ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வருமா..?

Image

டாக்டர் ரோகிணி ஷாக்

உலகெங்கிலும்  கொரோனா வைரஸ் ஆதிக்கம் செலுத்தி, மக்களை  ஆட்டிப் படைத்து வருகிறது. . இந்த நிலையில், கொரோனா வைரஸுக்கும்  புற்றுநோய்க்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என சென்னை வடபழனி சூர்யா மருத்துவமனையின் மார்பக புற்றுநோய் மருத்துவர் ரோகிணியிடம் பேசினோம்.


“மார்பக புற்றுநோய் வைரஸால் உருவாவது கிடையாது. அதனால், கொரோனா வைரஸுக்கும் மார்பக புற்றுநோய்க்கும் சம்பந்தம் கிடையாது. ஆனால், கொரோனா வைரஸ் வேகமாய்ப் பரவுவதால், அனைவருமே பாதுகாப்புடன் இருக்க வேண்டியது அவசியம்” என்றவர், மார்பக புற்றுநோய் குறித்து விரிவாகப் பேச ஆரம்பித்தார்.

மார்பக புற்றுநோய்  என்றால் என்ன? இது, யாருக்கெல்லாம் வரும்?

மார்பகம் என்பது  தாய்மைக்கான ஒரு வரம். மார்பகத்தில் சின்னஞ்சிறிய அணுக்கள், திசுக்கள் உண்டு.  மாம்மரி ஹைபோபிளாசியா எனும் தாய்ப்பால் சுரப்பு உண்டாகிறது. மார்பக தசையில் உண்டாகும் கேன்சரே, மார்பக புற்றுநோய். நிறையப் பேர். பொதுவாக  பெண்களுக்கு மட்டும்தான் மார்பக புற்றுநோய்  உருவாகும் என நினைக்கின்றனர். இது தவறு. ஆம்,  ஆண்களுக்கும் உண்டாகலாம். ஆனால், இது ஆண்களுக்கு மிகவும் குறைவான சதவிகிதத்திலே பாதிக்கிறது. பெண்களில் நூறு பேருக்கு இந்த நோய் இருந்தால், ஆண்களில் இரண்டு பேருக்கு ஏற்படலாம். தற்போது இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்படுவது,  மார்பக புற்றுநோய்தான். இதனை அடுத்துத்தான் பல்வேறு  புற்றுநோய்கள் உள்ளன.  நம் இந்தியாவில் மார்பக புற்றுநோயால், 1 வருடத்துக்கு 80 ஆயிரம் பெண்கள் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறார்கள். வருடத்துக்கு ஒண்ணே முக்கால் லட்சம் பெண்கள் இந்த நோய்க்கு ஆளாகிறார்கள். அதில் 50 – 60 சதவிகிதம் பெண்கள்  உயிரிழக்கிறார்கள்.  உலக நாடுகளின் சராசரியைவிட  இந்தியாவில் அதிக மரணம் உண்டாகிறது.


ஆண்களுக்கு மார்பக புற்றுநோய் எந்த வயதில் வருமா? அவர்களுடைய அறிகுறிகள் என்ன? அவர்களும் பெண்களைப் போல் வீட்டில் சுயபரிசோதனை செய்து கொள்ளலாமா?

