்கள்தான். அதனால் காலையில் எழுந்ததும் கண்ணாடியைப் பார்க்கும் பெண்ணுக்கு முகத்தில் பரு ஏதாவது இருந்தால் அம்புட்டுத்தான், அன்று முழுவதும் பருவைப் போக்க என்ன செய்யலாம் என்றுதான் மனம் சிந்திக்கும், என்னென்னவோ செய்வார்கள்.

முகப்பரு வந்த பின்பு சிகிச்சையைத் தேடுவதைவிட, வருவதற்கு முன்பே அதை தடுப்பதே நல்லது. ஆம், முகப்பரு  வராமல் இருக்க வேண்டும் என்றால் மலச்சிக்கல் வராத அளவுக்கு வயிற்றைப் பராமரிக்க வேண்டும். அதாவது உணவு நன்கு ஜீரணமாகி வெளியேற வேண்டும்.

அதே போன்று தலையில் பொடுகுத் தொல்லை இருக்கவே கூடாது. மேலும்,  ஹார்மோன் பிரச்சினை, நகத்தினை வளர்த்தல், முறையற்ற உணவுப் பழக்கம், உணவில் அதிக எண்ணெய் பயன்படுத்துதல் போன்ற அனைத்தையும் தடுக்க வேண்டும்.
வீட்டில் தலையணை உரை, சோப், டவல் போன்றவைகளை தனித்தனியாக தங்களுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முகப்பரு இருக்கும் ஒருவர் பயன்படுத்தும் இத்தகைய பொருட்களை இன்னொருவர் பயன்படுத்தும் போது அவருக்கும் இது பரவக்கூடும். குளிப்பதற்கும் சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும்.

முகப்பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய மென்மையான உணவுகளை உண்ண வேண்டும். பழங்கள், காய்கறிகள், கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். தண்ணீர் நிறைய பருக வேண்டும். முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொடுகுத் தொல்லைக்கு முறையான சிகிச்சை எடுத்து அதனைக் கட்டுப்படுத்த வேண்டும். அவ்வப்போது வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி சுத்தப்படுத்திவந்தால் பொடுகுத் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.

எண்ணெய் சருமம் கொண்டவர்கள் முகப்பருவை நீக்குவதற்கான ஈசி வழிகள்…

முகத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து, அவ்வப்போது துடைத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும் பலருக்கு முகப்பரு, கரும்புள்ளிகள் வந்து இம்சை செய்துவிடும். அதிலும்  எண்ணைத் தன்மை உடைய சருமத்தை உடையவர்களில் 90 சதவீதம் பேருக்கு முகப்பரு வந்துவிடுகிறது.

சாதாரண சருமம் கொண்டவர்களில் 50 சதவீதம் பேருக்கு முகப்பரு வந்துவிடுகிறது. இதில் உலர்ந்த சருமத்தைக் கொண்டவர்கள் நிலை பரவாயில்லை. இவர்களுக்கு பெரும்பாலும் முகப்பருக்கள் வருவதில்லை.

பொதுவாக வேப்பிலை தலைசிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. கொழுந்து வேப்பிலையை தண்ணீரில் அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவிவிட வேண்டும். இதனை தினமும் இரண்டு முறை செய்துவரலாம்.

முகத்திற்கு மஞ்சள் பூசுவதை முடிந்த வரை தவிர்த்து விடுங்கள். ஏனென்றால் இப்போது வரும் மஞ்சளில் அதிக அளவு ரசாயணத் தன்மை இருக்கிறது. அது பலரது முகத்திற்கும் ஒத்துக் கொள்ளாததாக இருக்கிறது. அதுபோல எலுமிச்சைச் சாறையும் தனியாக முகத்தில் தேய்த்துவிட வேண்டாம்.

சந்தன பவுடரை  பன்னீரில் குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். மூன்று மாதங்கள் தொடர்ந்து  இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் பருத் தொல்லையே இருக்காது.  முகப்பருவைக் கிள்ளிவிடுவது, முரண்பாடான அழகு சாதனங்களைப் பயன்படுத்துவது எலுமிச்சைப் பழத்தை முகத்தில் அழுத்தித் தேய்ப்பது போன்றவைகளால் முகத்தை ரணமாக்கிவிடுகிறார்கள். அதனால் எலுமிச்சை தேய்ப்பதை தவிர்க்க வேண்டும்.

Leave a Comment