வாழ்த்து மழை பொழிகிறது
இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு நடிகர் விஜய்க்கு வாழ்த்து மழை பொழிந்துவருகிறது. அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தொடங்கி ஜெயகுமார், வேலுமணி, உதயகுமார் என்று அத்தனை மாஜிக்களும் வாழ்த்தியிருக்கிறார்கள்.
பா.ஜ.க.வில் அண்ணாமலை தொடங்கி தமிழிசை வரையிலும் அத்தனை பேரும் வாழ்த்துகிறார்கள். திருமாவளவன், சீமான் போன்றவர்கள் தான் வாழ்த்துகிறார்கள் என்று பார்த்தால் காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகையும் வாழ்த்தியிருக்கிறார்.
இத்தனை பேருடைய பார்வையும் விஜய் மீது இருக்கிறது என்றால், அது அவரது அரசியல் வருகைக்காக மட்டுமே. அதுசரி, விஜய் அரசியலுக்கு வந்தால் எவ்வளவு வாக்கு வாங்குவார், அது யாருக்கு சாதகமாக இருக்கும்..?
இந்த விஷயத்தில் மூன்று பேர் விஜய்க்கு முன்னோடியாக இருக்கிறார்கள். அதாவது விஜய்காந்த், சீமான், கமல்ஹாசன் ஆகியோரே அவரது முன்னோடிகள்.
தமிழகத்தைப் பொறுத்த வரையிலும் அ.தி.மு.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் நிரந்தர வாக்கு வங்கி இருக்கிறது. இந்த இரண்டு கட்சியையும் பிடிக்காதவர்களே புதியவர்களுக்கு வழி விடுகிறார்கள். அப்படித்தான் விஜயகாந்த் வருகை கொண்டாடப்பட்டது. ஆனால், அவரும் 8 சதவிகித வாக்குகளுக்கு மேல் வாங்கவில்லை.
சீமான் இப்போது தான் அந்த அளவைத் தொட்டிருக்கிறார். கமல்ஹாசன் முதல் தேர்தலில் நல்ல வாக்கு விகிதம் வாங்கி அடுத்த தேர்தலில் கோட்டை விட்டார். ஆனால், இவர்களைப் போன்றவர்கள் வருவதால் திராவிடக் கட்சிகளின் வாக்குவிகிதம் பெரிதாகப் பாதிக்கவில்லை என்பதே உண்மை.
இப்போது விஜய் அரசியலுக்கு வந்தால் புதிய தலைமுறையினரும் மாற்றத்தை விரும்புபவர்களும் வாக்களிப்பார்கள். அப்படியெனில், விஜய் தேர்தல் அரசியலுக்கு வரும் போது மிகப் பெரிய இழப்பை சந்திக்கப் போவது சீமான் தான். அதனால் தான் இப்போதே, தன் வாக்கு சதவீத இழப்பை மறைக்க விஜய்யுடன் கூட்டணி என்று இறங்கி விட்டார் சீமான்.
ஆளும் கட்சியான திமுகவின் எதிர்ப்பு வாக்குகள் ஒரே இடத்தில் சேராமல், அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, சீமான் கட்சி என்று பிரிந்தால் விஜய் கட்சி மூன்றாவது இடத்துக்கு வரலாம். அதனால் பாதிக்கப்படப் போவது சீமான் மட்டுமே. அதேநேரம், தி.மு.க.வுக்கு இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை.
தனித்தனியாக எதிரிகள் நிற்பதால் தி.மு.க.வுக்கு வெற்றி எளிதாகவே இருக்கும்.