பெண்களுக்கு மாதவிலக்கு நிற்கும் சமயத்தில் மார்பக புற்றுநோய் வருவதைப் போன்று ஆண்களுக்கு இந்த நேரத்தில்தான் வரும் என்று சொல்ல முடியாது. ஆனால், இதற்கு ஆண்களுக்கு குறிப்பிட்ட வயதுவரம்போ, அறிகுறியோ கிடையாது. பொதுவாக, 50 – 55 வயதுக்குப் பிறகு வரலாம். ஆனால், கண்டிப்பாக சிறுவயதில் வர வாய்ப்பில்லை. ஆண்களில் சிலர், ஒரு மார்பகத்தில் வலி இருப்பதாகச் சொல்வார்கள். சிலர், கட்டிபோன்று இருப்பதாகச் சொல்வார்கள். அவர்களுக்கும் தோல் சிவந்துபோகலாம் அல்லது அக்குளில் கட்டி இருக்கலாம். எப்படி பெண்களுக்கு மேற்சொன்ன அறிகுறிகள் இருக்குமோ, அதுபோன்றுதான் ஆண்களுக்கும் இருக்கும். அதுபோல்தான் சிகிச்சையும் இருக்கும். இதனை மருத்துவரிடம் தெரிவிப்பதற்கு நிறைய ஆண்கள் சங்கோஜப்படுகிறார்கள். அதை, அவர்கள் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது. கண்டிப்பாக, அதற்கு அவர்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டே ஆக வேண்டும். பெண்களைப்போல் ஆண்களும் கண்ணாடி முன் நின்று தங்களது மார்பகங்களைப் பரிசோதனை செய்துகொள்ளலாம். ஆனால், மருத்துவர்கள் அதுபோல் அவர்களைப் பரிசோதிக்கவிடுவதில்லை. மார்பில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் உடனே மருத்துவரைப் பார்ப்பதே நலம். குறிப்பாக, பெண்களுக்கு 20 வயது முதல் மார்பக பரிசோதனை பார்க்கச் சொல்வதைப்போல் ஆண்களுக்குத் தேவையில்லை.


பொதுவாக  எந்த வயதில் மார்பகப் புற்றுநோய் வரும்? இதன் அறிகுறிகள் என்ன? வீட்டிலேயே சுயபரிசோதனை செய்துகொள்வது எப்படி?

நுரையீரல் அல்லது கிட்னியில் புற்றுநோய் பெரும்பாலும், வயது முதிர்வினால் ஏற்படுகிறது. அதாவது, 40 முதல் 50 வயதுக்கு மேல்தான் தென்படுகிறது. மார்பக புற்றுநோயும் அப்படித்தான். ஆனால், கடந்த 15 -20 ஆண்டுகளில் நவீன டெக்னாலஜியின் வளர்ச்சி காரணமாக, சிறு வயதிலேயே மார்பக புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது.
மார்பகம் அல்லது அக்குளின் அடிப்புறத்தில் கட்டி போன்று தோன்றும். இது, 2 சென்டி மீட்டருக்கு மேல் இருந்தால் கைகளுக்குத் தட்டுப்படும். அதற்கு  குறைவாக அளவில் இருந்தால் தெரியாது. குளிக்கும்போது அல்லது உடையணியும்போது அது தற்செயலாக தெரியவரும். ஆனால், கட்டியாக இருந்தாலும்  வலி இல்லை என்றால், அதனை கண்டுகொள்ளமாட்டார்கள். அது தவறான விஷயம். எந்த கட்டியாக இருந்தாலும் மருத்துவரிடம் காண்பித்து தெளிவு பெறுவதே நல்லது.  ஏனென்றால், வலி மட்டுமே அறிகுறி இல்லை.

பொதுவாக  கட்டி சிறிதாக இருக்கும்போது வலி தெரியாது. தவிர, மார்பு காம்பில் ரத்தமோ, நீர்த்துளியோ இருக்கும். மார்பின் அளவில் வித்தியாசம் இருக்கும். தோல் சிவந்திருத்தல் அல்லது புதிதாக மரு போன்று உருவாகுவதும் மார்பக புற்றுநோயின் பொதுவான அறிகுறிகள் ஆகும். அதனால், 30 வயதில் பெண்கள் மார்பக செக்கப் எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக, அவர்கள் வீட்டிலேயேகூட செக்கப் செய்துகொள்ளலாம். அது மிகவும் சுலபம்தான்.பெண்களுக்கு மாதவிலக்கு முடிந்து ஒரு வாரம் கழித்து வீட்டுக் கண்ணாடியின் முன்பு, இரண்டு மார்பகங்களைத் தொட்டுப் பார்த்து பரிசோதனை செய்துகொள்வதுடன், மேற்கண்ட அறிகுறிகள் இருக்கிறதா என்பதையும் பார்த்துக்கொள்ளலாம். அப்படி ஏதாவது ஒரு வித்தியாசம் தெரிந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். மாதம் ஒரு முறை இந்த பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

சிறுவயது பெண்களுக்கும் மார்பக புற்றுநோய் வருமா? அது, எந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்?

