தைராய்டு கண்டுபிடிக்க என்ன வழி..?

ரேடியாலஜி நிபுணர் முரளி


நம் உடல் உறுப்புகளில் அவ்வப்போது ஏதேனும் பாதிப்பு வருவது சகஜம்தான். அப்படி ஏற்படும் பாதிப்புகளே நோய் எனப்படுகிறது. மனிதருக்கு ஏற்படும் நோயின் தன்மையை துல்லியமாக, சரியான முறையில் கண்டறிவது அல்லது கணிப்பதுதான் சரியான சிகிச்சைக்கு வழி வகுக்கும். இன்றைய அறிவியல் புரட்சியால் கண்டறியப்பட்டுள்ள நவீன மருத்துவ தொழில்நுட்பக் கருவிகள் மூலம் நோய்களை துல்லியமாக கண்டறிய முடிகிறது. அதனால் நோயைக் குணப்படுத்துவது எளிதாகிறது. நோய்களைக் கண்டறிவதற்கு ஆதாரமாக இருப்பது கதிரியக்கவியல் (Radiology) துறை. இந்த ரேடியாலஜியின் முக்கியத்துவம் பற்றி சென்னை வடபழனி சூர்யா மருத்துவமனை ரேடியாலஜி நிபுணர் முரளி அவர்களிடம் பேசினோம்.

ரேடியாலஜி என்றால் என்ன? ரேடியாலஜிஸ்ட் துறை, எத்தகைய நோய்களைக் கண்டறிய பயனுள்ளதாக இருக்கிறது?

ரேடியாலஜி என்பது நுண்ணோக்கு அறிவியல். இதில் முக்கியமான சாதனங்கள் என்னவென்றால் சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், அல்ட்ரா சவுண்டு ஸ்கேன், எக்ஸ்ரே.  இது தவிர பெட்ஸ் ஸ்கேன், பெட்ஸ் எம்.ஆர்.ஐ., பெட்ஸ் சிடி உள்ளிட்ட அனைத்தும் சேர்ந்ததுதான் ரேடியாலஜி என்ற துறை. இது, ரேடியாலஜி அண்டு இமேஜிங் சயின்ஸ் என்று கூறப்படும்.
இந்த துறை மூலம் உடலில் உள்ள அனைத்து பாகங்களின் நோய்களையும் கண்டறிய முடியும். முக்கியமாக மூளை, இதயம், குடல், சிறுநீரகம், கைகால்கள், எலும்புகள், கண்கள் என உடல் பாகம் முழுவதும் இருக்கும் வியாதிகளை துல்லியமாகக் கண்டறிய முடியும்.  உடலின் ஒவ்வொரு பாகத்தின் குறைபாடுகளைக் கண்டறியவும் தனித்தனி கருவிகள் உள்ளன.
மூளை சம்பந்தப்பட்ட பிரச்னைகளைக் கண்டறிய எம்ஆர்ஐ ஸ்கேன் உதவுகிறது. இதில் கதிர்வீச்சு இல்லை. காந்த அலைகளைப் பயன்படுத்தி இந்த பரிசோதனை செய்யப்படுகிறது. அல்ட்ராசவுண்ட் பரிசோதனை மூலம் வயிறு, மார்பகம் மற்றும் தொண்டைப் பகுதியிலுள்ள தைராய்டு போன்ற பிரச்னைகளைக் கண்டறியலாம். ரத்தக் குழாய்களில் செல்கிற ரத்தத்தின் வேகம் எப்படி உள்ளது என்பதை டாப்ளர் அல்ட்ரா சவுண்டு மூலம் கண்டறியலாம்.
எம்ஆர்ஐ மூலமாக மூளை, எலும்பு மூட்டுகளில் உள்ள பிரச்னைகளைக் கண்டறியலாம். விபத்துகளின்போது மூளையில் ரத்தக்கசிவு உள்ளதா என்பதைக் கண்டறிய சிடி ஸ்கேன் மிகவும் உதவியாக இருக்கிறது. இதன் மூலம் 5 முதல் 6 விநாடிகளில் மூளையை முழுவதுமாக ஸ்கேன் செய்துவிடலாம். கழுத்திலுள்ள தைராய்டு பிரச்னைக்கு அல்ட்ராசவுண்ட், சிடி ஸ்கேன் செய்யலாம்.
கண் சார்ந்த பிரச்னைகளைக் கண்டறிய அல்ட்ராசவுண்ட் மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யலாம். மூக்கு மற்றும் காது சார்ந்த பிரச்னைகளைக் கண்டறிய சிடி ஸ்கேன் செய்யலாம். சைனஸ் பிரச்னையைக் கண்டறிய சிடி ஸ்கேன் எடுக்கலாம். தசை வீக்கம், தசை பிடிப்பு உள்ளிட்டவற்றுக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் மிகவும் சிறந்தது.