சிறுவயதிலும் பெண்களுக்கு  மார்பக கட்டி வர வாய்ப்பிருக்கிறது. ஆனால், அது  பெரும்பாலும் மார்பக புற்றுநோயாக இருக்காது.  ஆனால், இன்று இந்தியாவில் சிறுவயதிலேயே மார்பக புற்றுநோய் அதிகம் தென்படவே செய்கிறது. அதனால் சிறுவயதுப் பெண்களும் உடல் எடையை நார்மலாக வைத்துக்கொள்ள வேண்டும். இன்றைய குழந்தைகள் 10 – 12 வயதுக்குள்  பருவம் எய்திவிடுகின்றனர்.  காரணம், அவர்கள் சாப்பிடும் உணவு முறை. அதனால் அவர்களுக்கு அதிகமாக ஹார்மோன்  சுரக்கத் தொடங்கிவிடுவதுடன், உடல் பருமனும் அதிகரித்துவிடுகிறது. ஆகையால், சிறு வயதிலிருந்தே உணவை சரிவிகிதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதுதவிர, 20 வயது இளம்பெண்களும் அவர்களுடைய மார்பகத்தை அவர்களே செக்கப் செய்துகொள்ள வேண்டும். இதில் மாற்றம் இருந்தால் மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.

பெண்களுக்கு எந்தெந்த வழிகளில் மார்பக புற்றுநோய் வருகிறது? மரபு வழியாகவும் வருவதாகச் சொல்லப்படுகிறதே?

வருமுன் காப்போம் என்ற ஆரோக்கிய மொழி, இந்த புற்றுநோய்க்கு நூறு சதவிகிதம் பொருந்தும். காரணம், நாம் உண்ணும் உணவாலும், போதிய உடற்பயிற்சி இல்லாததாலும் இந்த நோய் வர வாய்ப்பிருக்கிறது. மரபு வழியில் இந்தியாவில் நிறையப் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள்.  உடல் எடைகூடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உடல் உழைப்பு அதிகம் இருக்க வேண்டும். உடல் எடையைக் கூட்டாமல் இருக்க உண்ணும் உணவில் எண்ணெய் குறைவாக இருக்க வேண்டும்.  காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை அதிகமாகச்  சாப்பிட வேண்டும். வாரத்தில் ஐந்து நாள் கட்டாயம் அரை மணி நேரம் ரிஸ்க் வாக்கிங் செல்ல வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை கிராமங்களில் மார்பகப் புற்றுநோய் குறைவாக இருக்கிறது. காரணம், அங்குள்ள பெண்களுக்கு உடல் உழைப்பு அதிகம். அதுபோல் உணவு விஷயத்திலும் கட்டுப்பாட்டுடன் இருக்கின்றனர். ஆனால், நகரத்தில் இருக்கும் பெண்களுக்கு இது இரண்டுமே குறைவு. அடுத்து சுற்றுச்சூழலும் ஒரு பிரச்சினையாக உள்ளது.
பொதுவாக பெண்களுக்கு கல்யாணம் காலம் கடந்து நடப்பதால், குழந்தைப் பிறப்பு தள்ளிப்போகிறது. குழந்தை பிறப்பு 30 வயதுக்கு மேல் இருந்தால் அதுவும் ஒரு காரணம்தான். பிறந்த குழந்தைக்கு குறைந்தபட்சம், ஒருவருடமாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும். தாய்ப்பால் குறைவாகக் கொடுத்தாலும், கொடுக்காமல் இருந்தாலும் பிற்காலத்தில் மார்பக புற்றுநோய் வருவதற்குக் காரணமாகிவிடும். தாய்ப்பால் கொடுப்பது, குழந்தை மற்றும் தாய் இருவருக்குமே நல்லது. அதுபோல் மாதவிலக்கை நிறுத்துவதற்கு மாத்திரை சாப்பிடுவதும் ஆபத்து. ஏதேனும் ஒருசில  மாதங்கள் சாப்பிடுவது என்றால் சரி. அடிக்கடி, நீண்டகாலத்துக்கு சாப்பிடுவது ரிஸ்க்கான விஷயம்.

Leave a Comment