அதுபோல் இதயத்தில் வரும் வியாதிகளை  சிடி ஸ்கேன் மூலம் கண்டுகொள்ள முடியும். இதை அரைமணி நேரத்தில் கண்டுபிடித்துவிட முடியும். இதயத்தில் உள்ள ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் சீராக உள்ளதா என்பதை சிடி ஸ்கேன் மூலம் கண்டறியலாம். கார்டிக் எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம் இதயம் மற்றும் அதன் வால்வுகள் சரியாக உள்ளதா, சரியாக செயல்படுகிறதா என்பதைக் கண்டறியலாம். நியூக்ளியர் மெடிசின் மூலமாகவும் இதயத்தின் செயல்பாடுகளைக் கண்டறியலாம்.


சிறுநீரகத்தில் உள்ள கற்களைக் கண்டறிய முன்னர் எக்ஸ்ரே பயன்படுத்தப்பட்டது. ஆனால் இப்போது எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்ட் ஆகியவற்றைத் தாண்டி சிடி ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்வதால் 99 சதவிகித பிரச்னைகளைக் கண்டறியலாம். சிறுநீரகக் கற்கள்  எங்கே, எப்படி, என்ன அளவில் உள்ளது என்பதை இதன் மூலம் கண்டறியலாம். மேலும் சிறுநீரகத்தில் ஏற்படும் தொற்றுகள், கட்டிகள் மற்றும் சீழ்பிடித்தல் பிரச்னைகளையும் இதன்மூலம் கண்டறியலாம்.


பொதுவாக வயிறு தொடர்பான பிரச்னைகளுக்கு சிடி ஸ்கேன் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பித்தப்பையிலுள்ள கற்களைக் கண்டறிய அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் சரியானதாக இருக்கும். கல்லீரலின் செயல்பாடுகள் சரியாக உள்ளதா, அதில் கல், கட்டிகள், தொற்றுகள் ஏதாவது உள்ளதா என்பதை அல்ட்ராசவுண்ட், எம்ஆர்ஐ மற்றும் சிடி ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம்.


கணையத்தின் செயல்பாடுகள் மற்றும் பிரச்னைகளைக் கண்டறிய எம்ஆர்ஐ மற்றும் சிடி ஸ்கேன் செய்யலாம். சிறுநீர்ப் பையில் உள்ள கட்டிகள், தொற்றுகள் போன்றவற்றைக் கண்டறிய சிடி ஸ்கேன் உதவுகிறது. ஆண்களுக்கு ப்ராஸ்டேட் சுரப்பியல் ஏற்படும் புற்றுநோய், தொற்று மற்றும் அது பெரிதாவது போன்றவற்றை எம்ஆர்ஐ மற்றும் அல்ட்ராசவுண்ட் மூலம் கண்டறியலாம்.

ரேடியாலஜியில் புதிய தொழில்நுட்பங்கள் யாவை? ரேடியாலஜி பரிசோதனைகள் எதற்காகச் செய்யப்படுகிறது?

1980ல் எக்ஸ்ரே மட்டுமே புழக்கத்தில் இருந்தது. 1990ல் சிடி ஸ்கேனும் எம்ஆர்ஐ ஸ்கேனும் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்குப் பிறகு 1995 – 2000 காலகட்டத்தில், பெட் சிடி ஸ்கேனும், பெட் எம்ஆர் கருவியும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் எம்ஆர்ஐ என்பது மிகவும் அட்வான்ஸ் ஆனது. இது, 2010ல் கண்டுபிடிக்கப்பட்டது. இதில், இண்டர்வென்சி ரேடியாலஜி என்ற துறையும் அட்வான்ஸாக உள்ளது.

இதற்குமுன்னர் மார்பக புற்றுநோய் கட்டியை அறுவைச்சிகிச்சை மூலமே அகற்ற முடியும். ஆனால், இன்றைய நவீன கருவிகள் மூலம் துல்லியமாக ஐந்து நிமிடங்களிலேயே அழித்துவிட முடியும். அத்துடன் நோயாளிகளையும் மூன்றே நாளில் வீட்டுக்கு அனுப்பிவைக்க முடியும்.
தவிர 2030ம் ஆண்டுகளில் இதைவிட இன்னும் புதிய தொழில்நுட்ப கருவிகள் அட்வான்ஸாய் வரக்கூடும். இதில் இன்னும் கண்டுபிடிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. தொடர்ந்து இதில் நிறைய கண்டுபிடிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.  

Leave a Comment